வருகின்றார்; நோக்குகின்றார்; கூறுகின்றார் திருவருகைக்காலம் மூன்றாம் வாரம்


வருகின்றார்; நோக்குகின்றார்; கூறுகின்றார்”

நிகழ்வு

 அது ஒரு சிற்றூர். அதில் இளம்பெண் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் அவ்வூரில் இருந்த பங்குத்தந்தையிடம் சென்று தன்னுடைய மனக்குமுறலை எடுத்துச் சொன்னார்: “சுவாமி! நான் இயேசுவை அன்பு செய்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்கின்றேன்; என்னால் முடியவில்லை. நீங்கள்தான் இதற்கு உதவிசெய்யவேண்டும்.”

 அந்த இளம்பெண் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை அவரிடம், “இயேசு என்னை அன்பு செய்கின்றார் என்ற வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாகச் சொல். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்பதைப் பார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். பங்குத்தந்தை சொன்ன வார்த்தைகளை மனத்தில் பதித்தவராய், அந்த இளம்பெண், “இயேசு என்னை அன்பு செய்கின்றார்; இயேசு என்னை அன்பு செய்கின்றார்” என்ற வார்த்தைகளைத் திரும்பித் திரும்பச் சொல்லிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்.

 மறுநாள் அவர் மீண்டுமாகப் பங்குத்தந்தைப் பார்க்க வந்தார். இந்த முறை அவருடைய முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. அவர் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார். ஆம் ‘இயேசு என்னை அன்பு செய்கின்றார்’ என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருடைய வாழ்வை மிகவும் மாற்றியிருந்தன. 

 இயேசு நம்மை மிகவும் அன்பு செய்கின்றார். இந்த உண்மையைதான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இயேசு நம்மை மிகவும் அன்பு செய்வதால், நம்மைத் தேடிவந்து, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். இன்றைய முதல் வாசகமும் மெசியா நம்மைத் தேடி வந்து, நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியைத் தருகின்றார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இனிமைமிகு பாடல்கள் நூலின் பின்னணி

 இன்றைய முதல் வாசகமானது இனிமைமிகு பாடல்கள் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் யார் என்ற போதிய தெளிவில்லை. இந்நூல் கிமு மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 

 காதலன், காதலி அல்லது தலைவன் தலைவிக்கு இருவருக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றத்தைக் கவிதை வடிவில் எடுத்துச் சொல்கின்றது இந்நூல். இந்நூல் தலைவன் தலைவி இருவருக்கும் இடையே நிகழும் அன்புப் பரிமாற்றத்தை விளக்கிச் சொல்வதாக இருந்தாலும், ஆண்டவரைக் கணவராகவும் இஸ்ரயேலரை மனைவியாகவும் (ஓசே 2: 16-19) இயேசுவை மனவாளனாகவும் திருஅவையை மனவாட்டியாகவும் (திவெ 21: 2,9) பார்க்கின்ற ஒரு பழக்கம் திருவிவிலியத்தில் இருப்பதால், இந்த நூலில் வருகின்ற தலைவரை ஆண்டவராகவும் தலைவியை நாமாவாகவும் பொருத்திப் பார்ப்பது மிகவும் நல்லது. 

அன்போடு  வருகின்றார் 

 இன்று முதல்வாசகமாக நாம் வாசிக்கும் பகுதியில், தலைவன் தன் தலைவியைத் தேடி வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். தலைவன் எப்படித் தன் தலைவியைத் தேடி வருகின்றாரோ, அதுபோன்று ஆண்டவராகிய கடவுள் நம்மைத் தேடிவருகின்றார். மட்டுமல்லாமல், தன்னுடைய அன்பையெல்லாம் நம்மீது பொழிய வருகின்றார். ஆகையால், நாம் செய்யவேண்டியதெல்லாம், தலைவன் வருகின்றபொழுது, தலைவி எப்படி காத்திருந்தாளோ, அதுபோன்று ஆண்டவர் நம்மைத் தேடி வருகின்றபோது அவருக்காக ஆவலோடு காத்திருப்பதே நல்லது 

அன்போடு நோக்குகின்றார் 

 இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் இரண்டாவது முக்கிய வார்த்தை நோக்குகிறார் என்பதாகும். ‘தலைவன் தலைவியைப் பின்னல் தட்டிவழியாக நோக்கினார்’ என்று வாசிக்கின்றோம். இதையே நாம் நம் ஆண்டவர் இயேசு மக்களைக் (கூர்ந்து) நோக்கினார் என்பதோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்க்கலாம். ஆண்டவர் ஒருவரைக் கூர்ந்து நோக்கினார் (மாற் 10: 21) எனில், அவர்மீது தனிக்கவனம் செலுத்தினார் என்பதுதான் பொருளாக இருக்கின்றது. ஆகையால், நம்மைக் கூர்ந்து நோக்குகின்ற அல்லது நம்மீது தனிக்கவனம் செலுத்துகின்ற ஆண்டவரின் அன்பிற்கு உகந்தவர்களாய் அவர் வழியில் நடப்பது சிறந்தது. 

அன்போடு  பேசுகின்றார்

இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் மூன்றாவது முக்கியமான வார்த்தை  ‘கூறுகின்றார்’ என்பதாகும். தலைவர் தன் தலைவியிடம் “விரைந்தெழு என் அன்பே! என் அழகே!” என்று கூறுகின்றார். இதனை ஆண்டவர் இயேசு நம்மை “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது...” (மாற் 1:14) என்று கூறுவது போன்று எடுத்துக்கொள்ளலாம். ஆம், ஆண்டவர் நம்மோடு அன்போடு பேசுகின்றார்; நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைக்கின்றார். ஆகையால், நம்மிடம் அன்போடு வருகின்ற, அன்போடு நோக்குகின்ற, அன்போடு பேசுகின்ற அன்பு இறைவனுக்கு உகந்த மக்களாக வாழ நாமும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும் மக்களாய் வாழ்வோம். 

சிந்தனை

 ‘இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவினுடைய அன்பின் அகலம், நீளம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத இந்த அன்பை உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக’ (எபே 3:18) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கிறிஸ்துவின் பேரன்பை உணர்ந்து, ஒருவர் மற்றவரை அன்புசெய்து, அவரது அன்பிற்கினிய மக்களாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ் 

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.