நவம்பர் 11

அர்ச். தூர் நகரத்து மார்ட்டின் ஆயர் - (கி.பி. 397).

மிகவும் கீர்த்தி பெற்ற மார்ட்டின் என்பவர், பிரான்ஸ் தேசத்திற்குச் சிறந்த ஆபரணமாய் ஜொலித்தார். பிறமதத்தைச் சார்ந்த இவர் கல்விப் பயிற்சி பெறும்போது, சத்தியவேதத்தை அறிந்து, ஞானோபதேசம் கற்கையில், இவர் தந்தை இவரைப் படையில் சேர்த்துக்கொண்டார்.

ஒருநாள் மார்ட்டின் மற்றச் சேவகருடன் பயணம் செய்கையில், குளிரால் நடுங்கும் ஒரு ஏழை, சேசுநாதர் பெயரால் தர்மம் கேட்டான். தமது கையில் ஒன்றுமில்லாததினால் தமது மேற்போர்வையைக் கழற்றி, இரண்டாகக் கிழித்துப், பாதியை அவனுக்குக் கொடுத்தார்.

அன்றிரவு சேசுநாதர் மேற்கூரிய போர்வையை போர்த்தியவராய் அநேக சம்மனுசுக்களுடன் இவருக்குத் தோன்றி, "இது மார்ட்டின் எனக்குக் கொடுத்த போர்வை" என்றார். அதற்குப்பின் மார்ட்டின் படையிலிருந்து விலகி, ஞானஸ்நானம் பெற்று, அர்ச். இலாரி என்பவருக்குச் சீஷனானார்.

பின்பு வேத சாஸ்திரங்களைக் கற்று, குருப்பட்டம் பெற்று, ஒரு துறவற மடத்தைக் கட்டி, 400 துறவிகளுடன் ஜெபதபத்தால் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தார். இவருடைய புண்ணிய வாழ்வின் நிமித்தம், இவருக்கு ஆயர் பட்டம் கொடுக்கப்பட்டது. மார்ட்டின் சில துறவிகளுடன் ஊரூராய்ப் போய் வேதம் போதித்தார்.

இவர் புதுமை வரம் பெற்று மந்தவர்களுக்கு உயிரும், குருடருக்குப் பார்வையும் கொடுத்து, பசாசை விரட்டியதைக் கண்ட கணக்கில்லாத பிறமதத்தினர், ஞானஸ்நானம் பெற்றார்கள். இவர் நாட்டிலுள்ள பேய்க் கோவில்களை இடித்து, சோலைகளை அழித்து, தேவாலயங்களைக் கட்டினார்.

இவரால் செய்யப்பட்ட புதுமைகளுக்குக் கணக்கில்லை. இவருடைய விடாமுயற்சியாலும் ஜெபதபத்தாலும் அநேக அஞ்ஞான நாடுகளைக் கிறீஸ்தவ நாடுகளாக்கி, தமது ஞானப்பிரசங்கத்தால் அவர்களை சத்தியவேதத்தில் உறுதிப்படுத்தி, பிரான்ஸ் தேசத்தின் அப்போஸ்தலரென்று பெயர்பெற்று, அர்ச்சியசிஷ்டவராய்க் காலஞ்சென்றார்.

யோசனை

நாம் தர்மம் புரியும்போது முகத்தாட்சண்யத்தையும் வீண் பெருமையையும் பாராமல் ஆண்டவரைக் குறித்து அதைச் செய்யவேண்டும்.