உலகைச் சுற்றல்

ஒரு நாள் சாத்தான் அந்தோனியாரிடம் வந்து ''நீர் எவ்வளவோ புதுமைகளைச் செய்கின்றீரே! உலகினை ஒரு நொடியில் சுற்றிவர உம்மால் முடியுமா? உம் கடவுள் அதற்கு உதவுவாரா? என்னால் முடியும், என் வல்லமைதான் பெரிது'' என்றது.

அந்தோனியார் சிலுவை அடையாளத்தை தரையில் வரைய அது சுடர் விட்டு ஒளிர்ந்தது. அந்தோனியார் அதைச் சுற்றி வந்தார்.

"சிலுவைதான் உலகு, உலக மீட்புச் சின்னம் சிலுவை, சிலுவையின்றி உலக மீட்பில்லை . இயேசு உலக இரட்சகர். சிலுவையின்றி மறு உலகில்லை . சிலுவை அழியாத உலகம்" என்றார். சிலுவையைக் கண்டஞ்சி பசாசு ஓடியது.

கடுந் தவ வாழ்வு

தமது மரணவேளை அடுத்து வருவதை அந்தோனியார் அறிந்தார். அதற்குத் தன்னை தயார் செய்ய காம்போசாம்பியர் என்ற இடத்திற்குச் செல்ல விரும்பினார். இங்கு துறவிகளுக்கென ஒரு இடத்தை அந்தோனியார் நண்பன் டீஸோ கொடுத்தான். இங்கு செல்ல மேலாளர்கள் அனுமதி தேவைப்பட்டது. எனவே சபைத்தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி அதனைத் தன் குடிலில் வைத்து வெளியில் சென்றார். மடத்துத்

தலைவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் அக்கடிதத்தை சபைத் தலைவரிடம் எடுத்துச் செல்ல ஒருவரை அனுப்ப வேண்டும் என வேண்டினார். கடிதம் கொண்டு செல்பவர் வந்தார். ஆனால் கடிதம் காணப்படவில்லை: தான் அங்கு செல்வது தேவ சித்தமில்லை என எண்ணி அமைதியாயிருந்தார்.

ஒரு சில தினங்கள் சென்றதும் சபைத்தலைவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தோனியாரின் யோசனை நல்லது என்றும். அவர் காம்போசாம்பியர் செல்லலாம் எனவும் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இக் கடிதத்தை தேவதூதன் ஒருவர்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என அனைவரும் நம்பினர். தான் அங்கு செல்வது தேவ திருவுளத்திற்கு ஏற்புடையது என அந்தோனியார் அறிந்து மகிழ்ந்தார்.

காம்போசாமபியர் என்ற இடத்திலுள்ள மடத்து ஆச்சிரமத்திற்குச் சென்றார். இவரது ஆருயிர் நண்பன் டீஸோ இங்கு வாழ்ந்து வந்தான். ஓரு தினம் அவரைச் சந்திக்கச் சென்றார். அவன் எதிர் கொண்டழைத்து அன்புடன் உபசரித்தான். அவனுக்கு மரங்களால் நிறைந்த ஓர் வண்ணத்தோட்டம் இருந்தது.

அதைப்பார்த்த அந்தோனியார் ஒரு வால்நட் மரத்தைக்காட்டி அதில் தனக்கு ஒரு குடிசையினை செய்து தரவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். துறவிகளின் ஆதரவாளனான அவன் அவ்வாறே ஆறு கிளைகளைக் கொண்ட அம்மரத்தில் குடிசை கட்டிக்கொடுத்தான். இவருடன் சென்ற துறவிகள் லுக்காஸ், ரோஜர் என்பவர்களுக்காகவும் மற்றும் இரு குடில்களும் ஆக்கப்பட்டன.

தம் அந்தியகாலம் அருகில் உள்ளது என்பதை அறிந்த அவர், அதற்குத் தன்னை முற்றிலும் ஆயத்தஞ் செய்யலானார். தேவ உதவியால்தான் அனைத்தும் மாறுமென தேவ உதவிக்காக மன்றாடினார். முடிவு வரை நிற்க அவர் அருள் தேவை. இதற்கென அவர் குடிலில் கடின தவ வாழ்வை மேற்கொண்டார்.