கனவின் வழியாகப் பேசும் கடவுள் ***


நிகழ்வு

 கி.மு. 44 ஆம் ஆண்டு, மார்ச் 14 ஆம் நாள் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர் தன்னுடைய மனைவி கல்புனியாவோடு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் கல்புனியா தூக்கத்தில் ஏதோ பேசுவதைக் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த ஜூலியஸ் சீசர், அவளைத் தட்டி எழுப்பி, “உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டான் ஜூலியஸ் சீசர். “அன்பரே! நாளைய நாளில் நீங்கள் செனட்டிற்குப் போகும்போது, அங்கு நீங்கள் கொல்லப்படுவதும் என்னுடைய மடியில் இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடப்பதுமாய்க் கனவு கண்டேன். அதனால் தயைகூர்ந்து நாளைய நாளில் நடக்கும் செனட்டிற்கு நீங்கள் போகவேண்டாம்” என்றாள்.   “சரி, நீ சொல்வதுபோல் நாளை நான் சென்ட்டிற்குப் போகமாட்டேன்” என்று உறுதிகூறினான் ஜூலியஸ் சீசர்.

 மறுநாள் காலையில் ஜூலியஸ் சீசர், தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய நெருங்கிய நண்பனாகிய புரூட்டசிடம், “இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளைக்குத் தள்ளிவைக்கிறேன்... அதனால் கூட்டிற்கு வரும் எல்லாரிடமும் செய்தியைச் சொல்லிவிடுங்கள்” என்றான். அதற்கு அவன், “பேரரசரே! இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைத்தால், எல்லாரும் உங்களைக் குறித்து, ‘இவன் கையாலாகாதாவன்’ என்று தவறாகப் பேசுவார்களே” என்று நயவஞ்சகமாகப் பேசினான். இதைக்கேட்டு சற்று தடுமாற்றம் அடைந்த ஜூலியஸ் சீசர், “ஆமாம், நீ சொல்வதுதான் சரி” என்று தன்னுடைய மனைவியின் வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, புரூட்டசோடு செனட் நடைபெறும் இடத்திற்குச் சென்றான். 

 போகிற வழியில் ஜூலியஸ் சீசருக்கு நெருக்கமான ஒருவர், நடக்கப்போகும் சதியைக் குறித்து முன்கூட்டியே தெரிந்தவராய் அவரிடம் வந்து, “இதை நீங்கள் மட்டும் படியுங்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார். ஜூலியஸ் சீசர், அது ஒரு மனு என்று நினைத்துக்கொண்டு மற்ற காகிதங்களோடு வைத்துக்கொண்டான். செனட் நடைபெறவிருந்த இடத்தை ஜூலியஸ் சீசரும் புருட்டஸும் அடைந்த பிறகு, அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல் செனட்டில் இருந்தவர்களும் ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பனுமாகிய புரூட்டஸும் ஜூலியஸ் சீசர்மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டார்கள். அவனோ இரத்த வெள்ளத்தில் இறந்துபோனான். 

 தன்னுடைய மனைவிக்குத் தோன்றிய கனவின் வழியாக ஜூலியஸ் சீசர் எச்சரிக்கைப்பட்ட போதும், அதற்குப் பணிந்து நடக்காததால் அவன் கயவர்களால் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு முற்றிலும் மாறாக, கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு – கடவுளின் தூதுவருடைய குரலுக்குச் - செவிகொடுத்த யோசேப்பைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகின்றது. யோசேப்பிற்குக் கனவின் வழியாகச் சொல்லப்பட்ட செய்தி என்ன? அதற்கு அவர் எவ்வாறு கீழ்ப்படிந்து நடந்தார்? நாம் எப்படி ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

யோசேப்பு என்னும் நேர்மையாளர் 

 நற்செய்தி வாசகத்தில், நேர்மையாளர் யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரை மறைவாய் விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். இங்கு யோசேப்பு மரியாவிடம் (பெருந்தன்மையோடு) நடந்துகொண்டவிதம் கவனிக்கத்தக்கது.

 மண ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்ணிடம் கன்னிமை காணவில்லை என்றால், அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 22: 20-21). மேலும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், அந்தப் பெண்ணின் அருவருக்கத்தக்க செயலைப் பார்த்துவிட்டு, அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி விடலாம். இதையும் மோசேயின் சட்டம் கூறுகின்றது (இச 24:1). ஆனால், யோசேப்போ தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்னமே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைக் கல்லால் எறியவுமில்லை; மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுக்கவுமில்லை. மாறாக, மறைவாக விலக்கிவிட முடிவுசெய்கின்றார். இவ்வாறு அவர் நேர்மையாளராய் நடந்துகொள்கின்றார்.

 திருவிவிலியம் ‘நேர்மையாளர்’ என்பவரைச் சக மனிதரிடம் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்பவராகச் சுட்டிக்காட்டுக்கின்றது. இயேசு சொல்கின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உவமையில் வருகின்ற நேர்மையாளர்கள் (மத் 25: 37-39)  சகமனிதர்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடப்பார்கள்; நற்செயல் புரிவார்கள். அந்த வகையில் யோசேப்பும் மரியாவின் மட்டில் இரத்தத்தோடு நடத்துகொண்டு, நேர்மையாளராய் மிளிர்கின்றார்.     

கனவின் வழியாகப் பேசும் கடவுள் 

 யோசேப்பு, மரியாவைத் தனியாக விலக்கிவிடத் திட்டமிட்ட சமயத்தில்தான், கடவுள் தன்னுடைய தூதர்மூலம், யோசேப்பின் கனவில் தோன்றிப் பேசுகின்றார். கடவுள் கனவின் வழியாகப் பேசுவார் என்பதற்குத் திருவிவிலியத்தில் பல சான்றுகள் இருக்கின்றன. “.....கனவில் அவனோடு பேசுவேன்’ (எண் 12:6) என்ற இறைவார்த்தையும், உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளையோர் காட்சிகளையும் காண்பார்கள் (யோவே 2: 28) என்ற இறைவார்த்தையும் இன்னும் ஒருசில இறைவார்த்தைகளும் (மத் 2:12,13,19,22) இதற்குச் சான்று பகர்கின்றன. 

 யோசேப்பின் கனவில் தோன்றிய கடவுளின் தூதர் அவரிடம், மரியா தூய ஆவியார்தான் கருவுற்றிருக்கின்றார் என்பதையும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம் என்பதையும் அவர் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவ்வாறு கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு – கடவுளின் தூதருக்கு யோசேப்பு செவிமடுத்தாரா? அதன்பிறகு என்ன நடந்தது என்பன குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இறைத் திருவுளத்தின்படி நடந்த யோசேப்பு 

 கடவுளின் தூதர் கனவின் மூலம் கடவுளின் திருவுளத்தை யோசேப்பிடம் எடுத்துச் சொன்னதும், அவர் தன்னுடைய மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். இதன்மூலம் யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகும் பேறுபெறுகின்றார், மட்டுமல்லாமல், ‘நம்மோடு இருக்கும் கடவுளின்’ உடனிருப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணரத் தொடங்குகின்றார். 

 யோசேப்பு கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தது, நமக்கு முன் ஒரு கேள்வியை எழுப்புகின்றது. அது என்ன என்றால், நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? என்பதாகும். நிறைய நேரம் நாம் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற ஆகாசு மன்னனைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்காமல், நம்முடைய விருப்பத்தின்படியே நடந்தே அழிந்து போகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் யோசேப்பைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மையே கையளித்து, அதற்குப் பணிந்து நடந்தால், இயேசு கண்ட இறையாட்சிக் கனவு நனவாகும் என்பது உறுதி.

சிந்தனை 

 ‘உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ நான் வருகின்றேன்’ (எபி 10: 9) என்று இயேசு கிறிஸ்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவார். ஆதலால், நாமும் நம் ஆண்டவரைப் போன்று, யோசேப்பு, மரியாவைப் போன்று ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.  

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ் 

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.