கிறிஸ்துப் பிறப்புப் பெருவிழா ***


பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி கொண்டுவரும் இயேசு

நிகழ்வு 

 அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். அப்பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடம், “அன்பு மாணவச் செல்வங்களே! இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன்... அதனால் எல்லாரும் ஒரு காகிதத்தைக் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். ஆசிரியர் சொன்னதற்கேற்ப மாணவர்களும் ஒரு காகிதத்தை எடுத்துக்கொண்டு போட்டிக்குத் தயாரானார்கள்.

ஆசிரியர் தொடர்ந்து பேசினார்: “மாணவச் செல்வங்களே! ‘கிறிஸ்மஸ்’ என்றதும் உங்களுடைய நினைவுக்கு என்ன தோன்றுகின்றது... அதை உங்களுடைய கையில் இருக்கும் காகிதத்தில் எழுதுங்கள், சிறப்பாக எழுதுவோருக்குப் பரிசு உண்டு.” ஆசிரியர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களுடைய கையில் வைத்திருந்த காகிதத்தில் தங்களுக்குத் தோன்றியதை எழுதினார்கள். ஒருசில மாணவர்கள் ‘பரிசுகள்’ என்றும் இன்னும் சில மாணவர்கள் ‘கிறிஸ்மஸ் தாத்தா’ என்றும் வேறு சில மாணவர்கள் ‘கிறிஸ்மஸ் கீத ஆராதனை’ என்றும் மற்றும் சில மாணவர்கள் ‘புத்தாடைகள்’ என்றும் எழுதினார்கள். 

எல்லா மாணவர்களும் எழுதியை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்த ஆசிரியர் இறுதியில் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்மஸ் என்றதும் பரிசுகளும் கிறிஸ்மஸ் தாத்தாவும் புத்தாடைகளும் நினைவுக்கு வருவது சரிதான். ஆனால், உங்களில் யாருக்கும் கிறிஸ்மஸ் என்றதும் கிறிஸ்துவோ, கிறிஸ்து பிறந்த நாளோ நினைவுக்கு வராதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.” ஆசிரியர் இவ்வாறு சொன்னது கேட்டு மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தார்கள்.

கிறிஸ்து பிறப்பில் கிறிஸ்துவுக்கும் அவருடைய விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவையே மறந்துவிட்டு, வெளி அடையாளங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழும் நம்மைக் கேள்வி கேட்பதாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் நாம் கொண்டாடும் கிறிஸ்துப் பிறப்புப் பெருவிழா நமக்கு எத்தகைய செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

வரலாற்றில் தோன்றிய இயேசு 

 கிறிஸ்துப் பிறப்பு நம் அனைவருக்கும் சொல்லக்கூடிய முதன்மையான செய்தி, கடவுள் வரலாற்றில் செயல்பட்டார் என்பதாகும். இதையே வேறு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், கிறிஸ்து பிறப்பு என்பது கட்டுக்கதையோ, புராணமோ அல்ல, அது வராலாற்றில் நடந்த சிறப்பான, தரமான, முக்கியமான ஒரு நிகழ்வு.

லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் பிறப்பைக் குறித்துப் பதிவு செய்யும்பொழுது, அகுஸ்து சீசர் உரோமைப் பேரரசராக இருந்த பொழுது, சிரிய நாட்டில் குரோனியு ஆளுநராக இருந்தபோது, தாவீதின் ஊராக பெத்லகேமில் இயேசு பிறந்தார் என்று பதிவுசெய்கின்றார். அப்படியானால், இயேசுவின் பிறப்பு வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு, அதுவும் சாதாரண நிகழ்வு அல்ல, முக்கியமான நிகழ்வு என்பது உண்மையாகின்றது. இயேசு வரலாற்றில் தோன்றினார் என்றால், அவர் மக்களுடைய துன்ப துயரங்களில் பங்கு கொண்டார்; அவற்றைப் போக்கத் தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார் என்பது நிரூபணமாகின்றது.  

மகிழ்ச்சியைக் கொண்டுவந்த  இயேசு 

 வரலாற்றில் தோன்றிய இயேசு, மக்களுக்கு எதைக் கொண்டுவந்தார் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஒவ்வொரு குழந்தையும் இப்பூவுலகில் பிறக்கின்றபோது, அது தன்னுடைய பெற்றோருக்கும் தன்னுடைய உற்றார் உறவினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. ஆனால், இயேசுவின் பிறப்போ ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கின்றது. வயல்வெளியில் இருந்த கிடையைக்  காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத் தோன்றுகின்ற வானதூதர்கள் சொல்லக்கூடிய, “எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கின்றேன்....” என்ற வார்த்தைகள் (லூக் 2: 10) இந்த உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. 

 இயேசுவின் பிறப்பு எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாய் இருக்கின்றது என்கின்றபோது, அதுவே உன்னதத்தில் கடவுளுக்குக் மாட்சியும் உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதியும் உண்டாகக் காரணமாக இருக்கின்றது. எவ்வாறெனில் இயேசு, தந்தைக் கடவுள் தன்னிடம் கொடுத்த பணியினைச் செய்ததன் மூலம் அவரை மாட்சிப்படுத்தினார்  (யோவா 17:4). அதே நேரத்தில் அவருடைய அமைதியை அதை ஏற்றுக்கொள்ளும் (லூக் 10:6) அவருக்கு உகந்தோருக்குக் கிடைக்கச் செய்தார். இவ்வாறு கிறிஸ்துவின் பிறப்பு எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாகவும் அவருக்கு உகந்தோருக்கு அமைதியைத் தருவதாக இருக்கின்றது.

மீட்பராய் வந்த இயேசு 

 வரலாற்றில் தோன்றி, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி தந்த இயேசு, எப்படிப்பட்டவராய் இப்பூமிக்கு வந்தார் என்பதைத் தெரிந்துகொள்வோம். வானதூதர்கள் இடையர்களுக்குத் தோன்றுகின்றபோது, தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், “ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கின்றார்” என்பதாகும். ஆம், இயேசு இந்த உலகிற்கு மீட்பராக, அதுவும் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பவராகப் பிறந்தார் (மத் 1:21).

 முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தினால் கடவுளோடு இருந்த உறவினை முறித்துகொண்ட மனித இனத்தை, உலகின் பாவங்களைப் போக்க (யோவா 1:29) மீட்பராக வந்த உலக இயேசு மீண்டும் ஒப்புரவாக்கினார். இதனால் மனித இனம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டது. 

 அடுத்ததாக, ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு ஏன் மீட்பராக வரவேண்டாம் என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதில் தருவதாக இருக்கின்றது கீழே உள்ள ஒரு கவிஞரின் வார்த்தைகள்: “மனிதர்களுக்குத் தகவல்கள்தான் அதிகம் தேவை என்றால், அவர் ஒரு கல்வியாளராகப் பிறந்திருப்பார்; மனிதர்களுக்குத் தொழில்நுட்பம்தான் அதிகம் தேவை என்றால், அவர் ஒரு விஞ்ஞானியாகப் பிறந்திருப்பார்; மனிதர்களுக்கு பணம்தான் அதிகம் தேவை என்றால், அவர் ஒரு பொருளாதார நிபுணராகப் பிறந்திருப்பார்; மனிதர்களுக்கு மகிழ்ச்சிதான் அதிகம் தேவை என்றால், அவர் ஒரு நகைச்சுவையாளராகப் பிறந்திருப்பார்; ஆனால், மனிதர்களுக்கு அதிகம் தேவைப்பட்டது பாவத்திலிருந்து விடுதலை. அதனால்தான் அவர் மீட்பராகப் பிறந்தார்.”

 ஆம், இவ்வுலகிற்குப் பாவத்திலிருந்து விடுதலை தேவைப்பட்டது. அதனாலேயே அவர் மீட்பராகப் பிறந்தார். ஆகையால், மீட்பராகப் பிறந்திருக்கும் இயேசுவை அன்று ‘விடுதியில் இடமில்லை’ என்று சொல்லி விரட்டிவிட்டவர்கள் போன்று, நாமும் நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் இடமில்லை என்று சொல்லி விரட்டியடிக்காமல், அவர் நம்முடைய உள்ளத்தில் தங்குவதற்கு இடம் கொடுப்போம். அதன்மூலம் அவர் தருகின்ற பெரும் மகிழ்ச்சியைப் பெறுவோம்.    

சிந்தனை 

 ஆண்டவர் இயேசு தன்னுடைய பிறப்பினால் எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார். நாம் நம்முடைய சொற்களால், வாழ்வால் எல்லாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். அதன்வழியாக குழந்தை இயேசுவின் அருளை நிறைவாகப் பெறுவோம். 

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ் 

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.