ஆகஸ்ட் 07

அர்ச். கயெதான் - துதியர் (கி.பி. 1547).

உந்நத கோத்திரத்தாரும் புண்ணியவாளருமான பெற்றோரிடமிருந்து பிறந்த கயெதான் தேவமாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார். இவர் எப்போதும் அந்தப் பரமநாயகியின்மேல் பக்தி வைத்து புண்ணிய வழியில் பரிசுத்தமாய் வாழ்ந்ததினால், சிறுவயதிலேயே அவர் அர்ச்சியசிஷ்டவரென்று அழைக்கப்பட்டார். 

இவர் சாஸ்திரங்களைக் கற்றபின் உரோமைக்குப் போய் குருப்பட்டம் பெற்று பிறருடைய ஆத்தும இரட்சண்ய வேலையில் ஈடுபட்டு அநேகப் பாவிகளை மனந்திருப்பினார். இவர் குருக்களடங்கிய ஒரு சபையை ஸ்தாபித்து ஜெபத்திலும் பிரசங்கத்திலும் தம்மை இணைத்துக்கொண்டார். 

பரிசுத்த தரித்திரத்தை மிகவும் கண்டிப்பாய் அனுசரித்து, தம் சபையோரும் அவ்விதம் நடக்கும்படி அறிவுரை கூறினார். தமக்கிருந்த திரண்ட ஆஸ்தியை ஞான காரியங்களிலும் பிறர் சிநேக காரியங்களிலும் செலவு செய்து தர்மம் எடுத்து புசிப்பார். நெடுநேரம் ஜெபம் செய்து பல முறை பரவசமாவார். 

ஜெர்மானியர் உரோமையைக் கொள்ளையடித்தபோது, கயெத்தானுடைய மடத்தை நெருப்பால் சுட்டெரித்து, அவரையும் கொடூரமாய் அடித்து உபாதித்தார்கள். கயெத்தானும் அவருடைய குருக்களும் தங்களுக்குரியவைகளை எல்லாம் இழந்து, தங்கள் ஜெபப்புத்தகத்துடன் எரிந்த அம்மடத்தை விட்டு வெளியேறினார்கள். 

இவருடைய புண்ணிய பிரசங்கத்தால் அநேக ஊரார் முற்றிலும் மனம் மாறி நல்ல கிறீஸ்தவர்களானார்கள். கயெத்தான் சாகக் கிடக்கும்போது தேவதாயார் இவருக்குத் தோன்றி, தமது கையிலுள்ள குழந்தை சேசுவை அவர் கையில் கொடுத்து, மோட்சானந்தத்தால் அவரை நிரப்பி, சம்மனசுக்களால் சூழப்பட்ட அவர் ஆத்துமத்தை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.

யோசனை

நாமும் தேவதாயார் மீது அதிக பக்தி வைத்து நாள்தோறும் அவர்கள் ஆதரவைத் தேடி மன்றாடுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். டோனாதுஸும் துணை., வே.