மார்ச் 02

எண்பது வேதசாட்சிகள். (கி.பி.567). 

தற்போது ஆஸ்டிரியா, பவேரியா என்று சொல்லப்படும் தேசங்களில் வசித்துவந்த காட்டுமிராண்டிகளும் விக்கிரக ஆராதனைக்காரர்களுமான லம்பார்டியர் எனப்படும் ஜனங்கள் பல தேசங்களைக் கொள்ளையடித்து, நாசஞ்செய்து இத்தாலிய தேசத்தை அடைந்தார்கள்.

அங்கே ஒரு ஊரில் கிறீஸ்தவர்களுக்கு, பசாசுக்குப் படைத்தப் பண்டங்களைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். அவர்கள் நல்ல கிறீஸ்தவர்களாய் வாழ்ந்து வந்ததால் அதற்குச் சம்மதிக்கவில்லை .

பிறகு அந்த காட்டு ஜனங்கள் தாங்கள் கும்பிடும் வெள்ளாட்டுத் தலையை கிறிஸ்தவர்கள் ஆராதிக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் அனைவரும் சிரச்சேதம் செய்யப்படுவார்களென்று பயமுறுத்தினார்கள்.

கிறிஸ்தவர்களோ காட்டு ஜனங்களுக்கு பயப்படாமல், “எங்களைக் கொலை செய்தாலும் செய்யுங்கள், ஆனால் நாங்கள் வெள்ளாட்டுத் தலையை ஆராதிக்க மாட்டோம்” என்று ஒரே வாக்காய்ச் சொன்னார்கள்.

இதைக் கேட்ட அந்த முரடர், குடியானவர்களான 80 கிறீஸ்தவர்களையும் பிடித்து அவர்கள் தலையை வெட்டினார்கள்.

அந்த 80 பேரும் சர்வேசுவரனுக்காகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள்.

யோசனை 

நாமும் நமது சத்திய வேதத்தினிமித்தம் யாதொரு துன்பதுரிதம் அனுபவிக்க நேரிடும் போது முறையிடாமல் அதை அனுபவிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சேடா, மே.
அர்ச். சிம்பிளிசியுஸ். பா.
அர்ச். மார்னன், மே.
அர்ச். சார்லஸ், வே.
அர்ச். ஜோவான், மே.