புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏப்ரல் 10

அர்ச். மெக்தில்தஸம்மாள். கன்னிகை (கி.பி. 1300) 

மெக்தில்தஸ் அம்மாள் ஜெர்திருத்தம்மாளுக்குச் சகோதரியும் 2-ம் பிரடெரிக் இராயனுக்கு நெருங்கிய உறவினளாயுமிருந்தாள்.

இவளுக்கு 7 வயது நடக்கும் போதே கன்னியர் மடத்தில் சேர்க்கப்பட்டாள்.

இவள் தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை முதலிய புண்ணியங்களில் சிறந்து விளங்கினாள். புத்திக் கூர்மையில் தேர்ந்து சகல சாஸ்திரங்களையும் நன்குக் கற்றறிந்தாள்.

இவள் மடத்தில் சிரேஷ்ட தாயாராகத் தெரிந்துகொள்ளப்பட்டு, ஒரு நல்ல தாயைப்போல் சகலரையும் அன்பாய் நடத்தினபோதிலும் குற்றங் குறைகளைக் கண்டிப்பாள்.

இவள் பல வியாதிகளால் பீடிக்கப்பட்டிருந்தாலும் இறைச்சியை முற்றிலும் தள்ளி, கொஞ்சம் வைக்கோலின்மேல் படுத்து இளைப்பாறுவாள்.

அவள் தன்னை முற்றிலும் அடக்கி ஒறுத்து உலகத்திற்குச் செத்தவளாய் ஒரு சம்மனசு போலக் காணப்படுவாள்.

கர்த்தருடைய பாடுகளின் மட்டில் இவளுக்கு உண்டான விசேஷப் பக்தியால் அவற்றை இடைவிடாமல் தியானித்துக் கண்ணீர் சிந்துவாள்.

உத்தரிக்கிற ஆத்துமாக்கள் மட்டில் இரக்கம் வைத்து தன் ஜெபத் தியானம் முதலியவைகளை அவர்களுக்காக ஒப்புக்கொடுப்பாள்.

அந்நாட்டு மேற்றிராணியாருடைய கட்டளைப்படி வேறொரு கன்னியர் மடத்திற்கு இவள் சிரேஷ்ட தாயாராகி, தமது புத்தி ஆலோசனையாலும் ஜெப தபத்தாலும், விசேஷமாக, நன் மாதிரிகையாலும் அதைச் சீர்படுத்தி, அநேக வருட காலம் அம்மடத்தை நடத்தியபின் அர்ச்சியசிஷ்டவளாக மரித்து, தன் ஞான பத்தாவின் அரவணைப்புக்குள்ளானாள்.

யோசனை

ஒரு சபைக்கு அல்லது குடும்பத்திற்குப் பெரியவர்களாய் இருக்கப் பட்டவர்கள் தங்கள் அதிகாரத்தைவிட நல்ல மாதிரிகையால் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களைச் சுலபமாய் நடத்தலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பாடேமுஸ், ம.