பிப்ரவரி 14

அர்ச். வலந்தீன். குரு, வேதசாட்சி (கி.பி. 270) 

மூன்றாம் நூற்றாண்டில் வலந்தீன் என்னும் குருவானவர் அர்ச். மாரியுசு டையவும் அவருடைய குடும்பத்தினுடையவும் உதவியால் வேதத்தினிமித்தம் வாதிக்கப்பட்ட வேதசாட்சிகளுக்கு தைரியம் கூறி அவர்களுக்கு வேண்டிய உதவி புரிந்துவந்தார்.

இவர் இந்த பிறர்சிநேக வேலையைச் செய்யும்போது வேதத்திற்காகப் பிடிபட்டு நியாயாதிபதிக்கு முன் நிறுத்தப்பட்டார். வேதத்தை மறுதலிக்கும்படி, பயமுறுத்தப்படுகையில் ஞான இருளிலிருக்கும் அஞ்ஞானி களுக்கு ஞான ஒளியாகிய தேவ இஷ்டப்பிரசாதத்தை தரும்படி சர்வேசுரனைப் பார்த்து மன்றாடினார்.

ஆனால் கெட்ட நியாயாதிபதி வலந்தீனைப் பார்த்து குருடியான என் குமாரத்திக்குக் கண்பார்வை கொடுப்பாயோ என்று கேட்டான். அதற்கு வேதசாட்சி சம்மதித்து, அந்தப் பெண்ணின் கண்ணின்மேல் தன் கரங்களை நீட்டி வேண்டிக்கொண்டவுடன் அவள் கண் திறக்கப்பட்டது. இதைக் கண்ட நடுவன் அதிசயித்து கிறீஸ்துநாதரே மெய்யான சர்வேசுரன் என்று விசுவசித்து, தன் வீட்டாருடன் ஞானஸ்நானம் பெற்றான்.

இதையறிந்த இராயன் இவர்களைப் பல வழிகளிலும் வாதைப்படுத்தவும், வலந்தீனை தடிகளால் அடித்துக் கொல்லவும் தீர்ப்புக் கூறினான். அவ்வாறே இவர்கள் வேதத்திற்காக இரத்தம் சிந்தி நித்திய முடியைப் பெற்றார்கள்.

யோசனை 

பாவிகளுக்கும், சத்திய வேத விரோதிகளுக்கும், சத்தியத்தை அறிய விரும்புகிறவர்களுக்கும் நம்மால் முடிந்தவரை ஆலோசனை கூறவேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மாரோ, ம.
அர்ச். அபிராமேஸ், ம.
அர்ச். ஆக்சென்ஸியுஸ், த.
அர்ச். கொன்ரன், மே.து.