டிசம்பர் 05

அர்ச். சபாஸ், மடாதிபதி. (கி.பி. 532).

படைத்தலைவனான சபாஸ் என்பவருடைய தந்தை அன்னிய நாட்டுக்குப் போக வேண்டியதினால், தன் குமாரனை பராமரிக்கும்படி தன் உறவினர்கள் கையில் ஒப்படைத்தார். தனக்குச் சேர வேண்டிய சொத்துக்களினிமித்தம் தன் உறவினர்களுக்குள் கலகம் உண்டானதைக் கண்ட சபாஸ், உலகத்தை வெறுத்து துறவியானார்.

இவருடைய மடத்திலுள்ளவர்களைவிட இவர் கடினமாய் உழைத்து, ஜெபத் தியானத்தில் அதிக நேரம் செலவழித்து, இரவு வேளையிலும் வெகு நேரம் ஜெபம் செய்வார். மடத்தின் ஒழுங்கை அனுசரிப்பதில் அம்மடத்திலுள்ள துறவிகள் தளர்ச்சியடைந்ததை சபாஸ் அறிந்து, அம்மடத்தை விட்டு வெளியேறி, தனிமையில் ஆண்டவருக்கு  ஊழியம் செய்ய வனாந்தரத்திற்குக் போனார்.

அங்கு துஷ்ட பசாசோவெனில் மிருக ரூபம் எடுத்து, இவரைத் துன்பப்படுத்தியபோதும், இவர் தம் ஜெப தபத்தால் அதை வென்றார். இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைக் கண்ட அநேகர் இவருக்கு சீஷரானார்கள். அவர்கள் வெகு காலம் இவருக்கு அடங்கிக் கீழ்படிந்தபோதிலும் அவர்களுக்குள் ஒற்றுமையில்லாததை சபாஸ் கண்டு, வேறு வனாந்தரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு சிங்கக் குகையில் பிரவேசித்து, நடுச்சாம வேளையில் ஜெபத்தியானம் செய்கையில், அதில் வசித்த சிங்கம் குகையில் சபாஸைக் கண்டு, இவருடைய வஸ்திரத்தைக் கவ்வி இழுத்தது. இவர் அதைவிட்டு அகலாததினால், அது அவ்விடத்தை விட்டு வேறிடம் சென்றது.

இவருடைய ஜெபத்தால் மழை பெய்து பெரும் பஞ்சம் நீங்கியது. சபாஸ் அரசராலும் ஜனங்களாலும் மதிக்கப்பட்டு, சகல புண்ணியங்களையும் உத்தமமாய் அனுசரித்து, இவருக்கு 94 வயது நடக்கும்போது மன அமைதியுடன் தன் ஆத்துமத்தை ஆண்டவர் கையில் ஒப்படைத்து, மோட்சத்தில் பிரவேசித்தார்.

யோசனை

ஒழுங்கை அனுசரிக்காதவர்களுடன் சபாஸ் வசிக்காமல், அவர்களை விட்டுப் பிரிந்ததுபோல, நாமும் கெட்டவர்களுடைய கூட்டத்தை விட்டு விலகுவது உத்தமம்.