நவம்பர் 14

அர்ச். ஜோசெபாத் ஆயர், வேதசாட்சி - (கி.பி. 1623).

உயர்ந்த குடும்பத்தாரும், பக்தியுள்ளவர்களுமான தாய் தந்தையரிடத்தினின்று ஜோசெபாத் பிறந்தார். கர்த்தருடைய திருப்பாடுகளைப்பற்றி இவருடைய தாயார் கூறுவதைக் கேட்ட ஜோசெபாத், திருப்பாடுகளின் மட்டில் இரக்கமும் பக்தியுங்கொண்டார்.

இவர் ஒரு துறவற மடத்தில் வளர்ந்து, புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கினார். இவர் துறவியான பின்பு, தர்ம வழியில் நடந்து, வெறுங் காலால் நடந்து, எப்போதும் சுத்தபோசனம் அருந்தி, மயிர்ச்சட்டை தரித்து, கடுந்தவம் புரிந்துவந்தார்.

இவருடைய வியப்பிற்குரிய புண்ணிய செயல்களினிமித்தம் அந்த துறவற மடத்திலுள்ளவர்களுக்குள் இவர் வயதில் இளையவராயிருந்தும், ஆயராக நியமிக்கப்பட்டார்.

இவ்வுந்நத பட்டம் பெற்றபின் புண்ணிய வழியில் முன்னிலும் உத்தமமாய் நடந்து, பிரசங்கத்தாலும் புத்தகங்களாலும் அநேக பதிதரை சத்தியத் திருச்சபையில் சேர்த்து, பாவிகளை மனந்திருப்பி, பிரிவினையிலிருந்த கிரேக்க சபை சத்தியத் திருச்சபையுடன் இணைவதற்கு சகல முயற்சிகளையும் செய்துவந்தார்.

இவர் அநேக கோயில்களைக் கட்டி அலங்கரித்து, துறவற மடங்களை ஏற்படுத்தி, திருச்சபை செழித்தோங்க உழைத்து வந்தார். பிரிவினைக்காரரான சில தேவ துரோகிகள், இவர் தமது மறைமாவட்ட விசாரணைக்காக வெளியூர்களுக்குப் போய் தங்கியிருந்த வீட்டில் பிரவேசித்துத், தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை அடித்து காயப்படுத்தும் தருவாயில், இப்பரிசுத்த ஆயர் அவர்களிடம் ஓடிப்போய்: இதோ, என்னை உங்கள் எண்ணப்படி செய்யலாம் என்ற மாத்திரத்தில் அந்த துஷ்டர் இவர்மேல் பாய்ந்து இவரை வெட்டிக் கொலைசெய்து இவர் சரீரத்தை ஆற்றில் எறிந்தார்கள்.

ஆனால், அது பிரகாசத்துடன் மிதப்பதைக் கண்ட கிறீஸ்தவர்கள், அதைப் பக்தியோடு எடுத்துப் பத்திரப்படுத்தினார்கள். அதனால் அநேக புதுமைகள் நடந்தேறின.

யோசனை

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நாம் அமைந்து கீழ்ப்படிந்து, ஒருபோதும் அவர்களுக்கு பங்கம் வருவிக்காமலும் தீங்கு செய்யாமலும் இருப்போமாக.