மார்ச் 10

நாற்பது வேதசாட்சிகள். (கி.பி. 320). 

உரோமை இராயனுடைய ஒரு படை அர்மீனியாவில் தங்கியிருந்த காலத்தில் அந்தப்படையிலுள்ள சேவகர்கள் பொய்த் தேவர்களுக்குப் பலி செலுத்தும்படி கற்பிக்கப்பட்டார்கள்.

அதிலுள்ள 40 கிறீஸ்தவ சேவகர்கள் அதற்கு சம்மதியாதிருப்பதைக் கண்ட சேனாதிபதி அவர்களிடம் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும் அவர்கள் தங்கள் கருத்தில் உறுதியாயிருந்தமையால் பனி விழும் காலத்தில் குளிர்ந்த ஜலமுள்ள ஒரு குளத்தில் அவர்களைத் தள்ளும்படி கட்டளையிட்டு, குளக்கரையில் வெந்நீருள்ள தொட்டிகளைத் தயார் செய்யச் சொல்லி, குளிர் பொறுக்க முடியாதவர்கள் தங்கள் வேதத்தை மறுதலித்து வெந்நீர் தொட்டியில் குதிக்கலாமென்று உத்தரவு அளித்தான்.

அந்த 40 பேரில் ஒருவன் மாத்திரம் குளிர் பொறுக்கமுடியாமல் வெந்நீரில் குதித்த மாத்திரத்தில் உயிர் துறந்தான்.

அந்நேரத்தில் தேவ தூதர் 40 முடிகளைக் கையில் பிடித்த வண்ணமாய் ஆகாயத்தில் காணப்பட்டதைக் காவல் சேவகரில் ஒருவர் கண்டு, குளத்தில் 39 பேர் மாத்திரமிருக்க, 40 முடிகள் காணப்படுவதைப் பார்த்து அதிசயித்து, வேதசாட்சிகளின் தைரியத்தால் கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்றுணர்ந்து, தானும் கிறீஸ்தவனென்று கூறி, குளத்திலிறங்கி வேதசாட்சி முடி பெற பாக்கியம் பெற்றான்.

மறுநாள் காலையில் குளத்திலுள்ள பிரேதங்களை சேவகர் எடுக்கும் போது அவர்களில் ஒருவனுக்குக் கொஞ்சம் உயிர் இருப்பதைக் கண்டார்கள்.

அவனைக் காப்பாற்ற முயற்சித்ததை அறிந்த அந்த வேதசாட்சியின் தாயார் அவனைத் துாக்கி வேதசாட்சிகளின் பிரேதங்கள் கிடத்தப்பட்ட வண்டியில் அவனையும் கிடத்தி, “மகனே! போ! உன் சொந்த வீட்டுக்குப் போ” என்றாள்.

யோசனை 

நமது உயிர் போனாலும், வேண்டுமென்று ஒரு சாவான பாவத்தை முதலாய் கட்டிக்கொள்ளக் கூடாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். திராக்டோவேயுஸ், ம.
அர்ச். மாக்கேசாஜ், து.