ஏப்ரல் 09

அர்ச். எஜிப்து மரியம்மாள். (கி.பி. 421) 

53 வருடகாலம் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து வந்த பெருந் தபசியும் நல்லொழுக்கமுடையவரான ஜோஸிமஸ் என்னும் குருவானவர், தான் புண்ணியவானென்று பெருமையாய் நினைத்தபோது, “நீ ஜோர்தான் நதிப் பக்கமாய் போ” என்னும் தேவ ஏவுதலுக்கு இணங்கி, அநேக நாள் பிரயாணஞ் செய்து அவ்விடம் போய்ச் சேர்ந்தார்.

துாரத்தில் ஒரு மனித உருவத்தைக் கண்டு அது ஒரு பெருந் தபசியின் உருவமென்றெண்ணி அவ்விடம் செல்ல, “நான் ஒரு ஸ்திரீ, உமது மேற்போர்வையை என் மேல் விசிறி எறியும்” என்று சொல்ல, தமது மேற்போர்வையைக் கொடுத்தார்.

அந்த ஸ்திரீ அதை உடுத்திக்கொண்டு, சொல்வாள்: நான் பெரும் பாவி, சிறு வயதில் என் பெற்றோரை விட்டுவிட்டு துஷ்டரோடு சேர்ந்து சொல்ல முடியாத பாவ அக்கிர மங்களைக் கட்டிக்கொண்டேன்.

ஜெருசலேமுக்குச் சென்று திருயாத்திரைக் காரரோடு பாவக் கருத்துடன் நானும் அங்கு போனேன். நான் கோவிலில் பிரவேசிக்க எத்தனிக்கையில் காண முடியாத கையால் தடுக்கப்பட்டேன்.

எனக்கு முன்பு இருந்த தேவமாதா படத்தைப் பார்த்து ஜெபித்த மாத்திரத்தில் தடை நீங்கி உள்ளே பிரவேசித்த அக்கனமே நான் வேறு மனுஷியாகி என் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டேன்.

பிறகு தேவ ஏவுதல்படி இவ்விடம் வந்து 47 வருட காலமாய் என் பாவங்களுக்காக அழுது கண்ணீர் சிந்தி, இரத்தம் வர என்னை அடித்துக்கொண்டு தேவ மன்னிப்பை மன்றாடி வருகிறேன்.

நீர் எனக் காக வேண்டிக்கொண்டு தபசு காலத்தில் எனக்கு தேவநற்கருணை கொண்டு வரும்படி உம்மை மன்றாடுகிறேன் என்றாள். அவ்வாறே குருவானவர் கொண்டு வந்த நன்மையை அவள் உட்கொண்டு, மறு வருடத்திலும் தனக்கு நன்மை கொண்டுவர மன்றாடினாள்.

குருவானவர் அப்படியே தேவநற்கருனை கொண்டு சென்றபோது அவள் உயிர் துறந்து கிடப்பதையும், அவள் மரணமான நாளும் அவள் பெயரும் அங்கு எழுதப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்து அங்கேயே அவளை அடக்கஞ் செய்து, நடந்தவற்றை மற்றவர்களுக்கு அறிவித்தார்.

யோசனை 

நாமும் பாவங்களைச் சங்கீர்த்தனம் செய்தால் மட்டும் போதாது, மேலும் அவைகளுக்காக கண்ணீர் சிந்தி மனஸ்தாபப்பட்டு, பாவத்திற்கு காரணமான மனிதர், இடம் முதலியவைகளை விட்டு விலகுவோமாக.