புனித சவேரியார் செய்த புதுமை ***

உத்தரிக்கும் ஸ்தலம் -14 : 

இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் நகரத்தில் இயேசு சபையைச் சார்ந்த மர்செல்லூஸ் மஸ்திரில்லி என்கிற குருவானவர் நோயுற்றிருந்த போது கிழக்கிந்திய நாடுகளுக்கு அப்போஸ்தலரான புனித சவேரியார் பரலோகத்திலிருந்து வந்து வெகு ஆனந்தத்தோடும் மகிமையோடும் அவருக்கு பலமுறை தரிசனம் அளித்தார். ஒரு முறை புனித சவேரியார் அநேக ஆன்மாக்களோடு இருந்து அவருக்குத் தோன்றினார்.

வியாதியிலுருந்த அக்குருவானவர் அக்காட்சியை கண்டு புனிதரை நோக்கி “ உம்மோடு கூட வந்திருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு புனித சவேரியார் “ உம் நண்பர்கள் “ என்று பதிலளித்தார். குருவானவர் “ இவர்கள் யாவரும் உத்தரிக்கிற ஸ்லத்து ஆன்மாக்களோ “ என்று கேட்க, அதற்கு புனித சவேரியார் , “ இவர்கள் உம் நண்பர்களாகிய உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள்தான். நீர் வியாதியாய் இருக்கிறபடியால் இந்த ஆன்மாக்கள் உம்மைக் குறித்து மிகவும் துயரப்படுகின்றன. ஏனென்றால் நீர் நன்றாக இருக்கிற போது இந்த ஆன்மாக்களைக் குறித்து ஒப்புக்கொடுத்த திருப்பலிகளால் இவர்கள் மிகவும் பயனடைந்தார்கள், இப்போது நீர் நோயுற்றிருப்பதால் திருப்பலி நிறைவேற்ற முடியாமல் போக இவர்களுக்கும் எவ்வித உதவுயும் கிடைக்கவில்லை “ என்றார்.

குருவானவர் மஸ்திரில்லி “ நான் வேறு குருக்களைக் கொண்டு திருப்பலி ஒப்புக்கொடுத்து கிறிஸ்தவர்களைக் கொண்டு ஜெபங்கள் செய்தால் இவர்களுக்கு பலன்கள் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு புனித சவேரியார் அப்படிச் செய்வதால் இந்த ஆன்மாக்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் “ என்றார்.

இவற்றைக் கூறிய பின் புனித சவேரியாரும் மற்றவர்களும் மறைந்து போனார்கள். மஸ்திரில்லி தாம் இருக்கிற மடத்திலுள்ள குருக்களை ஆன்மாக்களைக் குறித்து திருப்பலி நிறைவேற்றி அவர்களுக்காய் ஒப்புக்கொடுக்கவும், மடத்திலுள்ள மற்றவர்கள் நூற்றைம்பத்து மூன்று மணி ஜெபமாலை ஒப்புக்கொடுக்கவும் வேண்டிக்கொண்டதால் அவர்களும் அவ்வாறே செய்தனர்.

கிறிஸ்தவர்களே ! புனித சவேரியார் பூமியில் வாழ்ந்தபோது உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் பேரில் தமக்குண்டான பக்தியும் இரக்கமும் மற்றவர்களுக்கும் உண்டாகும்படி அடிக்கடி அறிவுறுத்தி மிகுந்த முயற்சி செய்தது மட்டுமின்றி அவர் எந்தெந்த ஊர்களில் இருந்தாரோ அந்த ஊர்களிலெல்லாம் தினந்தோறும் இரவு வேளைகளில் தெரு வீதீகளிலே தாமே சுற்றி மணியடித்துக் கொண்டு அவ்வூர்க் கிறிஸ்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக வேண்டிக்கொள்ளும்படி புத்திமதி சொல்லிவருவார்.

குருவானவர் மஸ்திரில்லி உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவி புரிந்ததால் அவர்கள் நன்றி உணர்வோடு அவருக்காக வேண்டிக்கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுதல்களால் குருவானவருக்கு பெரும் நன்மை கிடைத்தது. புனித சவேரியார் அவருக்கு தரிசனமாகி பெரும் புதுமையாக முழு உடல் நலம் பெற்ற பிறகு அவர் ஜப்பான் நாட்டுக்கு சென்று அங்கே மறைசாட்சியாக மரித்தார். நீங்கள் ( நாம் ) உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு செய்கின்ற உதவிகளால் அவர்களும் உங்களுக்காக வேண்டுதல்கள் புரிவார்கள், நீங்களும் பெரும் பாக்கியம் பெருவீர்கள்..

நன்றி : உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின் புதுமைகள்-52 நூல், ஆசிரியர் டாக்டர் A. ராஜா பிஞ்க்ஞேயிர

உத்தரிக்கும் ஆன்மாக்களை மறவாதீர்கள் நண்பர்களே!!

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !