அழிவுறா மறையுரைகள்

பதுவைப்பதியர் கோடி அற்புதர் தம் மறை உரைகளை பாப்பிறை கட்டளைக்குப் பணிந்தும் ஒஸ்தியா ஆயரின் விருப்பிற்கேற்பவும் மேலாளரின் ஆணைக்கு இசைந்தும் எழுதிவைத்தார். அவைகள் காலத்தால் அழிவுறாதவை. அவற்றுள் சில வருமாறு:

தூயவர்களைப் பற்றி

அழுத குழந்தை தாயிடம் ஓடிவரும் பொழுது அதன் கண்ணீரைத் துடைத்து அவள் அதனைத் தேற்றுகின்றாள்.

இவ்வுலகத் துன்பங்களிலிருந்து இறைவனின் கரத்தினை அடைய விரைகின்றனர்.

தூயவர் ஒவ்வொருவர் முகத்திலுள்ள கண்ணீரையும் சர்வ வல்லப கடவுள் துடைத்து விடுகின்றார்.

இதோ, இதுதான் துயரங்களின் முடிவு, நமது வழியின் இலட்சியம். தேடுவோருக்கு மகிழ்வு: நாடுகின்றவருக்கு பரிசு; நமது எண்ணங்கள் அனைத்தையும் நித்திய நிறைவு அமைதியாக்குகின்றது.

ஒவ்வொரு தூயவரும் மற்றொரு தூயவரின் மகிமையில் அக்களிக்கிறார். அவ்வன்பு அவரிலிருந்து வழிந்தோடுகின்றது. மாதுளம் பழத்தைப் பாருங்கள். அதன் விதைகள் அனைத்தும் ஒரு தோலால் மூடப்பட்டிருக்கும். எனினும் ஒவ்வொன்றிற்கும் தனி அறை உண்டு. இதேபோன்று நித்திய பரலோகத்தில் தூயவர்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்தாலும், ஆதவனைப் போலவும் நிலவைப் போலவும் விண் மீன்களைப் போலவும் தகுதிக்கேற்ப மகிமையில் வேறுபட்டு இருப்பர். இந்த வேறுபாடு இருப்பினும் ஒரே மகிழ்வு அனைவரிடமும் இருக்கும்.

உங்கள் நல்வாழ்வு எனது நல்வாழ்வென நான் அகமகிழ்வேன். நீங்களும் எனது நல்வாழ்வு உங்கள் நல்வாழ்வென மகிழவேண்டும். உதாரணமாக என் கையில் ஒரு ரோசா மலர் உள்ளது. ரோசா என்னுடைய தெனினும் நீங்களும் நானும் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அதன் அழகையும் நறுமணத்தையும் சுகிக்கின்றோம். இவ்விதமே நித்திய வாழ்வு அமையும்.

அநியாய வட்டி வாங்குபவர்கள்

"அநியாய வட்டி வாங்குகின்றவர்கள் உலகில் பலர். அவர்கள் பலுகிப் பெருகி உள்ளனர். அவர்களின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போன்றது. சிங்கத்திடம் இரு காரியங்களை நாம் பார்க்கின்றோம். அதன் வளையாத கழுத்து, கூரிய பற்கள். இதே போன்று அநியாய வட்டி பெறுபவனுடைய கழுத்தும் வளையாது. தெய்வ பயம் இல்லாத அவன் இறைவன் முன்னோ அல்லது மனிதர் முன்னோ அதனை வளைப்பதில்லை. பணத்தின் அழுக்கையும் தனிவட்டியின் சாணத்தையும் போன்றிருக்கும் அவன் வாய் நாற்றமிக்கது. அவன் பற்கள் ஒரு இளஞ்சிங்கத்தினுடையதைப் போன்றவை, சிங்கம் களவாடி, அடித்து விழுங்குவதைப் போல இவனும் ஏழைகள், விதவைகள். அனாதைகளை விழுங்குகின்றான்".

குருக்களும் பாவிகளும்

குஷ்டரோகி ஒருவன் இயேசுவிடம் வந்து “உமக்குச் சித்தமானால் குணப்படுத்தும்" என்றான். கட்டவும் கட்டவிழ்க்கவும் இயேசுவால் அதிகாரம் தரப்பட்ட குருவின் முன் பாவிகளும் இவ்விதமே முழந்தாழ்படி இடவேண்டும். குஷ்டரோகி உடனே தொழுநோயிலிருந்து விடுதலை பெற்றான். ஒவ்வொரு நாளும் குருக்கள் வழியாக பாவிகளுக்கு இறைவன் இதனையே செய்கின்றார்.

- குருவானவர் மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். அவர் தனது கரத்தை நீட்டி தொட்டு குணமாக்க விரும்பவேண்டும். பாவிக்காக பரிவு கொண்டு இறைவனிடம் மன்றாடும் போது அவர் கரத்தை நீட்டுகின்றார். பாவியை ஆறுதல்படுத்தி, பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்லும் பொழுதே அவனைத் தொடுகின்றார். பாவப்பொறுத்தல் ஆசீர் அளிக்கும்போது அவன் குணமாக தான் விரும்புவதை வெளியாக்குகின்றார்.

பிறர் அறிய தவஞ்செய்ய வேண்டாம்.

"இதய இரகசியம் நமக்கும், நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களுக்கும் இடையில் கட்டப்பட்ட திரையைப் போன்றது, திரைக்குப்பின் இருப்பதை அவர்கள் பார்க்கத் தேவையில்லை. அவர்களுக்கு ஒளிதர நாம் கரங்களில் தாங்கியுள்ள ஒளியை அவர்கள் கண்டாற் போதும். ஏனெனில் இயேசு பிரான் ஒருவரே நமது பிரதான ஆசிரியர். எல்லா இதயங்களையும் அதன் ஆழ்ந்த சிந்தனைகளையும் அவர் அறிவர். திரை அதனை மறைக்காது.”

தனிமையில் இனிமை படம் "ஒருவன் உலகின் சந்தடியிலிருந்து விடுபட்டு தனிமையான ஒரு இடத்தை நாடி, தன் பாவங்களை நினைத்து கண்ணீரால் தனது பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்து, மோட்ச பேரின்பத்தின் மகிமையை தியானித்து வருவானாகில் ஆண்டவர் தம்மை அவனுக்குக் காண்பிப்பார்.”

பிறரன்பு

"பாய்மரம் கப்பலை இழுத்துச் செல்வது போல் கருணையும் உன் சகோதரர்களுக்கு உதவி செய்ய இழுத்துச் செல்கின்றது.”

"ஓ! கடின இதயமே! நீ அயலாருக்கு உதவிசெய்யச் செல்வ தில்லை . நான் என் சகோதரரின் காவலனா? உன் சகோதரரின் காவலனா?

உன் சகோதரனுக்கு நீ காவலாளியாக இருப்பாயாகில் பெரும் சம்பாவனையை அடைவாய்."

தேவ அன்னைக்கு புகழ்மாலை

"ஓ! (கெருபீம், செராபீம்) அதிதூதர்களே! உங்கள் பார்வை யைத் தாழ்த்தி பயத்துடன் சிரம்பணிந்து இறைமகனின் ஆலயத்தை, தூய ஆவியின் அருள் பெட்டகத்தை ஆராதித்து, ஓ ஆதாமின் மக்களே, உங்களுக்கு இந்த அருள்தோணி தரப்பட்டுள்ளது. உம்மைச் சுமந்த வயிறு பாக்கியம் பெற்றது" என ஆர்ப்பரிப்பீர். விசுவாசத்துடனும், பக்தியுடனும், உண்மையான சாலமோன் தந்த சிம்மாசனத்தை இசையாசின் உயர்த்தப்பட்ட அரசபீடத்தை "உம்மை தாங்கியவயிறு பேறு பெற்றது'' என்று சொல்லி தெண்டனிட்டு வணங்குவீர்.

வீண் சந்தேகங்கள்

பல பொருள்பற்றி கேள்விகள் கேட்டு அறிய வேண்டும் என்ற . ஆசை நம்மில் எழுகின்றது. எல்லாவற்றிற்கும் பதில் உரைக்கும் ஆற்றல் பெற்ற ஞானி யார்? இவையெல்லாம் சோதனைகள். இவைகளை அகற்றுவதே அவற்றிற்கு விடை காண்பதாகும். கடின விஷயங்களை அறிந்திட விரும்புகிறவன், அவற்றின் மிகுதியால் ஏழ்மையில் மூழ்குவான்.

இறைவனைப் புகழ்வோம்

இறைவனுக்குப் புதுப்பாட்டைப் பாடுவீர். உலக ஞானமனைத்தும் பழைய பாட்டு. மறை இயல் அறிவே புதுப்பாட்டு - அது இறைவனுக்கு உகந்தது. தன் இனிய தொனியால் ஆன்மாவிற்கு புதுவாழ்வைத் தருகிறது.

திருச்சிலுவை பற்றிய மறை உரை

இறைவன் மோயீசனிடம் வெண்கலத்தால் ஆன ஒரு பாம்பு செய்து அதனை ஒரு கோலில் வைத்து விடு, பாம்பால் தீண்டப்பட்டவர்கள் அதனைப் பார்த்தால் குணமடைவர் என்றார்.

வெண்கல சர்ப்பம் இறைமகனான இயேசு; வெண்கலம் காலத்தால் அழிவு படாதது. அவரின் தெய்வீகத்திற்கு அடையாளம் பாம்பு, திருச்சிலுவை உயர்த்தப்பட்டது அவரது மனித இயல்பிற்கு அடையாளம். நமது இரட்சணியத்திற்கானது.

நமது இரட்சிப்பின் ஏதுவான இயேசுவை உற்றுநோக்குவோம். ஆணிகளால் அறையப்பட்டு அவர் சிலுவையில் தொங்குவதைத் தியானிப்போம். ஆனால் "உங்கள் வாழ்க்கை உங்கள் முன் தொங்கினாலும் அதை நீங்கள் பொருட்படுத்தவில்லை'' என மோயீசன் சொன்னது போலாகின்றதே, தன் வாழ்வை விட மனிதனின் மதிப்பென்ன? உடலின் வாழ்வு, கிறிஸ்துவின் வாழ்வு, உங்கள் ஆன்மாவின் வாழ்வு எவ்வாறு தொங்கி இருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் ஏன் மனத்துயரமோ மனவருத்தமோ அடைவதில்லை! அவர் உண்மையாகவே உங்கள் வாழ்வு. பின் ஏன் அவரை விட்டகன்று போகின்றீர்கள்? இராயப்பரையும், தோமையாரையும் போல அவருக்காக சிறை செல்லவும், துன்பப்படவும் நீங்கள் விரும்பாதது ஏன்? தன் மீது இரக்கங்கொள்ளவே அவர் உங்கள் முன் சிலுவையில் தொங்குகின்றார்! இவ்வழியாய் செல்கின்றவர் களை உற்றுப்பார்த்து “இதைப்போல் துன்பம் எதுவும் உள்ளதோ? எனச் சொல்வீர் என அவர் கூறுகின்றார்.

அவர்பட்ட பாடுகள் மனுக்குலமனைத்தையும் மீட்டிடவல்லது. ஆனால் எத்தனை எத்தனைபேர் தங்களை அழிவிற்குக் கையளிக்கின்றனர். அதற்கென விரைந்து செல்கின்றனர். இதைத் தவிர அவருக்கு அதிகத் துன்பந்தரும் மற்றேதும் உள்ளதோ? எனினும் இதனை சிந்திப்பார் யாருமில்லை .

"மனுக்குலத்தைப் படைத்ததைப்பற்றி வருந்துகிறேன்” என்று முன்சொன்ன இறைவன் "அவர்களை மீட்டதைப்பற்றி வருந்துகிறேன்” என்று சொல்லமாட்டாரா? உங்கள் முகங்கள் முன் முகக்கண்ணாடி போல் நீங்கள் தொங்குகின்றீர்கள், உங்கள் பாவக்கறைகளான காயத்தைக் குணமாக்குவது அவர் சிந்திய திருஇரத்தமென்னும் மருந்து என்பதை அறிவீர்கள். அவை எவ்வளவு கனமானவை, சிலுவை என்ற கண்ணாடியில்தான் ஒருவன் தன் சுயநிலையை அறிந்துகொள்ளமுடியும். உங்கள் பாவங்கள், பழிகள், தீய இச்சை ஆகியவைகளுக்கு பரம பிதாவிடம் மன்னிப்புக் கேட்டு, துயரப்படுவோருக்காய் மன்றாடுவீர்.

உங்கள் மீட்பிற்காக அவர் சிலுவை சுமந்தார் - பலியானார். நீங்கள் சிலுவை சுமந்து அவரைப் பின்செல்கின்றீர்களா? அவரைப் பின் செல்கின்றவன் அதைச் சுமக்க வேண்டுமே!

இழிவான சிலுவை, அவர் மரணத்தால் பழியகன்று மகிமைச் சின்னமானது!