மரியாளின் யுகம் ***

 " மரியாளின் உற்பவம், பிறப்பு, வாழ்வு, வாழ்வின் திருநிகழ்ச்சிகள், உயிர்ப்பு, விண்ணேற்ப்பு ஆகியவற்றில் ஏறக்குறைய எல்லா மனிதரிடமிருந்தும் தேவமாதாவை இறைவன் மறைத்து வைக்க கிருபை கூர்ந்தார். பிந்திய காலங்களில் மாதா இருக்கும் இடம் தலைசிறந்ததாக இருக்கும். மற்றெல்லாக் காலங்களையும் விட இக்காலங்களில் மாதா இரங்குவதிலும், வல்லமையிலும், வரப்பிரசாதம் வழங்குவதிலும் அதிகமாக விளங்கி துலங்கவேண்டும். மாதா வழியாகவே உலகத்தின் மீட்பு ஆரம்பிக்கப்பட்டது. அது முற்றுபெறவும் வேண்டும். மாமரி இதுவரை இருந்ததை விட அதிகமாக அறியப்படவேண்டும். அதிகமாக மதிக்கப்படவேண்டும். என கடவுள் விரும்புகிறார் " என்று மரியாளின் சுவிசேஷகர் புனித
 லூயிஸ்மரிய மோன்போர்ட் கூறுகிறார்.

 " உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும், நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய் " { தொடக்க நூல் 3 : 15 }

இறைவன் ஒரேயொரு பகையை தான் ஏற்படுத்தினார். அது சமாதானத்திற்கு வரமுடியாதது. ஏதேன் தோட்டத்தில் உண்டான இந்த பகை உலக முடிவில் பயங்கரமாயிருக்கும். சாத்தானின் தலை நசுக்கப்படும். இறைவன் வெற்றி பெறுவார். கடவுள் மாதாவை வைத்தே உலக சிருஷ்டிப்பை( படைப்பை) ஆரம்பித்தார். அதுபோல் மாதாவை வைத்தே முடிப்பார். மாதாவின் மகிமை துலங்கும் இப்பிந்திய காலம் " மரியாளின் யுகம் " என்றழைக்கப்படும். சமீப நூற்றாண்டுகளாக இறைவன் பல காட்சிகள், வெளிப்படுத்தல்கள் மூலமாக மாதாவை பற்றியும், இறுதி காலத்தைப் பற்றிய பல உண்மைகளை மாதா வழியாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

   ஆன்மாக்களுக்கு பரலோக வரப்பிரசாத மழையைப் பொழிந்த அற்புத சுருபக் காட்சியுடன் இணைந்த வல்லமையுள்ள கன்னிகையின் காட்சி 1830 - ல் புனித கத்தரீன் லாபோருக்கு அருளப்பட்டது.

   1846 - ல் சலேத் நகரில் மெலானிக்கு மாதா மாபெரும் தீர்க்க தரிசனக்காட்சி அளித்தார்கள். 1858 - ல் லூர்து நகரில் புனித பெர்னத்தம்மாளுக்கு மாதா 18 முறை செபமாலை ஏந்தியவர்களாய்த் காட்சியளித்தார்கள். 1917 - ல் பாத்திமாவில் லூஸியா, பிரான்ஸிஸ், ஜஸிந்தா ஆகிய மூன்று சிறுவர்களுக்கு உலகமே அதிசயித்த சூரிய அற்புதத்தை மாதா நிகழ்த்தினார்கள். 1943 - ல் இத்தாலியிலுள்ள மோன்டிசியாரியில் தேவ இரகசிய ரோஜாவாகக் காட்சி தந்து மறக்கப்பட்டு மறைக்கப்பட்ட பாத்திமா காட்சியின் செய்தியை ஞாபகமூட்டினார்கள். எனவே " மரியாளின் யுகம் " என்று அழைக்கப்படுகிறது இக்காலத்தில் நாம் மாதாவை நோக்கி மன்றாடி அவர்களுடைய பாதுகாப்பையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்வோமாக.