ஜுலை 14

அர்ச். போனாவெந்துார் - மேற்றிராணியார் (கி.பி. 1274) 

இவர் சிறுவயதில் வியாதியாய் விழுந்தபோது ஐந்து காய பிரான்சீஸ்கு இவரை அற்புதமாய்க் குணப்படுத்தி, ஜான் என்னும் பெயரை மாற்றி அதிர்ஷ்டம் என்னும் பெயருள்ள போனாவெந்துார் என்னும் பெயரை இவருக்கு வைத்தார். 

இவருடைய புத்திக் கூர்மையைக் கண்ட இவருடைய ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். போனாவெந்துார் சகல சாஸ்திரங்களையும் படித்து ஐந்து காய பிரான்ஸிஸ்கு சபையில் சேர்ந்து சன்னியாச வார்த்தைப்பாடு கொடுத்து, கடின ஒருசந்தி உபவாசத்தாலும் ஜெப தபத்தாலும் வெகு காலம் தயாரிப்பு செய்து குருப்பட்டம் பெற்றார். 

இவர் பாடுபட்ட சுரூபத்திற்கு முன்பாக முழந்தாளிலிருந்து கண்ணீர் சிந்தி கர்த்தருடைய திருப்பாடுகளைத் தியானிப்பார். இவர் காலத்திலிருந்த அர்ச். தோமாஸ் ஒருநாள் இவரைப் பார்த்து இவ்வளவு சாஸ்திரங்களை எப்படிக் கற்றறிந்தீர் என்று வினவ, போனாவெந்துார் பாடுபட்ட சுரூபத்தைக் காட்டி, இப்புத்தகத்தில் கற்றுக்கொண்டேன் என்றார். 

இவர் பிரான்சிஸ்கு மடத்திற்கு அதிசிரேஷ்டராக தெரிந்துகொள்ளப்பட்டு அதை மகா பிரமாணிக்கத்துடன் நடத்தினார். அதிசிரேஷ்டராயிருந்தும் மடத்திலுள்ள தாழ்ச்சிக்குரிய வேலைகளை சந்தோஷத்துடன் செய்து வருவார். 

அவர் கர்தினால் பட்டத்திற்கு உயர்த்தப்பட்டபோது அந்த மகிமைப் பட்டத்தின் சின்னமாகிய சிவப்புத் தொப்பியை அவருக்குக் கொடுக்கும்படி மடத்திற்குச் சென்ற இரு கர்தினால்மார்கள் அவர் சமயலறையில் பீங்கான் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள். 

இவர் ஆத்தும இரட்சண்ய வேலையை ஊக்கத்துடன் செய்து அரசராலும் பிரபுக்களாலும் உயர்வாக எண்ணப்பட்டு தபத்திலும் ஒருசந்தியிலும் ஜெபத்திலும் ஈடுபட்டு சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து பாடுபட்ட சுரூபத்தைக் கையில் ஏந்தி தன் ஆத்துமத்தை தன் சிருஷ்டிகர்த்தாவின் கையில் ஒப்படைத்து நித்திய ஆனந்தத்தைச் சுதந்தரித்தார்.

யோசனை

நாமும் பாடுபட்ட சுரூபத்தை சந்தோஷத்திலும் துக்கத்திலும் தியானிப் போமாகில் கர்த்தருடைய திருப்பாடுகளால் ஆறுதல் அடைவோம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஈடஸ், மே.