ஹென்றி போஃர்டிற்கு உந்து சக்தியாக இருந்த அவரது மனைவி:
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு (1863-1947). இவர் தன்னுடைய வாழ்வின் தொடக்கக் காலக்கட்டத்தில் மோட்டார் துறையில் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். அவ்வாறு இவர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்பொழுது தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்தார். இதனால் இவரது உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் யாவரும் ‘இவரைப் பிழைக்கத் தெரியாதவர்’, ஒன்றுக்கும் உதவாதவர்’ என்று எள்ளி நடையாடினர். அத்தகைய தருணங்களில் இவரது மனைவிதான் இவருக்குப் பக்க பலமாக இருந்தார். பின்னாளில் மோட்டார் துறையில் ஹென்றி ஃபோர்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தார். இவையெல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தவர் இவரது மனைவி என்றால் அது மிகையில்லை.
ஆம், ஹென்றி ஃபோர்டும் அவரது மனைவியும் திருமணத்தை உயர்வாக நினைத்தார்கள். அதனாலேயே அவர்கள் தங்களது இல்லற வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு உந்து சக்தியாக இருந்தார்கள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட முதல் வாசகம் ‘திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்’ என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று, அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” (தொநூ 2: 18) என்று பெண்ணைப் படைத்தார். மேலும் “விபச்சாரம் செய்யாதே” (விப 20: 14), “பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே” (விப 20: 17) என்று சொல்லி, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இத்தகைய பின்னணியில், இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்... காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்” என்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சகோதரனின் மனைவியோடு வாழ்ந்து வந்த காமுகனாகிய ஏரோதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த ஏரோது திருமணத்தை உயர்வாக எண்ணாமல், காமுகனாய் வாழ்ந்தால் அதற்கேற்ற தண்டனையைப் பெற்றான். ஆகவே, நாம் திருமணத்தை உயர்வாக மதித்து, உண்மையான அன்பில் நிலைத்திருப்போம்.
சிந்தனைக்கு:
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று (மத் 5: 28).
நல்ல பெண்ணை மணந்திருப்பது வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகமாகும். தீய பெண்ணை மணந்திருப்பது துறைமுகத்திலேயே புயல் வீசுவதாகும் – ஜே.பி.சென்.
காதல்காலத்தில் மனிதர் கனவு காண்கின்றனர்; திருமணத்தில் விழிப்படைகின்றனர் – போப்.
இறைவாக்கு:
‘அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்’ (கொலோ 3: 14) என்பார் புனித பவுல். எனவே, நாம் அன்பைக் கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.