குருமட பேராசிரியர்

"எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான்" (அரு. 12/26)

இவ்வீட்டிற்குச் சமாதானம்

ஆர்ல்ஸ் பட்டணத்திலிருந்து நமது புனிதர் மான்பெல்லியார் பட்டணம் அடைந்தார். தமது துறவியர் பிரயாணஞ் செய்யும் போது இறைமகன் இயேசு உரைத்ததைப் போல் நடந்திட வேண்டும் என அசிசியார் உத்தரவிட்டிருந்தார். எனவே எதையும் தம்முடன் எடுத்துச் செல்லாது. "இவ் வீட்டிற்குச் சமாதானம்" எனச் சொல்லி இல்லமொன்றை நாடவேண்டும். அங்கு கிடைப்பதை உண்டு நிறைவு கொள்ள வேண்டும் என்பதே அசிசியாரின் உத்தரவு. தன் துறவியர்களின் நடத்தையை வார்த்தைகளால் அல்லாத ஒரு மறை உரையாக அமைய வேண்டுமெனவே இவ்வாறு பணித்தார். அந்தோனியாரும் இதற்கேற்பச் சென்றார். மான்பெல்லியார், ஆல்பிஜீனிய பதிதரின் மையமாக இருந்தது. இதனால் அந்தோனியார் தனது திருப்பணிகென இவ்விடத்தை தெரிந்து கொண்டு அங்குள்ள மடத்தில் வாழ்ந்து வந்தார்.

அமைதியான மறை உரை

ஒரு நாள் உடன் துறவி ஒருவரிடம் "சகோதரரே! நாம் வெளியில் சென்று மறை உரை செய்து வருவோம்” என்றார் அந்தோனியார். இருவரும் புறப்பட்டு நகரின் சந்தடியான வீதிகளைக் கடந்து சந்தையை அடைந்தனர். சந்தையில் ஒரே கும்மாளம் விளையாட்டு, வேடிக்கைகள், கேளிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள். சந்தையோ அல்லோகலப்பட்டது. குனிந்த தலை நிமிராது இருவரும் சந்தையுட் புகுந்தனர். அந்தோனியார் ஓரிரு நிமிடங்கள் மெளனமாய் நின்றார். பிரசங்கம் எதுவும் செய்யவில்லை . பின்னர் திரும்பலானார்.

சகோதரர்: "தந்தையே! ஒரு பிரசங்கமும் நீங்கள் செய்யவில்லையே! மறைஉரை நிகழ்த்த அல்லவா வந்தீர்கள்” எனக் கேட்டார்.

தூயவர்: "நண்பரே! இவ்வளவு சந்தடியான இடத்தில் நாம் மெளனமாய் நின்றோமே! அது தான் உண்மைப் பிரசங்கமாகும்".

இத்தனை மக்களும் இந்த ஆரவாரச் சூழ்நிலையில் நாம் அமைதியாய் தரையைப் பார்த்தவாறே நின்றதைப் பார்க்காமலா இருந்திருப்பார்கள்? இது அவர்களின் வீண் பொழுதுபோக்கிற்குத் தக்க பாடம் கற்பித்திருக்குமல்லவா? இதைவிட்டு அமைதியாயிருங்கள் என நாம் சொல்லி மறைஉரை ஆற்றினால் என்ன பயன்? நிச்சயமாக அவர்கள் நம்மைப் பற்றி ஏளனமாய் அன்றி நன்முறையில் பேசியிருப்பார்கள். நமது ஆண்டவராம் இயேசுபிரானைப் பற்றியும் பேசியிருப்பார்கள்” என்றார்.

சங்கீத ஏடு

மடத்தில் உள்ள துறவிகளுக்கு வேதாகம ஆசிரியராகவும், மறைஇயல் விரிவுரையாளராகவும் அவ்வப்போது செயல்பட்டார். சங்கீதங்களை அருமையாக அவர்களுக்கு விளக்கினார்.

இளைஞன் ஒருவன் சபையில் சேர்ந்தான். மனத்திடன் இல்லாத அவனுக்கு. சபை விதிகள் கடினமாய்த் தோன்றியது. அவன் சபையைவிட்டு வெளியேற முடிவு செய்து விட்டான்.

அக்காலத்தில் அச்சு நூல்கள் இல்லை. எனவே சங்கீதங்களை கைப்பட எழுதி, அவற்றின் விளக்கக் குறிப்புகளையும் எழுதி ஒரு புத்தக வடிவில் நம் தூயவர் வைத்திருந்தார். அச்சு இயந்திரம் இல்லாத அக்காலத்தில் கையெழுத்துப் பிரதிகள் தான் இருந்தன. இவற்றை தயாரிப்பது மிகவும் சிரமமான வேலை, இளந்துறவி இப்புத்தகத்தைத் திருடி, ஓடி விட்டதை அறிந்த அந்தோனியார் வேதனைப்பட்டார். தன் ஏடு மீண்டும் கிடைக்க உதவிட இறைவனை வேண்டினார். விட்டகன்ற துறவி, மீண்டும் நன்மனது பெற வேண்டும் எனவும் மன்றாடினார். இளந்துறவி ஒரு பாலத்தின் மீது செல்லும்போது உருவிய வாளுடன் பசாசு அவர்முன் தோன்றியது. அதன் தோற்றம் வளர்ந்து கொண்டே வந்தது. பயத்தால் நடுங்கி நாக்கு உழறியது இளந்துறவிக்கு,

"இறைவனின் ஊழியனாகிய அந்தோனியாரிடம் திருடிய ஏட்டை சேர்த்திடு. இல்லாவிட்டால் தேவ கட்டளைப்படி உன்னைக் கொன்று ஆற்றல் எறிந்து விடுவேன்” என சாத்தான் சொன்னது.

விரைந்து மடத்திற்குத் திரும்பி ஓடி அந்தோனியாரிடம் மன்னிப்புக் கேட்டு, திருடிய கையெழுத்துப் பிரதியை அவரிடம் கொடுத்தார்: புனிதர் இளந் துறவியை இறைவனிடம் மன்னிப்புக் கேட்குமாறு அன்புடன் பணித்தார். மேலாளரும் இளந்துறவியை மன்னித்து திரும்பவும் சபையில் ஏற்றுக் கொண்டார். அதன் பின் அவர் நல்ல துறவியாக வாழ்ந்து தன் குருவென அந்தோனியாரை ஏற்று சோதனைகளை வென்று, மன அமைதியடைந்தார்.

துறவிகளுக்கு அறிவுரை 

விசுவாசத்தில் தத்தளித்த இறை மக்களுக்கு விசுவாசத்தை ஊட்டினார். பதிதரை நல்வழிப்படுத்தும் பணியில் சக துறவிகளை ஈடுபடுத்தினார். அதற்கேற்ற பயிற்சியும் அளித்தார். மக்களுக்கு அவர் அளித்த மறை உரை தெளிவாக அமைந்திருந்தது.

ஒரு மறை உரையில் புனிதர் "கிறிஸ்து தந்தையிடமிருந்து, விதைகளை விதைப்பதற்கும், திருச்சபையை நிறுவி அவற்றை அதில் சேர்த்து வைப்பதற்காகவுமே உலகிற்கு வந்தார். திருச்சபை இதனை அழியாமல் என்றும் பாதுகாக்கும். இயேசு மூன்று விதமான விதைகளை விதைத்தார். அவை:

1. அவரது தூய வாழ்வு
2. இறை அரசின் நற்செய்திகள்
3. அற்புதங்கள்

எவ்வளவு பொருத்தமாக இறைவனின் வாக்கு வித்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. வித்தைப் போன்று மறையுரையும் மண்ணில் முளைத்து கனியை தருகிறது.

"முதலில் இலை - பின் மணி - பின் தானியம்
பாவியின் மனதில் விதைக்கப்படும் இறை வார்த்தையான விதை
கொணரும் இலை அவன் பச்சாத்தாபம்
வரும் கதிர் பாவ சங்கீர்த்தனம்
பழுத்த கதிர் அவன் பெறும் அமைதி"
என சுட்டிக்காட்டியுள்ளார்:

அன்னை ஆரோஹணம் அறிவிக்கப்படல்

தேவதாயின் பரலோக ஆரோபணம் விசுவாச சத்தியமாக அன்று பிரகடனஞ் செய்யப்படவில்லை . ஆயினும் பலர் அதை விசுவசித்து விழாக் கொண்டாடினர். பரலோக ஆரோபணத் திருநாளன்று இது பற்றி அந்தோனியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிந்தனையில் ஆழ்ந்தார். மந்திர மாலை வேளையில் தேவ அன்னை அவருக்கு மகிமையுடன் தோன்றி, தான் பரத்திற்கு ஆன்மாவுடனும், உடலுடனும் எடுத்துச் செல்லப்பட்டது உண்மை என்றாள். "மந்திர மாலைக்கு அன்று வராதது ஏன்? என்று மேலாளர் கேட்ட போது நடந்ததைக் கூறினார்.