ஜுலை 16

உத்தரியமாதா திருநாள் 

ஆதிகாலத்தில் எலியாஸ் தீர்க்கதரிசி கார்மேல் மலையில் தபஞ் செய்யும் காலத்தில், நீல வண்ணத்தில் சிறு மேகம் எழும்பி, மேலே பரவி, பெரும் மழை பெய்ததைக் கண்டார். 

இனி தேவமாதா உலகத்திற்கு அளிக்கவிருக்கும் நன்மைக்கு இது அடையாளமாக இருந்தது. எலியாஸுக்குப்பின் அவர் சீஷர்களும் வேறு புண்ணிய ஆத்துமாக்களும், இவர்களுக்குப்பின் வேறு முனிவரும் கார்மேல் மலையில் வசித்து தவம் புரிந்து வந்தார்கள். 

கர்த்தர் மோட்ச ஆரோகணமானபின் இவர்கள் ஞானஸ்நானம் பெற்று அம்மலையில் வசித்து வந்தார்கள். தேவமாதா உயிரோடு இருக்கும்போதே அப்பரம் நாயகியைக் குறித்து கார்மேல் மலையில் ஒரு கோவிலைக் கட்டி அதில் சர்வேசுரனைப் பிரார்த்தித்து வந்தார்கள். இவர்கள் கன்னிமரியாயின் கார்மேல் சபையார் என்று அழைக்கப்பட்டார்கள். 

சிலர் இதை அழிக்கும்படி முயற்சி செய்கையில், தேவதாயார் அர்ச்.சைமன்ஸ்டாக் என்பவருக்கு தரிசனையாகி ஒரு உத்தரியத்தை அவருக்கு காட்டி, இந்த உத்தரியத்தை அணிந்துக் கொள்வோர் சாகுந் தறுவாயில் நரக நெருப்புக்குத் தப்பித்துக்கொள்வார்கள் என்று அறிவித்தார்கள். 

மேலும் பாப்பரசர்களும் இச்சபையை அங்கீகரித்து இச்சபையில் சேர்கிறவர்களுக்கு அநேக ஞானப் பலன்கள் கிடைக்குமென்று அறிவித்தனர். 

கார்மேல் உத்தரியத்தினாலுண்டான அநேக புதுமைகளைக் கண்ட விசுவாசிகள் உத்தரிய சபையில் பெயர் கொடுத்து திரு உத்தரியத்தைப் பக்தியுடன் அணிந்துகொண்டார்கள். அரசரும் பிரபுக்களும் பிரஜைகளும் இச் சபையில் சேர்ந்து மோட்ச இராக்கினியின் விசேஷ உதவியைப் பெற்று வருகிறார்கள். 

தேவமாதா அர்ச். சைமன்ஸ்டாக் என்பவருக்கு 1245-ம் வருடம் ஜூலை மாதம் 16-ம் நாள் தரிசனையானதினால், இத்தேதியில் உத்தரிய மாதா திருநாள் கொண்டாடப்படுகிறது.

யோசனை 

நாமும் திரு உத்தரியத்தைத் தரித்துக்கொண்டு அதன் கடமைகளைப் பிரமாணிக்கமாக அனுசரிப்போமாக..

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். எயுஸ்தாக்கியுஸ், பிதா.
அர்ச். எலியெர், வ.