சீனாவில் வளரும் அதிசய மூங்கில் மரம்:
மூங்கில் நாடு என்று அழைக்கப்படுகின்ற சீனாவில் ‘மோசோ’ (Moso Bambo) என்ற ஒருவகையான மூங்கில் மரம் உள்ளது. இந்த மூங்கில் மரம் வருகின்ற விதமே வியப்புக்குரியது. நிலத்தில் ஊன்றப்படும் இந்த வகையான மூங்கிற்செடி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாளுக்கு இரண்டரை அடி வீதம், ஆறு வாரங்களில் தொண்ணூறு அடி வளர்ந்து நிற்கும்.
ஆறு வாரங்களில் தொண்ணூறு அடி வளரக்கூடிய இந்த மோசோ மூங்கில் மரம், ஐந்து ஆண்டுகளாக அப்படி என்ன செய்துகொண்டிருக்கும் என்ற கேள்வி எழலாம். இதற்கு அவர்கள் சொல்லக்கூடிய செய்தி, ஐந்து ஆண்டுகள் அது தன் வேர்களை நிலத்தில் ஆழப் பதித்துப் பொறுமையாகப் இருக்கும். அதனால் அது ஐந்து ஆண்டுகள் கழித்து, ஆறே வாரங்களில் தொண்ணூறு அடிக்கு மிக வேகமாக வளர்ந்து விடும்.
மோசோ என்ற இந்த மூங்கில் மரம் வளர்கின்ற விதத்தைக் குறித்து அறியும்பொழுது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஆம், கடவுள் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளார். அதைத்தான் மோசோ மூங்கில் மரமும், இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலும் எடுத்துக்கூறுகின்றன. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுள் படைத்த இந்த உலகு எத்துணை அழகானது; கடவுள் எத்துணை மேன்மைமிக்கவர் என்பன பற்றி எடுத்துச் சொல்லும் திருப்பாடல் 104, தொடக்க நூல் முதல் அதிகாரத்தை நிறையவே ஒத்திருக்கின்றது. இத்திருப்பாடல், கடவுள் தான் செய்த ஒவ்வொன்றையும் ஞானத்தோடு செய்துள்ளார் என்பதைப் பறைசாற்றுவதாக இருக்கின்றது. திருத்தூதர் புனித பவுல் ஏதென்ஸ் நகரில் இருந்த அரயோப்பாகு மன்றத்தில் பேசும்பொழுதுகூட, இத்திருப்பாடலின் தாக்கம் இருந்ததாகச் சொல்வர் (திப 17: 22-34). ஆம், கடவுள் மேன்மைமிக்கவர். அப்படிப்பட்டவரை நாம் போற்றிப் புகழ்வது மிகவும் பொருத்தமானது.
சிந்தனைக்கு:
கடவுள் தந்த இந்த அழகிய உலகிற்காக நாம் அவரைப் போற்றிப் புகழ்கின்றோமா?
கடவுள் நம் கண்காணிப்பில் கொடுத்திருக்கின்ற இந்த உலகைப் பேணிப் பராமரிக்கின்றோமா?
இயற்கை கடவுளின் ஆடை, அது உயிருள்ளது; கட்புலனாவது – கதே
இறைவார்த்தை:
‘ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது’ (திபா 33: 5) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் தனது பேரன்பால் பூவுலகில் நிறைந்திருக்கின்ற ஆண்டவரையும் அவரது படைப்பையும் அன்பு செய்துவாழ்வோம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.