அன்னை மரியின் மீது இயேசு கொண்ட அன்பின் பிரதிபலிப்பு ***

அன்னை மரியாளின் கனிவான வேண்டுகோளுக்கிணங்க இறைமகன் இயேசு செய்த முதல் அற்புதம் .கலிலேயாவில் உள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார் ( யோவான் 2 : 1 ) இது மரியாவின் கணவர் சூசையின் சகோதரன் யோசேயினுடைய மகளின் திருமணம் . இயேசுவும் அவருடைய சீடர்களும் அத்திருமணத்திற்கு அழைப்பு பெற்றிருந்தனர் . இயேசு அவ்வீட்டில் நுழையும் போது ' சமாதானம் உங்களோடு இருப்பதாக' என்று வாழ்த்தினார் . திருமணத்தில் மணவாளன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை அவனுக்குச் சொன்னார் . தேவ அன்னையும் அவ்வாறே மணமகளுக்குக் கூறினாள் .அவர்களும் அவ்வாறே செய்தனர் .

   திருமணம் போன்ற மற்ற விழாக்களில் மக்கள் எவ்வாறு உணவு வகைகளை உண்ண வேண்டும் என்று எண்பித்துக்காட்ட , இயேசுவும் மரியாவும் பந்தியில் அமர்ந்து அவ்வுணவினை உண்டனர் . அப்பந்தியின் தலைவராக இருந்தவர் ஒரு குரு ஆவார் . விருந்துண்போருக்கு திராட்சை இரசம் , கொடுப்பது அவ்விடத்து வழக்கம் . இரசம் தீர்ந்து விட்டதை அறிந்த சூசையின் சகோதரர் , திராட்சை இரசம் தீர்ந்து விட்டதே என தவித்தார் . இதைக் கண்ட மரியாள் தன் சகோதரியின் மகன் யூதாவை அழைத்துக் கொண்டு , பந்தி பரிமாறுவோரிடம் சென்று , இரசம் தீர்ந்து போன ஆறு கல் தொட்டிகளை கொண்டு வரச் சொன்னாள் . பின் யூதாவை அனுப்பி தன் மகன் இயேசுவை அழைத்து வரச் சொன்னாள். ஏனெனில் அன்னை மரியா தன் குமாரனை யார் என்று அறிந்திருந்தாள். மரியா கடவுளின் அருள் நிறைந்தவராய் இருந்தவராய் இருந்தாமையால் தன் மகன் கடவுளின் குமாரன் என்று அறிந்திருந்தாள். தன்மகன் இயேசுவை அழைத்து , மகனே ! விருந்து உண்போருக்கு திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதேஎன்று சொன்னபோது , இயேசு அவரிடம் அம்மா , அதைப் பற்றி நாம் என்ன செய்யமுடியும் ? ( யோவான் 2 : 24 ) . விருந்து கொடுப்பவர்கள் அல்லவா கவலைப்பட வேண்டும் என்றார் . அதற்கு அன்னை உன் தகப்பனின் சகோதரரின் மகள் என்பதால் உனக்கு இதில் பங்கு உண்டு என்றாள் . இதைக் கேட்ட இயேசு என் நேரம் இன்னும் வரவில்லை என்று சொன்னார். இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அன்னை பந்தி பரிமாறுவோரைப் பார்த்து அவர் உங்களுக்கு சொல்வதையெல்லாம்செய்யுங்கள் என்று சொன்னாள் .

    தன்னை நேசிப்பவர்கள் கேளாதிருக்கும் போதே அவர்களின் தேவைகளை அறிந்து , அவர்களுக்காகத் தன் மகன் இயேசுவிடம் பரிந்து பேசுபவள் தான் நம் அன்னை மரியா . நம்மைப் பார்த்து ஆண்டவர் இயேசு சொல்வதைப் போன்று செய்யுங்கள் என்றுதான் சொல்கிறாள் .இயேசு விருந்தளிப்பவர்களின் தேவைகளை அறிந்து இப்புதுமைகளைச் செய்யவில்லை . பரிந்து பேசும் தன் தாயின் நிமித்தம் இந்த புதுமையைச் செய்தார் .

    இவ்வுலகமக்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்று எடுத்துக்காட்ட இயேசு தன் நேரம் இன்னும் வராதிருந்தும் அன்னை மரியாவின் மகிமையை உலக மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்கி இப்புதுமையைச் செய்தார் . தன் தாயின் பரிந்துரை இவ்விதமாய் கேட்கப்படும் என்பதை இங்கு உணர்த்திவிட்டார் .இறைமகன் இயேசு , முதல் புதுமையாக தண்ணீரை திராட்சை இரசமாக்கி அதை விருந்தினர்கள் பருகி சிறிதுநேரம் இன்புறச் செய்தார் . இறுதியில் திராட்சை இரசத்தை தன் சொந்த இரத்தமாக மாற்றி அதைப் பருகுபவர்கள் அனைவரும் நிலைவாழ்வு பெற்று எக்காலத்திற்கும் இன்புற்று வாழ எண்ணியவராய் , அதற்கு முன்னோடியாக தண்ணீரை இன்ப இரசமாக மாற்றினார் . பின்பு அவர் , " இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் " என்று பணியாளர்களிடம் கூறினார் . அவர்களும் அவ்வாறே செய்தனர் ( யோவான் 2 : 8 ) . அப்பந்தியின் தலைவராக இருந்த குருவும் , பிறரும் அதைச் சுவைத்து மிகவும் பாராட்டினார்கள். ஆனால் தண்ணீர் புதுமையாக இரசமாய் மாறியதை அப்போது அறியாதிருந்தார்கள் . இயேசுவும் , அவர் தாயும் கடைசிப் பந்தியில் இருந்ததை அறிந்து அக் குரு வியப்புற்றார் . புனித யோவான் இதையே முதல் புதுமையாக குறிப்பிடுகிறார் .