பிரான்ஸில் பிரான்சீஸின் தோழன்

"அவர்கள் குரலொலி மண்ணுலகெங்கும் பரவிற்று. அவர்கள் வார்த்தை உலகின் எல்லைகள் வரை எட்டிற்று” (உரோ 10/18)

நற்கருணை நாதர் மீது பக்தி உள்ள நாடு பிரான்ஸ், இங்கு அந்தோனியார் வேதபோதகம் செய்யும் காலம் நெருங்கி வந்தது. ரிமினியில் பணியாற்றிய அவர் பொலோனா துறவியரின் போதகராக அனுப்பப்பட்டார். ஒரு சில மாதங்களே இங்கு தங்கிய பின் அவர் லாங்கேதோத் பட்டணம் செல்ல வேண்டியதாயிற்று. இது ஆல்பிஜீனியர்கள் பெருவாரியாக வாழ்ந்த இடம். இங்கு அசிசியார் சபைத் துறவிகளை , அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

புனித சுவாமிநாதரும் இங்கு தங்கி தம் துறவிகளுடன் பதிதத்தை அடக்கி வந்தார். 1221ல் பாப்பிறை 3வது ஓனோரியஸ் பிரான்ஸ் நாட்டு லூயிஸ்க்கு ஒரு கடிதம் எழுதினார். "பதிதத்தை அடக்குவதற்கு நாம் இது நாள்வரை மேற்கொண்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராயின. பதிதம் வளருவதை துயருடன் காண்கிறோம். இது ஒரு வேத கலாபனையை உண்டு பண்ணலாம்.

எனவே திருமறையின் மகனும் பரம்பரை கத்தோலிக்க மரபில் தோன்றிய அரசனுமான உம்மை ஆண்டவர் இயேசுநாதர் பெயரால் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாவது: கிறிஸ்துவைப் பற்றியுள்ள செயல்களில் கவனமாய் இருக்க வேண்டும். அத்துடன் உரோமாபுரி திருச்சபை உங்களுக்கு ஆன்மீக, உலகியல் உதவிகள் செய்யும் என்பதை அறிவீர்” என அதில் குறிப்பிட்டு இருந்தார். தங்களிடமுள்ள மிகத் திறமையும் தகுதியுமுடைய துறவிகளை பிரான்ஸ் நாடு அனுப்ப வேண்டுமெனத் துறவற மடங்களுக்கும் பலகலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

பாப்பிறையின் ஆணைப்படி அந்தோனியார் பிரானஸுக்கு அனுப்பப்பட்டார். முதலில் மோன்பெல்லியர் நகரில் சென்று கத்தோலிக்கரை விசுவாசத்தில் திடப்படுத்தினார். பதிதர்களை பேச வொட்டாது செய்தார். பதிதம் மிகவும் பீடித்திருந்த தூலூஸ்நகரத்திற்கு அவர் செல்ல ஆணை பிறந்தது. தயங்காது சென்றார். அந்தோனியாரை துறவிகளும் மறை ஆயரும் மிக்க மகிழ்வுடன் எதிர் கொண்டழைத்து வரவேற்றனர்.

குருமட மாணவர்களுக்கு இப்பேதகங்களை நீக்கிட தக்க முறையில் பயிற்சி தர வேண்டியது அந்தோனியாரின் தலையாய கடமையாயிற்று. மோன்பெல்லியர் என்ற இடத்தில் சுவாமிநாதர் சபையினரும் அசிசியார் சபையினரும் இரு கல்லூரிகள் அமைத்தனர். பேதகத்தை நசுக்குவதற்கென்றே இவை தொடங்கப்பட்டன. இங்கு கற்பிக்குமாறு அந்தோனியாருக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றார். அக்காலத்தில் வாழ்ந்த "தோமஸ்கலோ" என்ற மடாதிபதி அந்தோனியாரின் தூய வாழ்வையும், நுண்ணறிவையும் கண்டு வியந்தார். அத்துடன் ''அந்தோனியார் வேதக் காரியங்களை நன்றாக அறிந்தவர்; புனித ஸ்நாபக அருளப்பரைப் போல் இவர் சுடர் ஒளி வீசினார்” என எழுதி வைத்துள்ளார். பேதகத்தை அவர் அஞ்சா நெஞ்சினராய் எந்த அளவிற்கு அடக்கி, ஒடுக்கி தவ வாழ்வு நடத்தினார் என்பதை இது விளக்கும். தனது சொல்லாலும் செயலாலும் கடமையைத் தவறாமல் திருப்பணி செய்ததாலும் பல பேதகத்தினரை நல்வழிப்படுத்தினார்.

1225ல் அவர் புவான்வெலே நகர் மடத்தின் தலைவரானார். இங்கும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு. இந்நகர் மலைகளால் சூழப்பட்டது. எனவே பதிதம் இங்கு தலைகாட்டவில்லை . எனினும் பேதகத் தப்பறைகளையும் அதனால் வரும் கேடுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்து எச்சரித்தார். இதற்குப்பின் அவர் பெரி, லிமூ மாவட்டங்களின் ஊர்கள் அனைத்திலும் போதித்தார். கால் நடையாகப் பசி, பட்டினியைப் பொருட்படுத்தாது போதித்தார்.

பூர்ஜ் நகரம் அவர் சேவையால் சிறப்பாகப் பயனுற்றது. இதைத் தொடர்ந்து அவர் புரோவான்ஸ் மாகாணத்திலுள்ள ஆர்ஸ்நகர் சென்று லிமூசின் மாகாண மடத்தின் அதிபரானார். பிரான்ஸ் நாட்டில் இம்மாநிலத்தையே அவர் அதிகம் நேசித்தார். இங்குள்ள மக்கள் நல்ல கத்தோலிக்கர்; அதனால் பதிதம் இங்கு ஊடுருவவில்லை , மக்களுடன் நெருங்கிப் பழகினார். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு தத்தளிப்போருக்கு ஊன்று கோலாயிருந்தார். அரிய பிரசங்கங்கள் செய்தும், செப தப வலிமையாலும் பசாசுகளை ஓட்டினார்.

பின்னர் லிமேஜ் பட்டணம் சென்றார். மக்கள் அவரின் புகழை அறிவர். அவர் ஆடையினைத் தொட்டுக் குணமடைய வந்த பிணியாளர்கள் பலர். அவர் ஆசீரைப் பெறவும், தெய்வீக ஒளி வீசும் முகத்தினைக் காணவும் வந்தவர் ஆயிரமாயிரமாவர்.

அவரிடம் தீர்க்கதரிசன வரமிருந்தது. அவரது பிரசங்கத்தை விருப்புடன் கேட்டனர். ஆசீர்வாதப்பர் சபையினரின் பொறுப்பிலிருந்த கல்லறைத் தோட்டத்தில் உத்தரிக்கும் ஆன்மாக்கள் திருநாளன்று அவர் செய்த மறை உரை மக்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இந்நகரில் இடையிடையே தனிமையான ஒரு இடம் சென்று தன் கையாலேயே வேயப்பட்ட குடிசையில் இறைவனுடன் சல்லாபித்தார்.

1226ஆம் ஆண்டு அக்டோபர் 3ம் நாள் அசிசி பிரான்சீஸ் இறைவன் திருவடி சேர்ந்தார். இச்செய்தி அந்தோனியாருக்கு மிகுந்த துயரத்தைத் தந்தது. மற்றொரு நண்பருடன் இத்தாலி புறப்பட்டார்.

மார்செயில்ஸ் நகரில் அசிசியார் சபை துறவறமடம் இருந்தது. இத் துறைமுகப் பட்டணத்திலிருந்து கப்பலேறினார். தான் தொண்டு செய்த பிரான்ஸ் நாட்டை விட்டுச் செல்வது அவருக்குக் கடினமாக இருந்திருக்கலாம். அவர் காலத்தில் வாழ்ந்த கீர்த்தி பெற்ற ஜூலியன். என்ற மறை இயல் மேதை அவரைப் பற்றி இவ்வாறு எழுதினார்.

(1" 'அந்தோனியார் துன்பம் என்ற பாத்திரத்தை சுவையுடன் பருகினார். எதற்கும் பின் நின்றவரல்லர். எந்தத் தீயவனும் அவருக்கு அச்சத்தை விளைவிக்கவில்லை. அவனால் தனக்கு மரணம் நேரும் என எண்ணி மறைவிடம் தேடியவரல்ல. மன்னர்களின் கொடுமையான செயல்களையும், விமர்சிக்கும் உரை கல்லாக இருந்தார்"

''அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல் புரிந்து உடன் நிகழ்ந்த அறிகுறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.'' (மாற்கு 16/20)

இந்த அருள் வாக்கு அந்தோனியார் வாழ்க்கையில் முற்றிலும் நிறைவேறியது.