பிப்ரவரி 13

அர்ச். கத்தரீனம்மாள். கன்னிகை (கி.பி. 1589) 

கத்தரீனம்மாள் உயர்ந்த வம்சத்தில் பிறந்தவள், இவளுக்கு 13 வயது நடக்கும்போது, அர்ச். தோமினிக் சபையில் சேர்ந்தாள். இவளுக்கு ஒருநாள் கர்த்தர் பாடுபட்ட வண்ணமாய்த் தோன்றியபோது, இவள் அதனால் எவ்வளவு துக்கமும் துயரமும் கொண்டாளெனில், மூன்று வாரமாய் நோயுற்றவளாய் படுக்கையில் கிடந்தாள்.

12 வருடங்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பரவசங்கொள்வாள். நமது கர்த்தரைப்போல் தலையில் முள் முடியும், இரு கரங்களிலும், பாதங்களிலும், இடது பக்கத்திலும் ஐந்து காயங்களையும் பெறப் பாக்கியம் பெற்றாள். இந்த காயங்களால் சொல்லமுடியாத வேதனையை அனுபவித்து, அதை உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காக ஒப்புக் கொடுப்பாள்.

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் மட்டில் இவளுக்கு எவ்வளவு இரக்கமும் பக்தியும் உண்டானதெனில், தன் ஜெப தபங்களை யெல்லாம் அவர்களுக்காக ஒப்புக்கொடுப்பாள். அந்நாட்டில் அநேகர் கத்தரீ னம்மாளிடம் வந்து, மரித்த தங்களுடைய உறவினர்களுக்காகவும், சிநேகிதர் களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்படி அவளை மன்றாடுவார்கள்.

மேலும் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குப் போகும் ஆத்துமங்களையும், அதைவிட்டு வெளியேறும் ஆத்துமங்களையும் இப்புண்ணியவதி அறியும் வரத்தைப் பெற்று இருந்தாள். இதுவுமன்றி அர்ச்சியசிஷ்டவர்களுடன் அடிக்கடி சம்பாஷித்து வருவாள். இவள் சகல புண்ணியங்களையும் கடைப்பிடித்து, தேவதூதர் தேவ பாடல்களைப் பாடுகையில் மரித்தாள்.

யோசனை

நாமும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மறவாமல், அவர்களுக்காக நாள்தோறும் வேண்டிக்கொள்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். லிஸீனியுஸ், து.
அர்ச். பொலியுக்துஸ், வே.
அர்ச். கிரகோரி, பா.து.
அர்ச். மார்டினியானுஸ், வ.
அர்ச். தோமினிக், து.மே.
அர்ச். ஸ்டீபன், ம.
அர்ச். ரோஜர், ம.மே.