தப்பறைகளின் சம்மட்டி

"சென்று வா ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்று சவுல் தாவீதுக்குச் சொன்னார். (1சாமு.17/37).

தப்பறை நீக்குதல்

காத்தாரி என்ற பெயரில் ஆல்பிஜீனிய பதிதர் வாழ்ந்தனர். மனிக்கேஸிய பதிதர் தங்களை '' சுத்தமானவர்கள்'' எனக்கருதினர். இதுதான் காத்தாரி என்ற பதத்தின் பொருள். தூலூஸ் மண்டத்திலுள்ள ஆல்பி நகரில் இவர்கள் பெருவாரியாக வாழ்ந்ததால், ஆல்பிஜீனியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இரு கடவுள் உண்டு என்பது இவர்கள் போதனை. இவர்களின் கொட்டத்தை அடக்கி, திருச்சபையின் பெருமையினை நிலைநாட்ட அந்தோனியார் தூலூஸ் பட்டணம் வந்தார். விவிலியத்தில் அவருக்கு இருந்த அபார ஞானமும், வேத அறிவும் நாவன்மையும், பதிதர்களின் வாய்களை அடைத்தன. அவருடன் வாதிட எவருமே துணியவில்லை. திருச்சபையின் பெருமையினை எடுத்துரைத்தார். திவ்விய நற்கருணை பக்தியை விளக்கினார். பலர் தப்பறையை நீக்கி திருமறைக்குத் திரும்பினர்.

லுப்புயி மடத்து மேலாளர்

பிரான்ஸின் புனித நகரம் என்று அழைக்கப்பட்ட லுப்புயி என்ற இடத்தின், மடத்தின் மேலாளராக நமது தூயவர் நியமிக்கப்பட்டார். இத்தலம் தூலூஸ் நகரின் வட கிழக்கில் சுமார் 175 மைகளுக்கு அப்பால் இருந்தது. இங்குள்ள "கறுப்பு மாதா'' ஆலயம் பெயர் பெற்றது. பல திருப்பயணிகள் இங்கு வந்து கூடுவதுண்டு. மலை மேலமைந்த இவ்வாலயத்தை அடைய 265 படிகள் ஏற வேண்டும். இங்கு எவ்வித பேதகமும் இல்லை. பதிதர்களும் இல்லை. நல்ல கத்தோலிக்கர்களே இருந்தனர். பேதகத்தின் சம்மட்டி என்றழைக்கப்பட்ட அந்தோணியார், பதிதர் பெருவாரியாக வாழ்ந்த ஆல்பி நகரில் சமாதான ஞான வாழ்வு தரும் அருளாளராய் இருந்தார்.

போர்ஜே மாநாடு

மத்திய பிரான்சிலுள்ள பெரி என்ற மண்டலத்தின் தலைநகரான போர்ஜே பட்டணத்திற்கு அந்தோனியார் 1225ல் சென்றார். பிரான்ஸின் முதல் பேராயர் இங்கு தான் இருந்தார். ஆண்டகை அவர்கள் இவ்வாண்டு நவம்பர் திங்கள் 13ம் நாள் ஒரு மாநாட்டினைக் கூட்டினார். பேதகத்தை தகர்த்தெறிவது எப்படி? சிதறிய மந்தையை ஒருங்கிணைத்து ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுத்துவது எவ்வாறு? என்ற பொருட்கள் பற்றி ஆய்வு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதை மிக முக்கியமானதாய்க் கருதிய பாப்பிறையும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்தார். பேதகத்தின் சம்மட்டி என அழைக்கப்பட்ட அந்தோனி யாரை தனது ஆலோசகர்களில் ஒருவராக ஆயர் தெரிந்து கொண்டார். மாநாட்டில் தக்கதோர் சொற்பொழிவாற்றவும் அவரை அழைத்தார் இந்த ஆயர். பாப்பரசர் 3வது ஒனோரியஸ், மன்னர் 9வது லூயிஸ் என்பவரின் மதிப்பைப் பெற்றவர், மறைஉரை ஆற்றும் சமயம். அந்தோனியார் ஆயரை நோக்கி "ஓ! கிரீடம் அணிந்துள்ளவரே! உமக்கு நான் சொல்ல வேண்டிவை சில உண்டு" என வேத விளக்கத்துடன் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். இத்தகைய கவனமற்ற வாழ்க்கை நடத்துபவர்கள் பேதகத்தை எப்படி ஓட்டுவர்? என வினவினார். ஆயர் கண்ணீர் வடித்தார்.

மறையுரைக்குப் பின் தூயவரை தன் அறைக்கு அழைத்துச் சென்று, தன் இதயக் கதவைத் திறந்து தவறுகளை அறிக்கையிட்டார். பேராயர். இதன் பின் ஆன்ம மறுமலர்ச்சி காண்பதில் ஆவர்வமிக்க ஆயராக விளங்கினார். தூயவருக்குப் பணியும் அளவு தாழ்ச்சி அவரிடம் இருந்தது.

பெரும் பதவி வகிப்பவர் என்று முகத்தாட்சண்யம் பாராத அஞ்சாத நெஞ்சம் உடைய அந்தோனியார், ஒரு தடவை இறை அடியார்களைப் பற்றி கூறியதாவது:

"ஜெருசலேமின் சுவர்களின் காவலாளராக இறைவன் தன் குருக்களை அமர்த்தியுள்ளார். தங்கள் திருப்பணியில் அவர்கள் ஊக்கம் குன்றி இருப்பதால், அவர்களின் விசுவாசிகள் சாத்தானின் தந்திரத்தில் வீழ்கின்றனர். தன் வாழ்வினால், தன் மக்களுக்கு நல்வழி காட்டும் ஆயர் பாக்கியவான்”.

“நெறிகெட்ட குருக்களாலும், ஆயர்களாலும் தந்தையை தூற்றும் - தாயை அவமதிக்கும் ஒரு கும்பல் தோன்றுகின்றது. அவர்களால் இறைவன் தூற்றப்பட நேர்வதால் இவர்கள் பரம தந்தையை தூற்றுகிறவர்கள் ஆகின்றனர். தங்கள் தாயான திருச் சபையை இவர்கள் மகிமைப்படுத்துவதில்லை தங்கள் போதனையால், வாழ்வால் விசுவாசத்தை திருச்சபையில் நிலைநிறுத்துவதற்கு பதிலாக அதனை அழித்து விடுகின்றனர்".