மார்ச் 09

அர்ச். பிரான்சீஸ்கம்மாள். விதவை (கி.பி. 1440). 

உத்தம கோத்திரத்தாளான பிரான்சீஸ்கம்மாள் தன் பெற்றோரின் சொற்படி சிறு வயதில் ஒரு செல்வந்தனை மணமுடித்தாள்.

தன் மாளிகையிலுள்ள சுக செல்வத்தால் கர்வம் கொள்ளாமலும், சோம்பலாயிராமலும் தன் வீட்டு வேலையைத் தானே செய்வாள்.

வீட்டுக் கடமைகளுக்கிடையில் அடிக்கடி ஜெபஞ் செய்வாள்.

இவள் ஒரு சங்கீதத்தை வாசித்துக்கொண்டிருக்கையில் நான்கு தடவை அந்த ஜெபத்தை விட்டு விட்டு, வீட்டு வேலையைப் பார்க்கும்படி நேரிட்டபோது, அவள் விட்டு வந்த வசனம் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது.

உரோமையின் மேல் எதிரிகள் படையெடுத்தபோது தன் புருஷனுடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு, தன் புருஷனும் சிறையிலடைக்கப்பட்டதை பிரான்சீஸ்கம்மாள் கேள்விப்பட்டு சர்வேசுரனுக்குத் தோத்திரமென்று சொன்னாள்.

பிறகு அவளுடைய புருஷன் விடுதலையடைய, சொத்துக்கள் அவன் கைவசமாயிற்று.

தன் புருஷன் இறந்தபின் பிரான்சீஸ்கம்மாள் ஒரு கன்னிகை மடத்தில் சேர்ந்து, அரிதான புண்ணியங்களைப் புரிந்து தாழ்ச்சிக்குரிய வேலைகளைச் செய்து அந்த மடத்திற்குத் தலைவியாக தெரிந்துகொள்ளப்பட்டாள்.

இவளுடைய காவல் சம்மனசானவர் இவளுக்கு அடிக்கடி மகா பிரகாசத்துடன் காணப்பட்டு இவளுடன் சம்பாஷித்து அவசரமான ஆலோசனை கொடுப்பார்.

இந்தப் புண்ணியவதி உத்தமதனத்தில் உயர்ந்து, சகலராலும் நேசிக்கப்பட்டு, நித்திய சம்பாவனைக்குள்ளானாள்.

யோசனை

ஸ்திரீகள், எவ்வளவு செல்வந்தரானபோதிலும் சோம்பலுக்கு இடங் கொடாமலும் தங்கள் வீட்டு வேலைகளை முழுவதையும் வேலைக்காரர்களிடம் விட்டு விடாமலும், தாங்களும் தங்களால் இயன்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கிரகோரி, மே.
அர்ச். பாசியன். மே.
அர்ச். கத்தரின், க.