பிப்ரவரி 15

அர்ச். பாஸ்தினுஸும் ஜோவித்தாவும். வேதசாட்சிகள் (கி.பி. 121)


கூடப்பிறந்தவர்களான இவ்விரு சகோதரர்களும் புண்ணியத்திலும் படிப்பிலும் சிறந்தவர்களாகையால் மூத்தவர் குருப்பட்டமும் இளையவர் டீக்கன் பட்டமும் பெற்றார்கள். வேதக் கலாபனை காலத்தில் இவ்விருவரும் வேதம் போதித்து அநேகரை சத்திய வேதத்தில் மனந்திருப்பினதைக் கண்ட அஞ்ஞானிகள் இவர்களை இராயனிடம் கொண்டுபோய் விட்டார்கள்.


அவன் அவர்களை பொன்னால் செய்யப்பட்ட சூரிய விக்கிரகத்தை ஆராதிக்கும்படிக் கட்டளையிட்டான். அப்போது அவ்விருவரும் சர்வேசுரனைப் பார்த்து மன்றாடும்போது அவ்விக்கிரகம் கரிமயமானதைப் பூசாரிகள் கண்டு அதைத் துடைத்து சுத்தம் செய்கையில் அது சாம்பலாய்க் கீழே விழுந்தது.

இதை இராயன் கண்டு அவர்களைத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடும்படி கட்டளையிட்டான். மிருகங்கள் அவர்களைத் தொடாமல் அங்கு நின்றுகொண்டிருந்த சேவகரையும் பூசாரிகளையும் கொன்றுவிட்டன. அவ்விருவரையும் பெரும் நெருப்பில் போட்டபோது அவர்கள் சிறிதும் சேதமின்றி இருந்ததைக் கண்ட கொடுங்கோலன் அவர்களைச் சிறையில் அடைத்தான்.

அங்கு ஆகாரமும் தண்ணீரும் கொடுக்கக் கூடாதென்று கட்டளையிட்டும் அவர்கள் சுகமாய் இருப்பதைக் கண்டு, அவர்கள் கழுத்தில் பெரும் கற்களைக் கட்டி சமுத்திரத்தில் மூழ்கடிக்கும்படி உத்தரவிட்டான்.

ஆனால் சம்மனசின் உதவியால் அவர்கள் கரையில் வந்து சேர்ந்ததைக் கண்ட அநேகர் கிறீஸ்தவர்களானார்கள். இதையெல்லாம் கண்ட இராயன் சினங்கொண்டு அவர்களைச் சிரச்சேதம் செய்யும்படி தீர்ப்புக் கூறினான்.

யோசனை

தங்கள் மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி ஒறுக்கும் ஆத்துமங்களுக்கு மனச் சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சிஜ்பிரிட், மே.