பிப்ரவரி 16

அர்ச். ஜூலியான். கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 237)

ஜூலியானம்மாள் அஞ்ஞானியாய் இருந்தபோதிலும் பொய்த் தேவர்களை வணங்காமலிருப்பதை அவள் தகப்பன் அறிந்து அவளுக்கு எவ்வித புத்திமதி கூறியபோதிலும் அதற்கு அவள் இணங்காமல், சத்திய வேதத்தையே கடைப்பிடித்தாள். இவளுக்கு வயது வந்தவுடன் அஞ்ஞானியான நாட்டு அதிபதிக்கு இவளை மணமுடிக்க முயற்சிக்கையில், அந்த அதிகாரி கிறீஸ்த வனாக மாறினால் மாத்திரம் நான் அவனை மணமுடித்துக்கொள்வதாகக் கூறினாள்.

தகப்பன் அவளுக்கு நயபயத்தைக் காட்டியும் அது பயனற்றுப் போனதால் அவளை நாட்டு அதிகாரிக்கு கையளித்தான். அதிபதி அவளை வரவழைத்து அதிக பிரியம் காட்டி, அவள் தன்னை மணமுடித்தபின் அவள் கிறீஸ்தவ வேதத்தை கடைபிடிக்கத் தான் தடையேதும் செய்வதில்லை யென்று உறுதிமொழி தந்தும், அதற்கு அவள் சம்மதியாததால், அவளை கொடூரமாய் உபாதிக்கக் கட்டளையிட்டான்.

துஷ்டர் அவளை வார்களால் குரூரமாய் அடித்து, அவளுடைய விலாக்காயங்களை எரிகிற தீப்பந்தங்களால் சுட்டார்கள். அவள் அதற்கு அஞ்சாமலிருப்பதைக் கண்டு கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் அவளைப் போட்டார்கள். அதில் அவள் யாதொரு மோசமின்றி சுகமே இருப்பதைக் கண்ட அநேக அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்து வேதசாட்சிகளாய் மரித்தார்கள்.

அதிபதியோ அதிக கோப் வெறிகொண்டு ஜூலியானம்மாளின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அவள் தலை வெட்டுண்டு வேதசாட்சி முடி பெற்றாள்.

யோசனை

கிறீஸ்தவர்கள் அஞ்ஞானிகளையாவது துஷ்ட கிறிஸ்தவர்களையாவது மணமுடித்துக் கொள்வது ஒழுங்கல்ல.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஒனேசிடிஸ், வே.
அர்ச். எலியாஸும் துணை., வே.
அர்ச். கிரகோரி, பா. து.
அர்ச். டான்கோ , மே. வே.