ஜுலை 17

அர்ச். அலெக்சிஸ் - துதியர் (5-ம் யுகம்) 

தனவந்தரும் மேன்குலத்தாருமான தாய் தகப்பனுக்கு ஒரே குமாரனான அலெக்சிஸ் உத்தம கிறீஸ்தவர்களான தம் பெற்றோருடைய நன் மாதிரிகையையும் ஞானப் படிப்பினையையும் பின்பற்றி இவ்வுலக நன்மைகள் எல்லாம் வீண் என்றெண்ணி புண்ணிய வழியில் நடந்து, உலகத்தைத் துறந்து தூர தேசத்திற்குச் சென்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய நினைத்திருந்தார். 

ஆனால் தம் தாய் தகப்பனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி புண்ணியவதியான ஒரு சீமாட்டியை மணமுடித்துக்கொண்ட அன்றிரவே தேவ ஏவுதலால் தன் ஊரை விட்டு கீழ்த் திசையிலுள்ள எடேசா என்னும் நகருக்குச் சென்று பரதேசியாய் ஜீவித்து வந்தார். 

அவரைத் தேடிப் பார்க்கும்படி அவருடைய தந்தையால் அனுப்பப்பட்ட சிலர் அவர் இருந்த ஊருக்குப் போய் அவரைப் பார்த்தபோதிலும் அவர் இன்னாரென்று கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டார்கள். 

அலெக்ஸிஸ் அவ்வூரில் ஒரு சிறு குடிசையில் ஜீவித்து, பிச்சை எடுத்து உண்டு தேவதாயார் பீடத்திற்கு முன் இடைவிடாமல் ஜெபித்து வந்தார். ஆனால் அவர் மூலமாய் நடந்த புதுமையால் அவ்வூரார் அவரைப் பெரிதாக மதித்ததினால் அவர் கப்பலேறி வேறு ஊருக்குப் புறப்பட்டார். 

கப்பல் புயல் காற்றில் அகப்பட்டு உரோமையில் கரை சேர்ந்தது. அலெக்சிஸ் அவ்வூரிலுள்ள தன் தந்தையின் அரண்மனைக்குச் சென்று பரதேசியான தனக்கு தங்க இடம் கொடுக்கும்படி மன்றாடியதினால், அவர் தந்தை அவரை தன் மகன் என்று அறியாமல் அவருக்கு இடம் கொடுத்தார். 

அவ்விடத்தில் அவர் வேலைக்காரர்களால் தொந்தரவு செய்யப்பட்ட போதிலும் அதைச் சட்டை செய்யாமல் அர்ச்சியசிஷ்டவராய் வாழ்ந்தார். அவர் மரிப்பதற்கு முன் தன் சரித்திரத்தை ஒரு சீட்டில் எழுதி வைத்துவிட்டு மரணமானார். 

அவருடைய தாய் தகப்பன் அந்த சீட்டை வாசித்தபின், அந்தப் பரதேசி தங்கள் குமாரனென்று அறிந்து சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தார்கள்.

யோசனை 

செல்வம், பெயர், பெருமை முதலிய உலக நன்மைகள் முற்றிலும் நிலையற்றவை என்றெண்ணி, அவைகளில் பற்றுதல் வைக்காமலிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஸ்பெராதுஸும் துணை. வே.