ஆகஸ்ட் 06

கர்த்தர் மறுருபமான திருநாள்.

சேசுநாதர் சுவாமி இவ்வுலகில் வாழ்ந்து பாடுபடுவதற்குமுன் தமது சீஷர்களில் மூவரை ஓர் உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுபோய் அவ்விடத்தில் அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில் மறுரூபமானார். 

அதெப்படியெனில், சடுதியில் அவருடைய திருமுகம் சூரியனைப் போல் அற்புத பிரகாசத்தால் ஜொலித்துத் துலங்க, அவருடைய வஸ்திரங்கள் வெண் பனி யைப்போல வெண்மையாக மாறின. 

அந்நேரத்தில் மோயீசனும் எலியாஸும் கர்த்தருடைய இரு பக்கத்திலும் தோன்றி அவர் இனி அனுபவிக்கவிருக்கும் பாடுகளைப் பற்றி சம்பாஷித்துக்கொண்டு இருந்தார்கள். 

இந்தக் காட்சியைக் கண்ட இராயப்பர் சந்தோஷமடைந்து மகிழ்ந்து கர்த்தரை நோக்கி: ஆண்டவரே! இனி இங்கேயே இருப்பது நலம்; தேவரீருக்கு ஒன்றும் மோயீசனுக்கு ஒன்றும் எலியாஸுக்கு ஒன்றும் ஆக மூன்று கூடாரங்களை இங்கு அடிப்போம் என்று கூறியபோது ஒரு பிரகாசமான மேகம் ஆகாயத்தினின்று இறங்கி அவர்களை மூடியது. 

மேலும், இவர் நமக்கு மிகவும் பிரியமுள்ள குமாரன், இவர்பேரில் பரிபூரண பட்சமாயிருக்கிறோம், இவருடைய வார்த்தையைக் கேளுங்கள் என்ற சப்தம் மோட்சத்தினின்று தொனித்தது. இதைக் கேட்ட சீஷர்கள் பயந்து முகம் குப்புற விழுந்தார்கள். 

கர்த்தர் அவர்களை அணுகி தமது கரத்தால் அவர் களைத் தட்டி பயப்படாதிருங்கள் என்றார். சேசுநாதர் தமது சீஷர்களுடன் மலையிலிருந்து இறங்கும்போது இன்று நடந்த சம்பவத்தைத் தாம் கல்லறையினின்று உயிர்த்தெழுந்திருக்கும் வரையில் யாருக்கும் அறிவிக்க வேண்டாம் என்றார்.

யோசனை

ஒருபோதும் அழியாத மோட்சானந்த பாக்கியத்தைப்பற்றி நினைத்து அதை விரும்புவோமாகில், நமக்கு உலக நன்மைகளின் மீதுள்ள மிதமிஞ்சின பற்றுதல் குறையுமென்பது நிச்சயம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். 2-ம் சிக்ஸ்துஸ், பா.வே. 
அர்ச். ஜுஸ்துஸும், பாஸ்தோரும், வே.