நவம்பர் 12

அர்ச். மார்ட்டின் பாப்பரசர், வேதசாட்சி (கி.பி. 655).

மார்ட்டினுடைய சிறந்த புண்ணிய வாழ்வையும், கல்வியறிவையும் பார்த்து அவர் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்.

கான்ஸ்டாண்டிநோபிளில் ஒரு புது பதித மதம் முளைத்து, அதில் அநேகர் சேர்ந்ததுடன், அந்நகரின் ஆயரான பவுல் என்பவரும் அதற்கு ஆதரவாக இருந்ததை மார்ட்டின் பாப்பரசர் அறிந்து, ஸ்தானாதிபதிகளை அவ்விடத்திற்கு அனுப்பி, காரியத்தை ஒழுங்குபடுத்தும்படிச் செய்தார்.

பதிதனான அந்த ஆயர், அந்த ஸ்தானாதிபதிகளை நாடு கடத்திவிட்டார். பின்பு பாப்பரசர் அநேக ஆயரை திருச்சங்கமாகக் கூட்டி, பவுல் ஆயர் பேரிலும், அந்தப் பதித மதத்தைச் சார்ந்தவர்கள் பேரிலும் திருச்சபை சாபம் போட்டார்.

பதித மதத்தானான கன்ஸ்தான்ஸ் இராயன் சினங்கொண்டு, தன் மந்திரிகளில் ஒருவனை உரோமைக்கு அனுப்பி, பாப்பரசரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். திவ்விய பலிபூசை நிறைவேற்றிக்கொண்டிருந்தப் பாப்பாசரைக் கொல்லும்படி மேற்கூறிய மந்திரியின் சேவகன் அவரை அணுகியபோது, புதுமையாக அவன் குருடனானான்.

பின்பு கொடுங்கோலனான இராயனுடைய கட்டளைப்படி ஒரு படைத்தலைவன் பெரும் படையுடன் உரோமைக்குச் சென்று கபடமாய் பாப்பரசரைச் சிறைப்படுத்தி, இராயனிடன் கூட்டிக்கொண்டு வந்தான். இராயன் அவரைப் பலவாறாய் வதைத்து அவரைக் கொலை செய்ய முயற்சித்தபோது, பதித ஆயர் பவுல் கடின வியாதியுற்று இறந்தார்.

தனக்கும் மற்ற பதிதருக்கும் போட்ட சாபத்தை எடுக்கும்படி இராயன் மார்ட்டின் பாப்பரசருக்கு கட்டளையிட்டு அவரை உபாதித்தபோதிலும், அவர் அதற்குச் சம்மதியாததால், அவரை நாடுகடத்தினான். அவர் அங்கு சொல்லமுடியாத வேதனைகளை அனுபவித்து, வேதத்திற்காகத் தமது உயிரைக் கொடுத்தார்.

யோசனை

நாம் எக்காரணத்தைக் கொண்டும் இதர மதத்தாருடைய மதச்சடங்குகளில் பங்குபெறக் கூடாது.