ஆகஸ்ட் 14

அர்ச். யுசேபியுஸ் - வேதசாட்சி (3-ம் யுகம்) 

இவர் குருப்பட்டம் பெற்று சத்திய வேதத்தைப் பரப்புவதற்காக வெகுவாக பிரயாசைப்பட்டு வந்தார். மேலும் இந்தப் பரிசுத்த குருவானவர் இடைவிடாமல் சர்வேசுரனுடைய சந்நிதியிலிருந்து வெகு நேரம் மகா பக்தி விசுவாசத்துடன் ஜெபம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். 

வேதக் கலாபனைக் காலத்தில் யுசேபியுஸ் பிடிபட்டு வேதத்தை விடும்படி நடுவனால் வஞ்சகமாகக் கூறப்பட்டும், அவனுடைய நயபயத்திற்கு அஞ்சி சத்திய வேதத்தை மறுதலிக்கவில்லை. 

மாக்ஸிமியன் சக்கரவர்த்தி அந்நாட்டுக்குச் சென்றபோது நடுவனுடைய உத்தரவின்படி வேதசாட்சி, இராயனுக்குமுன் கொண்டுவரப்பட்டார். அப்போது யுசேபியுஸுடைய முகத்தில் தெரிந்த ஒருவித அதிசயப் பிரகாசத்தைக் கண்ட இராயனும் மற்றவர்களும் அதிசயப்பட்டார்கள். 

இராயன் இவருடன் சிறிது நேரம் பேசிய பின், நடுவன் கையில் அவரை ஒப்புவித்தான். நடுவனோவெனில் அவரைப் பொய் மதத்திற்கு மாற்றச் செய்த முயற்சிகள் அனைத்தும் வீணானதால் அவர் தலையை வெட்டும்படி கட்டளை யிட்டான். 

“நீ இந்த வேதனையை அனுபவியாவிடில் மோட்சம் சேர மாட்டாய் " என்னும் அசரீரி வாக்கியம் கேட்கப்பட்டது. உடனே வேதசாட்சி சந்தோஷித்து மகிழ்ந்து இந்த உபகாரத்திற்காக சர்வேசுரனைத் துதித்துப் புகழ்ந்தார். 

பிறகு வேதசாட்சி மகிழ்ச்சியுடன் கொலைக்களத்திற்குச் சென்று முழந்தாளில் இருக்கவே, அவருடைய ஆத்துமம் மோட்சத்திற்குச் சென்றது.

யோசனை

நமக்குண்டாகும் துன்பதுரிதம் வியாதி, தரித்திரம் முதலியவைகளை நாம் பொறுமையுடன் சகிக்கப் பழகுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். யுசேபியுஸ், து.