அர்ச். கிளாரம்மாள் - கன்னிகை (கி.பி. 1253)
செல்வந்தர்களான தாய் தந்தையிடமிருந்து பிறந்த கிளாரம்மாள் சிறுவயதிலே தெய்வபக்தி கொண்டு புண்ணிய வழியில் நடந்தாள்.
அர்ச். ஐந்துகாய பிரான்சீஸ்குவின் அறிவுரையைக் கேட்டு, உலக நன்மைகள் மட்டில் வெறுப்புற்று தன் பெற்றோருக்குத் தெரியாமல் அவர் மடத்திற்கு ஓடிப்போய், தன் தலை முடியை முற்றிலும் கத்தரித்துவிட்டு, அவரால் துறவியின் தவ வஸ்திரத்தைப் பெற்றுக்கொண்டாள்.
இதையறிந்த அவளுடைய உறவினர்கள் அவ்விடஞ் சென்று கன்னிகையைப் பலவந்தமாய்ப் பிடித்து இழுத்தார்கள். கிளாரம்மாளோ தன் கையால் பீடத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டதினால் அவர்கள் அவளைத் திட்டி வைதுவிட்டு வீட்டுக்குச் சென்றார்கள்.
சீக்கிரத்தில் கிளாரம்மாளுடைய தங்கையும் தாயாரும் இன்னும் அநேக பணக்காரப் பெண்களும் அவளிடஞ் செல்லவே, அனைவரும் கன்னியாஸ்திரீகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
கிளாரம்மாள் மற்ற கன்னியாஸ்திரீகளுக்கு ஒரு நல்ல தாய்போல அன்பாய் விசாரித்து, உத்தம புண்ணியங்களை அவர்களுக்குப் கற்றுக் கொடுத்தபடியால், சகலரும் தர்ம வழியில் உத்தமமாய் நடந்தார்கள். கிளாரம்மாள் அநேக புதுமைகளையும் புண்ணியங்களையும் செய்து வந்தாள்.
ஒருநாள் சத்துருக்களான சரேசியரின் படைகள் அசீசி நகரத்தை அடைந்து, கிளாரம்மாள் மடத்தைக் கொள்ளையடிக்க இருக்கையில், இப்புண்ணியவதி தேவநற்கருணைப் பாத்திரத்தை தன் மடத்தின் வாசற்படியில் ஸ்தாபிக்கச் சொல்லி, அதற்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து, ஆண்டவரே! உம்மை நம்பின இந்த ஆத்துமங்களை இந்த மிருகங்களுக்குக் கையளிக்காதேயும் என்று மன்றாடினாள்.
உங்களைக் கைவிடாமல் காத்து இரட்சிப்போம் என்ற சப்தம் கேட்கப்பட்டது. சத்துருக்களும் ஒருவித பயத்தால் பீடிக்கப்பட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
அவள் வியாதியாயிருந்த 28 வருட காலமும் தேவநற்கருணையே அவளுக்கு ஆகாரமாயிருந்தது. அவள் தனது 61-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாய் மரித்து மோட்சம் சேர்ந்தாள்.
யோசனை
சர்வேசுரன் உன்னைத் தமது ஊழியத்திற்கு அழைத்தால் எதற்கும் பயப்படாமல் தைரியத்துடன் அவருக்குச் செவி கொடுப்பாயாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.
அர்ச். யூப்ளியுஸ், வே.