ஜுலை 18

அர்ச். சிம்போரோசம்மாளும் அவளுடைய ஏழு குமாரரும் - வேதசாட்சிகள் (கி.பி. 120) 


சக்கரவர்த்தியின் பெரிய உத்தியோகஸ்தரான தன் கணவன் வேதசாட்சி முடி பெற்றபின் சிம்போரோசா தன் 7 பிள்ளைகளையும் நன்னெறியில் வளர்த்து தனக்குரிய திரண்ட செல்வத்தை பிறர் சிநேகக் காரியங்களுக்கு உபயோகித்து, அநேக அஞ்ஞானிகளைச் சத்திய வேதத்தில் சேர்த்தாள். 

அக்காலத்தில் சக்கரவர்த்தியான ஆதிரியன் மகா கம்பீரமான மாளிகை ஒன்றைக் கட்டி, அதில் பிரவேசம் செய்வதற்குமுன் தன் தேவர்களுக்குப் பலி செலுத்தி, அவர்களிடம் தேவ விடை கேட்கும்படி கட்டளையிட்டான். 

பூசாரிகள் அவ்வாறு செய்தபோது, சிம்போரோசாவும் அவளுடைய 7 பிள்ளைகளும் தங்கள் தேவனை மன்றாடி, எங்களை வாதித்துக்கொண்டு வருகிறார்களென பசாசு கூறினது. உடனே சக்கரவர்த்தியின் கட்டளைப்படி அவர்கள் பிடிபட்டு இராயனுக்கு முன் நிறுத்தப் பட்டு, சத்திய வேதத்தை மறுதலித்து நாட்டுத் தேவர்களுக்கு ஆராதனை செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள். 

ஆனால் அவர்கள் அதற்கு சம்மதியாமல் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்கள். இராயன் சினங்கொண்டு சிம்போரோசாவை நிஷ்டூரமாய் உபாதித்து நெருப்பில் போட்டு சுட்டெரிக்கும்படி கட்டளையிட்டான். 

ஏழு சகோதரரில் மூத்தவரான க்ரெசன்ஸ் என்பவர் குரல்வளை அறுக்கப்படவும், ஜூலியன் என்பவர் நெஞ்சில் குத்திக் கொல்லப்படவும், நேமேசியுஸ் என்பவர் ஈட்டியால் ஊடுருவப்படவும், பரிமாற்றியுஸ் என்பவர் வயிற்றில் குத்தப்படவும், ஜூஸ்டின் என்பவர் முதுகில் குத்தப்படவும், ஸ்டாக்டேயுஸ் என்பவர் விலா பக்கத்தில் குத்தி ஊடுருவப்படவும், யுஜெனியுஸ் என்பவர் இரண்டாகத் துண்டிக்கப்படவும் கொடுங்கோலன் கட்டளையிட்டான். 

இந்த வேதசாட்சிகள் இவ்விதமாய் தங்கள் வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மோட்ச முடி பெற்றார்கள்.

யோசனை 

பிள்ளைகளே, நீங்களும் புண்ணியவாளரான உங்கள் தாய்மாரைப் பின்பற்றி அவர்களுடைய நற்போதனைக்குச் செவிசாய்ப்பீர்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். கெமிலஸ், து. 
அர்ச். பிலாஸ்திரியுஸ், மே.
அர்ச். அர்னுால், மே
அர்ச். ப்ரெடெரிக், வே.