கொலைக் குற்றத்திலிருந்து தந்தையைக் காத்தது

தன் தந்தை கொலைக்குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பதை ஞானப் பார்வையால் அறிந்த அந்தோனியார் தன் தந்தை குற்றமற்றவர் என்று தெரிந்து லிஸ்பனுக்குப் புறப்பட்டார்.

இத்தாலிக்கும் - லிஸ்பனுக்கும் இடையில் நெடுந்தூரம். புறப்பட சில நிமிடங்களில் லிஸ்பன் அடைந்தார். இவர் தந்தை மார்த்தீனது தோட்டத்தில் ஒரு பிணம் கிடைத்ததை வைத்து மார்தீன் தான் கொன்றிருப்பார் என்று முடிவு செய்து காவலில் வைத்தனர்.

நீதிமன்றம் சென்ற அந்தோனியார் நடுவர்களிடம் தன் தந்தை குற்றமற்றவர் என்று வாதிட்டார். அவர்கள் ஏற்க மறுத்தனர். "இறந்தவனைக் கேட்போம்” என்றார். “இறந்தவனைக் கேட்பதா? அவனை அடக்கஞ் செய்தாகி விட்டதே?” என்றனர். முடிவில் இறந்தவனின் கல்லறை தோண்டப்பட்டு சவப்பெட்டி திறக்கப்பட்டது.

அந்தோனியார். "ஓ மனிதா! இறைவன் பெயரால் கேட்கிறேன். உன்னைக் கொன்றது யார்?' எனக் கேட்டார். - சடலம் உயிர் பெற்றது. அங்கு நின்ற கொலையாளியைச் சுட்டிக் காட்டி "இவனே” என்றது.

இறந்து உயிர் பெற்றவன் தான் கட்டிக்கொண்ட ஒரு கனமாக பாவத்திற்காக அவரிடம் பாவசங்கீர்த்தனம் செய்து மீண்டும் மடிந்தான்.

உண்மைக் கொலையாளி கைது செய்யப்பட்டான். பகையின் காரணமாக பழிவாங்கும் எண்ணத்துடன் பிரேதத்தை மார்த்தீன் பிரபுவின் தோட்டத்தில் போட்டதாக ஒப்புக் கொண்டான். தந்தை மகிழ்ச்சி அடைந்தார். தன் மகனை இல்லம் வருமாறு அழைத்தார்.

“மகனே நீ சென்றதிலிருந்து உன் தாய் உன் நினைவாகவே இருக்கிறாள். நீ என்னைக் காப்பாற்றி யதைக் கேட்டால் மகிழ்வாள். வீடு வந்து செல்" என்றார். அவரோ,... "வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயுமாவான்" (மத் 12.50) என்ற இயேசுநாதரின் வார்த்தையில் பதிலுரைத்து திரும்பி விட்டார்.

அந்தோனியார் பிரசங்கம் செய்யும்போது ஞானக் காட்சியில் தந்தையின் நிலையை அறிந்ததாகவும், பிரசங்கத்தை நிறுத்தி விட்டு, சென்று சில நிமிடங்களில் திரும்பியதாகவும், ஒரே சமயம் இரு இடங்களில் இருந்ததாகவும், பின் மீண்டும் மறையுரையை தொடர்ந்ததாகவும் சில வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன.