மார்ச் 03

அர்ச். குனெகுந்தெஸம்மாள். சக்கரவர்த்தினி (கி.பி. 1040).

இந்த இராஜ குமாரத்தி தன் பெற்றோர்களால் மகா அன்புடன் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு, ஜெர்மனி சக்கரவர்த்திக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டாள்.

இந்த புண்ணியவதி கற்பென்கிற புண்ணியத்தை எவ்வளவு நேசித்தாள் என்றால், தன் புருஷனான சக்கரவர்த்திக்குப் பல நியாயங்களை எடுத்துக் காட்டினதினால் இருவரும் கூடப்பிறந்தவர்களைப் போல் வாழ்ந்து வந்தார்கள்.

சில துஷ்டர் இந்த புண்ணியவதி வேறொருவனோடு சிநேகமாயிருக்கிறாள் என்று சக்கரவர்த்தியிடம் கோள் சொன்னார்கள். அவரும் உண்மையை விசாரிக்காமல் அவள் மட்டில் வீண் சந்தேகப்பட்டு நெருப்பில் 15 அடி துாரம் நடக்கக் கட்டளையிட்டான்.

இப்படி நெருப்பில் நடந்த குற்றமற்ற அப்பெண் சிறிதளவும் வேதனையும் பாதிப்புமின்றி நலமாயிருப்பதைச் சக்கரவர்த்தி கண்டு, தன் சந்தேகத்திற்காக தன் மனைவியிடம் பொறுத்தல் கேட்டு, அவள்மேல் கோள் சொன்னவர்களைத் தண்டித்தான்.

இவள் தன் புருஷனின் உத்தரவின் படி கோயில்களையும் கன்னியர் மடங்களையும் கட்டுவித்து, தன் கணவன் மரணமானபின் கன்னியர் மடத்தில் சேர்ந்தாள். இவள் கன்னியாஸ்திரீயான பின் தனக்கு மகிமையுண்டாகும் யாதொரு அடையாளமும் காட்ட சம்மதியாமல் ஜெபத்திலும் கை வேளையிலும், வியாதியஸ்தரை சந்திப்பதிலும், இடையறாது தன்னை அடக்கி ஒறுப்பதிலும் தன் ஜீவிய காலத்தை செலவிட்டு சகலரும் துக்கப்பட்டு அழ, தன் ஆத்துமத்தை சர்வேசுரன் கையில் ஒப்படைத்துக் கண் மூடினாள்.

யோசனை

நாமும், விசேஷமாக கணவன் மனைவியர் துர்மார்க்கருடைய பேச்சை நம்பி ஒருவர் மற்றொருவர்மேல் வீணாக சந்தேகப்படக் கூடாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மரினுஸும் துணை . வே.
அர்ச். எமெற்றேரியுஸும் துணை. வே.
அர்ச். உவின்வாலு, ம.
அர்ச். லாமாலிஸ்ஸெ , து.