மார்ச் 04

அர்ச். காஸிமிர். இராஜா (கி.பி. 1483). 

போலந்து தேசத்தின் இராஜ குமாரனாகிய காஸிமிர் தனது பக்தி யுள்ள தாயாரின் புண்ணிய நடத்தையாலும் மாதிரியாலும் சிறு வயதில் மகா பக்தியுள்ளவராயிருந்தார்.

இவர் இராஜ அரண்மனையில் வளர்ந்த போதிலும் அவ்விடத்திலுள்ள சுகபோகம், மகிமை முதலிய உலக பற்றுக்களை முற்றிலும் புறக்கணித்து விட்டார். அடிக்கடி ஒரு சந்தி உபவாசமாயிருப்பார்.

சாதாரணமான வஸ்திரந் தரித்து மயிர்ச் சட்டை அணிந்து தரையில் படுத்து நித்திரை செய்வார். இரவு வேளையில் கோவிலுக்கு வெளியே இருந்து ஜெபத் தியானஞ் செய்வார்.

கோவில் திறக்கப்பட்டபின் உட்பிரவேசித்து அநேக திவ்விய பூசைகளைக் கண்டு, பூசை நேரத்தில் பரவசமாவார். கோவிலில் நடக்கும் பிரசங்கத்திற்கும் வேறு சடங்குகளுக்கும் போவார்.

தேவ தாயாரின் மட்டில் இவர் மிகுந்த பக்தி வைத்து அவள் பேரால் நேர்த்தியான பாடல்களை இயற்றிப் பாடுவார்.

கற்பின் மட்டில் இவருக்குள்ள அதிக பிரியத்தால் கலியாணம் செய்துகொள்ளாமல், தனக்கு 23 வயது நடக்கும்போது ஏற்கனவே கூறியிருந்த நாளில் பாக்கியமான மரணமடைந்தார்.

மரித்த 120 வருடங் களுக்குப்பின் இவரது கல்லறையைத் திறந்தபோது சரீரம் அழியாமல் இருந்ததுடன் அதினின்று மதுரமான வாசனை புறப்பட்டது. இவரால் அநேக புதுமைகள் நடந்தேறின.

யோசனை 

நாமும் அர்ச். காஸிமிரைப் பின்பற்றி ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைக்கு மாத்திரமல்ல, பிரசங்கம், ஞானோபதேசம், திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் முதலியவைகளுக்கும் போவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். லுாசியுஸ், பா.வே.
அர்ச். ஆடிரியன். வே.