மரியன்னை பேராலய நேர்ந்தளிப்பு புனித மரியன்னை பேராலயம், ரோம் ***

நாள்: ஆகஸ்ட் 5

வகை: விருப்ப நினைவு

ரோம் நகரில் அன்னை மரியா அடையாளம் காட்டிய இடத்தில், புனித மரியன்னை பேராலயம் நேர்ந்தளிக்கப் பெற்றதை நினைவுகூரும் இந்த திருநாள் ஆகஸ்ட் 5ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.

பின்னணி

ரோம் நகரில் வாழ்ந்த யோவான் என்ற செல்வந்தருக்கு 352 ஆகஸ்ட் 4ந்தேதி காட்சி அளித்த அன்னை மரியா, தம் பெயரில் ஓர் ஆலயம் எழுப்புமாறு கூறினார். அடுத்த நாள் எஸ்குலின் குன்று மீது பனிப் படலம் காணப்படும் இடத்தில் அந்த ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்றும் அன்னை மொழிந்தார். ஆகஸ்ட் 5ந்தேதி அந்த குன்றுக்கு சென்ற யோவான், அன்னை கூறியவாறே பெரும் பனிப்படலத்தைக் கண்டார். இதுகுறித்து திருத்தந்தை லிபெரியுசிடம் தெரிவித்த அவர், தமது செலவில் அங்கு ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். இந்த காட்சியின் நினைவாகவே, இந்நாளில் பனிமய அன்னை திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

வரலாறு

மேற்கண்ட அதே இடத்தில் எபேசு பொதுச்சங்கத்தின் நினைவாக புதிதாய் கட்டப்பட்ட புனித மரியன்னை பேராலயத்தை, கி.பி.439 ஆகஸ்ட் 5ந்தேதி திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ் நேர்ந்தளித்தார். இது திருச்சபையின் தாய் ஆலயம் என்பதால், இதன் நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் வழக்கம் 14ஆம் நூற்றாண்டில் ரோமில் தோன்றியது. திரெந்து பொதுச்சங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 1568ல் திருத்தந்தை புனித 5ம் பியுஸ் இந்த விழாவை திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைத்தார். 1604ஆம் ஆண்டு, இதை இரட்டை நிலை விழாவாக திருத்தந்தை 8ம் கிளமென்ட் உயர்த்தினார். திருத்தந்தை புனித 23ம் யோவான், 1960ல் இதை மூன்றாம் வகுப்பு திருநாளாக மாற்றினார். தற்போது, இது விருப்ப நினைவாக உள்ளது.