மார்ச் 18

அர்ச். சிரில். அதிமேற்றிராணியார் (கி.பி. 386). 

சிரில் ஜெருசலேமில் பிறந்து வேதசாஸ்திரங்களைக் கற்றுக் குருப் பட்டம் பெற்று சத்திய வேதத்தை மிக கவனத்துடன் போதித்து வந்தார்.

சில காலத்திற்குப்பின் ஜெருசலேம் நகருக்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார்.

மறு வருடத்தில் மிகவும் பிரமாண்டமான சிலுவையொன்று வெகு பிரகாசமாய் ஆகாயத்தில் காணப்பட்டு கபால மலையின் மேலிறங்கி ஜோதிமயமாய் அநேக மணி நேரம் பிரகாசிப்பதை அர்ச். சிரிலும், ஜெருசலேமிலுள்ள சகல பிரஜை களும் கண்டு அதிசய பிரமை கொண்டார்கள்.

இதனால் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியடைந்து, அநேக அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.

அக்காலத்தில் உரோமைச் சக்கரவர்த்தியும் வேதத் துரோகியு மான ஜூலியான் மேற்கூறிய அதிசய சம்பவத்தால் கோப வெறிகொண்டு கர்த்தருடைய தீர்க்கத்தரிசனத்தை பொய்யாக்கி சத்திய வேதத்தை அழிக்கும் கருத்துடன் அத்தேசத்தில் பரவியிருந்த யூதர்களையும், புத்த மதத்தாரையும் ஜெருசலேமுக்கு வரவழைத்துப் பாழான தேவாலயத்தைக் கட்டும்படி உத்தரவு கொடுத்து அதன் செலவுக்காக ஏராளமான திரவியத்தை அவர்களுக்குக் கொடுத்தான்.

கல்மேல் கல் நிற்காதென்னும் நம் கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தை சிரில் விசுவாசித்து, ஜூலியானுடைய வெறிபிடித்த முயற்சியைக் கண்டு நகைத்தார்.

யூதர் ஆயிரக்கணக்கான வேலைக்காரரையும் கூலியாட்களையும் சேகரித்து வேலை துவக்கியபோது, அஸ்திவாரத்தினின்று புறப்பட்ட அதிசயமான அக்கினியாலும் பூமி அதிர்ச்சியாலும் அநேக வேலையாட்கள் மாண்டதைக் கண்டு இராயனும் மற்றவர்களும் வெட்கி அந்த வேலையை விட்டுவிட்டார்கள்.

இதைக் கண்ட கணக்கில்லாத அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள். ஜூலியானும் ஒரு சண்டையில் நிர்ப்பாக்கியனாய் மாண்டான். அர்ச். சிரிலும் அர்ச்சியசிஷ்டவராகக் காலஞ் சென்றார்.

யோசனை 

நாம் சத்திய வேதத்தின் படிப்பினையைத் தளராத விசுவாசத்துடன் நம்புவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். அலெக்சாண்டர். மே.வே.
அர்ச். எட்வர்ட். இராஜா,வே.
அர்ச். ஆன்செல்ம், மே.
அர்ச். பிரிடியன், மே.