குழந்தையின் சாட்சி

பெராரா பட்டணத்தில் ஒரு பெரும் பிரபு இருந்தான். அவனுக்கு பக்தியுள்ள ஒரு மனைவியும் இருந்தாள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

அவளது கற்பின் மேல் அவனுக்குச் சந்தேகம் உதித்தது. இக்குழந்தையின் தந்தை யாரோ? எனக் கேட்டதோடு அவளை மிகவும் துன்புறுத்தினான்.

பலநாள் துயருற்றவள் அந்தோனியாரிடம் இது பற்றிச் சொல்லி அழுது தனக்கு உதவி செய்யக் கேட்டுக் கொண்டாள். அந்தோனியார் மனமிரங்கி அவளின் இல்லம் சென்று குழந்தையை தன்னிடம் கொண்டு வரும்படி பணித்தார்.

"களங்கமில்லாக் குழந்தையே! மாட்டுத் தொழுவில் பிறந்த மாமரியின் பாலகன் திருப்பெயரால் உண்மையைச் சொல்ல உனக்கு கட்டளை இடுகிறேன்; நீ யார்! குழந்தையே உன் தந்தை யார்"? என அதிகாரத்துடன் கேட்டார்.

அந்த சின்னஞ்சிறு குழந்தை “இதோ! என் தந்தை” என பிரபுவை சுட்டிக் காட்டியது.

குடும்பத்தில் மனைவி கணவன் மீதும், கணவன் மனைவி மீதும் சந்தேகப்படுவதால் சமாதானம் குலையும் என்று அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பின் அக்குழந்தையை தகப்பனிடம் கொடுத்தார். ''இது உன் குழந்தையே!'' உன் மனைவி உண்மையுள்ளவள். "நீ அவளை அன்புடன் நடத்து” என்று புத்திமதி கூறிச் சென்றார்.

தன் தவறை உணர்ந்த அந்தப் பிரபு மனைவியிடம் மன்னிப்புக் கேட்டான். புனிதரின் ஆசீரையும் பெற்றான்.