ஆகஸ்ட் 13

அர்ச். காசியான் - வேதசாட்சி (3-ம் யுகம்) 

இவர் இத்தாலியா தேசத்தில் இமோலா என்னும் ஊரில் பள்ளிக்கூடம் வைத்து 200 சிறு பிள்ளைகளுக்குப் கல்வி கற்பித்து வந்தார். அஞ்ஞானிகளான அந்தப் பிள்ளைகளுக்கு உலக கல்வியைக் கற்பிக்கும்போது தமது நல்லொழுக்கத்தாலும் தர்மச் செயல்களாலும் அவர்களுக்கு ஒரு ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். 

இவருடைய புண்ணிய ஒழுக்கத்தைக் கண்ட சேவகர் அவர் கிறீஸ்தவரென்று நிச்சயித்து, நாட்டு அதிகாரியிடம் அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள். அவன் அவரை விசாரித்தபோது தாம் கிறீஸ்தவனென்று பயப்படாமல் கூறினார். 

நீ உடனே கிறீஸ்தவ வேதத்தை மறுதலித்துவிட்டு தேவர்களுக்கு தூபம் காட்ட வேண்டும், இல்லையென்றால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவாய் என்றான். காசியான் அதற்கு மறுமொழியாக: பொய்த் தேவர்களுக்கு தூபம் காட்ட மாட்டேன் என்று அஞ்சாமல் தைரியத்துடன் கூறினார். 

இதைக் கேட்ட அதிபதி சினம்கொண்டு, அவர் கற்றுக்கொடுத்த பிள்ளைகளை வரவழைத்து தங்கள் கையிலுள்ள எழுத்தாணிகளால் தங்களுக்குக் கல்வி கற்பித்த குருவை குத்திக் கொல்லும்படி கட்டளையிட்டான். 

பிள்ளைகள் இக்குரூர வேலையைச் செய்ய அஞ்சியபோதிலும் அக்கொடியவனுடைய மிரட்டலுக்குப் பயந்து தங்கள் கையிலுள்ள கூர்மையான எழுத்தாணிகளால் அவரைக் குத்தியும், கீறியும் அறுத்தும் கொன்றார்கள். 

இந்தக் குரூர வேதனையை அவர் பொறுமையுடன் அனுபவித்து நித்தியானந்த பாக்கியத்தில் பிரவேசித்தார்.

யோசனை

கிறீஸ்தவ ஆசிரியர் உலக படிப்புடன் ஞானப்படிப்பையும் பிள்ளைகளுக்கு ஊட்டி தங்கள் தர்ம ஒழுக்கத்தாலும் நல்ல மாதிரிகையாலும் அவர்களுக்குப் போதிக்கக்கடவார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். ஹிப்போலிதுஸ், வே.
அர்ச். ராடெகுன்தெஸ், இராணி.
அர்ச். உவிக்பெர்ட், ம.