மார்ச் 08

அர்ச். தேவ அருளப்பர். துதியர் (கி.பி. 1550). 

இவருடைய பெற்றோர் ஏழைகளாயிருந்தமையால் அருளப்பர் சிறு வயதில் ஆடு மாடுகளை மேய்த்து ஜீவனம் செய்து வந்தார்.

சில காலத்திற்கு பின் படையில் சேர்ந்து போர்ச்சேவகரானார். அக்காலத்தில் இவர் தேவ பயமின்றி நடந்துவந்தார். இவர் அந்த வேலையையும் விட்டுவிட்டு சுரூபம், படம் முதலியவைகளை விற்று ஜீவனம் நடத்தி வந்தார்.

ஒரு நாள் இவர் கோவிலில் நிகழ்த்தப்பட்ட பிரசங்கத்தைக் கேட்டு மனதுருகி தன் நடத்தையை மாற்றிக்கொண்டு சர்வேசுரனுக்கு அதிக பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து வந்தார்.

இவர் வியாதியஸ்தரான ஏழைகள் மட்டில் அதிக இரக்கம் வைத்து அவர்களுக்கு உதவி புரிவார். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அநேக வியாதிக்காரரை அங்கு சேர்த்து, அவர்களை பேணிப் பாதுகாத்து வந்தார்.

இவ்விதமாக இவருடைய சந்நியாசிமாரும் அநேக இடங்களில் நோயாளி களைப் பராமரிக்கும் மடங்களைக் கட்டி வியாதியஸ்தரைக் கவனித்து வந்தார்கள்.

அர்ச். தேவ அருளப்பர் ஒரு நாள் வழியில் சாகக் கிடந்த ஒரு ஏழை மனிதனைத் தூக்கித் தன் தோள்மேல் சுமந்துகொண்டு வந்து நோயாளி களின் மடத்தில் சேர்த்து, அவனுடைய கால்களைக் கழுவி அவைகளை முத்திசெய்யும் தருவாயில், பாதங்கள் ஆணிகளால் காயப்பட்டுப் பிரகாசிப் பதைக் கண்டு திடுக்கிட்டார்.

அந்நேரத்தில், "அருளப்பா நீ நமது நாமத்தால் ஏழைகளுக்குப் புரியும் நன்மைகள் நமக்கே செய்யப்படுகின்றன; நீயே நமக்குத் தருமம் கொடுக்கிறாய்; நம்மை உடுத்துகிறாய்; நமது பாதங்களைக் கழுவுகிறாய்” என்று மொழிந்து, தரிசனமான கர்த்தர் மறைந்தார்.

அருளப்பர் பிறருக்கு அநேக நன்மை உபகாரங்களைச் செய்து வியாதியாய் விழுந்து சகலரும் அழுது துக்கிக்க, மோட்ச பதவி அடைந்தார்.

யோசனை 

நாம் பிறருக்குச் செய்யும் தர்மத்தை சேசு கிறீஸ்துநாதரைக் குறித்துச் செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாள்

அர்ச். பெலிக்ஸ், மே.