ஆகஸ்ட் 08

அர்ச். ஓர்மிஸ்தாஸ் - வேதசாட்சி (7-ம் யுகம்) 

ஒர்மிஸ்தாஸ் பெர்சியா தேசத்தில் உத்தம கோத்திரத்தாரும் அந்த தேசத்து தேசாதிபதியின் குமாரனுமாயிருந்தார். அத்தேசத்தில் வேத கலாபனை உண்டான காலத்தில் கிறீஸ்தவர்கள் மிகவும் கொடூரமாய் உபாதிக்கப்பட்டார்கள். 

சிலர் உயிருடன் தோலுரிக்கப்பட்டார்கள். வேறு சிலருக்கு முதுகில் மாத்திரம் தோலுரிக்கப்பட்டது. வேறு சிலருடைய தலையும் முகமும் தோலுரிக்கப்பட்டது. மேலும் அநேகருடைய சரீரம் முழுவதும் கூர்மையான முனையுள்ள இரு ஆணிகளால் குத்தப்பட்டு, பிறகு அவ்வாணிகள் பலமாய் இழுக்கப்பட்டபோது அவர்கள் அனுபவித்த வேதனையை நாவால் உரைக்க முடியாது. 

இன்னும் அநேகர் கை, கால் கட்டப்பட்டு எலி முதலிய ஜந்துக்களுள்ள குகையில் அடைக்கப்பட்டபோது அவர்கள் அந்த ஜந்துக்களால் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து தின்னப்பட்டார்கள். 

ஒர்மிஸ்தாஸ் கிறீஸ்தவராய் இருந்தபடியால் அவர் பிடிக்கப்பட்டு அரசனுக்கு முன் நிறுத்தப் பட்டபோது, அவன் காட்டிய பயத்தை அவர் கொஞ்சமும் பொருட்படுத்தாததினால், அவர் இருந்த மகிமையான உத்தியோகத்தினின்று தள்ளப்பட்டு, சகல சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு, இடையில் சுற்றிக்கொள்ள ஒரு சிறு துணி மாத்திரம் கொடுக்கப்பட்டு, அரண்மனையின் ஒட்டகங்களை மேய்க்கும்படி கட்டளையிடப்பட்டார். 

அவர் சந்தோஷத்துடன் அந்த நீச வேலையை வெகு காலஞ் செய்துவந்தார். மறுபடியும் அரசன் அவரை வரவழைத்து சத்திய வேதத்தை மறுதலிக்கும்படி கூறிய துர்ப்புத்தியெல்லாம் வீணானதால் அவரை உபாதித்துக் கொல்லும்படி கட்டளையிட்டான்.

யோசனை

நமது ஞான சத்துருக்களாகிய உலகம், பசாசு, சரீரத்தால் நாம் தாக்கப்படும்போது வேதசாட்சிகள் அனுபவித்த கொடிய வேதனையை நினைவு கூர்ந்து மேற்கூறிய சத்துருக்களை வெற்றிக்கொள்ள முயலுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். சீரியாகுஸும், துணை., வே.