மரியாள், கடவுளின் தாய் ***


(Mary, Mother of God)

திருவிழா நாள்: ஜனவரி 1

புதிய வருடத்தின் முதல் நாளை புதுவருடத் திருவிழாவென கொண்டாடி, நாம் அகமகிழ்ந்தாலும், ஜனவரி முதல் நாளை அன்னையாம் திருஅவை இறைவனின் தாய், தூய கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்து விழாவெடுக்கின்றது.

மத்தேயு மற்றும் லூக்கா எழுதிய நற்செய்திகள், மற்றும் இஸ்லாமியர்களின் புனித வேத நூலான “குரான்” (Quran), ஆகியன, மரியாளை “கன்னி” என்றுரைக்கின்றன. புதிய ஏற்பாடு, மற்றும் “குரான்” (Quran), ஆகியவற்றின்படி அன்னை மரியாள் இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவர். புனிதர் யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால், சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி, மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா எழுதிய நற்செய்திகள் மரியாளை கன்னி எனக்குறிக்கின்றன. கிறிஸ்தவ மரபுப்படி மரியாள் இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருத்தாங்கினார். இது எல்லா கிறிஸ்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்படை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியாள் புனிதர் யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித் திருச்சபை, மற்றும் ஆங்கிலிக்கன் திருச்சபை, ஆகியன செப்டம்பர் மாதம் 8ம் நாளில் கொண்டாடுகின்றன.

புதிய வருடத்தின் முதல் நாளான ஜனவரி முதல் நாள் மட்டுமல்ல, எல்லாம் வல்ல பரலோக தந்தையால் எமது வாழ்வில் புதிது புதிதாகத் தரப்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புது வருடத் திருவிழாவென நாம் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறலாம்.

கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகளான நாம், இறை மகன் இயேசுவின் தாய் தூய கன்னி மரியாளுக்கு வருடம் முழுவதும் எத்தனையோ பெருவிழாக்கள் எடுப்பது வழக்கம். அவற்றுள் வருடத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும். தூய கன்னி மரியாள், இறைவனின் தாய் என்னும் பெருவிழா தனிச் சிறப்புடையதென இறையியலாளர்கள் பலரும் கருதுகின்றனர்.

இன்றைக்கு 2020 வருடங்களுக்கு முன்னர், பெத்தலகேம் மாட்டுத் தொழுவத்தில் தனக்குப் பிறந்த குழந்தை எவ்வாறானதாக இருக்குமோவென, தங்களுக்கு இடையர்களால் சொல்லப்பட்டவை, தாங்கள் கேட்டவை, கண்டவை தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் தம்முள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்த அன்னை மரியாளை, இன்றைய நாளில் லூக்கா நற்செய்தியாளர் எமக்கு அறிமுகம் (லூக்கா 2: 17-19) செய்து வைக்கின்றார்.

நற்செய்தியை நாம் ஆழமாக உற்றுநோக்குமிடத்து, தாயின் வயிற்றிலே நாம் உருவாகு முன்பே எம்மைக் குறித்து எல்லாம் வல்ல இறைவன் அனைத்தையும் முன்கூட்டியே குறித்து வைக்கின்றார் என்ற உண்மையும் எமக்கு வேறுவிதமாகப் படிப்பிக்கப்படுவதனை நாம் கண்டுணரலாம் என்பது தெளிவாகின்றது.

எமது பிறப்பு எவ்வாறு அமையுமென்பது முன்னரே தெரிவதில்லை. இன்றைய நவீன விஞ்ஞானம் பலவாறு தெரிவித்தாலும், தமக்கு எவ்வாறான குழந்தை பிறக்குமென பெற்றோருக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. ஆயினும், ஒவ்வொரு மங்கையரும் தமது கர்ப்ப காலத்திலேயே, அன்பும், பாசமும் நிறைந்த தியாகத்தோடு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறேன் என்பதனை தெரிந்து கொள்கின்றனர்.

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையாலும் பெண்களுக்கு அன்னை என்ற முகவரி மட்டுமல்ல, பெண்மையின் முழுமையான தாய்மை என்ற உயர்நிலையும் இயல்பாக கிடைக்கிறதென பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறே, எமது பிறப்பிற்கு இறைவனே காரணமாக இருந்தாலும், எதுவுமே எமது கையில் இல்லாத நிலையில், எமது அன்னையரால் இந்த உலகம் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதனை எவருமே மறுக்க முடியாது.

எமது மனித வாழ்வில் அன்னை எனப்படுபவள் முக்கிய உயர் நிலையைப் பெறுவது போன்றே என்றுமே தூய கன்னி அன்னை மரியாளும் எல்லாம் வல்ல இறைவனின் மீட்புத் திட்டத்தில் “பெண்களுக்குள் ஆசீர் பெற்றவளாக“த் தேர்ந்தெடுக்கப்பட்டு “இதோ உமது அடிமை" (லூக். 1 : 38) எனத் தம்மையே தாழ்த்தியதால், எல்லாம் வல்ல கடவுளால் உலக மீட்பராம் இயேசுவிற்கு மனித உருக்கொடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எமது விசுவாசமாகும்.

தமது சாயலாகப் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் புதுவாழ்வு கொடுப்பவர் எல்லாம் வல்ல கடவுளாகினும், எல்லா அன்னையரின் உதரத்திலும் குழந்தையாகக் கடவுள் பிறக்க முடியாது. இதற்காகவே, என்றுமே தூய கன்னி அன்னை மரியாளைத் தேர்ந்தெடுத்தார் என்ற உணமையை நற்செய்தி ஏடுகள் சான்று பகருகின்றன. எனவே, என்றுமே தூய கன்னி அன்னை மரியாள் எல்லாம் வல்ல கடவுளின் பார்வையில் விலைமதிப்பேறப் பெற்றவர் என்பது நிறைவாகிறது.

எமது கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாச அடிப்படையில் என்றுமே தூய கன்னி அன்னை மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, இறைவனின் பார்வையில் விலை மதிப்பேறப்பெற்றவள். அதே அன்னை “நாமே ஆமல உற்பவம்‘‘ எனத் தம்மை எமக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்ல, எமது சதாலாகாயத் தாயாக, எமது மீட்பின் அன்னையாக எமக்குத் தரப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இறைவனின் தாய் என்ற பெருவிழாவை நாம் கொண்டாடி மகிழ்வது முற்றிலும் பொருத்தமானதால், வருடத்தின் முதல் நாளில் மட்டுமல்ல, எந்நாளிலும் இரக்கத்தின் இறைவனான இயேசு ஆண்டவரிடம் இரந்து மன்றாட அன்னை மரியாளின் பரிந்துரையை விசேடமாக வேண்டி நிற்போம்! ஆமென்