ஜுலை 15

அர்ச். ஹென்றி - சக்கரவர்த்தி (கி.பி. 1024) 

பவேரியா தேசத்து அரசனுடைய குமாரனான ஹென்றி சிறுவயதிலேயே புண்ணிய வழியில் நடந்து வந்தார். இவர் ஜெர்மனி தேசத்துக்கு சக்கரவர்த்தி யாகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அத்தேசத்தில் நீதியைப் பரிபாலித்து சத்திய வேதம் பரவச் செய்வதற்கான முயற்சியெல்லாம் செய்துவந்தார். 

தமது தேசத்தின் மீது படையெடுத்த அஞ்ஞானிகளான சத்துருக்களை ஜெயித்து அவர்களுக்கு வேதம் போதிக்கும்படி குருக்களை அனுப்பி வைத்தார். தம் தேசமெங்கும் சிறந்த தேவாலயங்களையும் துறவற மடங்களையும் மருத்துவ மனைகளையும் கட்டுவித்து அவைகளுக்கு வேண்டிய திரவியங்களையும் வைத்தார். 

இவர் பலமுறை உரோமைக்குத் திருயாத்திரை செய்து பரிசுத்த பாப்பரசருக்குத் திரண்ட திரவியத்தைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார். இவர் சுக செல்வம் நிறைந்த அரண்மனையில் வசித்தும் அடிக்கடி ஜெபத் தியானங்களைப் புரிந்து ஒருசந்தி உபவாசமாயிருந்து ஒரு துறவியைப் போல நடப்பார். 

தன்னுடைய தவறுகளை எடுத்துக் காட்டுகிறவர்களை சிநேகித்து அவர்களுக்கு கொடைகளை அளிப்பார். ஒரு மேற்றிராணியார்மேல் கூறப்பட்ட குறையை இவர் நம்பி, அவர் மீது மனத்தாங்கலாயிருந்தார். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று அறிந்தபின் அவர் பாதத்தில் விழுந்து தன் குற்றத்தை மன்னிக்கும்படி மன்றாடினார். 

இவர் ஏழை எளியவர்கள் மட்டில் தயவு கூர்ந்து தாராளமாய் தர்மம் புரிவார். புண்ணியவாளரான இந்த தர்ம இராஜா தம் தேசமெங்கும் சத்திய வேதம் செழித்தோங்கச் செய்து உத்தம கிறீஸ்தவராய் வாழ்ந்து, தாம் சாகுந் தறுவாயில் தம் இராணியின் உறவினர்களை வரவழைத்து அவர்களுக்கு அவளைக் காட்டி, நான் மணமுடித்துக்கொண்ட கன்னிகையை கன்னிகையாகவே உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கிறேன் என்று கூறி, மோட்ச முடியை சுதந்தரித்துக் கொண்டார்.

யோசனை

நமது குற்றங் குறைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறவர்களை நிந்தியாமல் விருப்பத்துடன் நம்மால் பொல்லாப்புக்குள்ளானவர்களுக்குப் பரிகாரம் செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ப்ளெச்செலம், மே. 
அர்ச். ஸ்விதின், மே.