புத்தாண்டில் புதிய திருப்பம் ***


திருவிழா நாள்: ஜனவரி 1

புலர்ந்துள்ளது புத்தாண்டு!

  அது - காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்

- மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்

- உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம். புத்தாண்டு என்பது என்ன?

மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால் உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும் - புத்தாண்டு என்பது பொருளற்றது!

புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம் தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.

நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு மதிப்பேது?

பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும், மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!

இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நித்தியம் ஒன்றே உண்மை ! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக் கொள்கிறோம் நாம்.

எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?

தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று, ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!

நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள் தரவேண்டும்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக் காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு பெறும்!

தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும் குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப் பசுமையாக்கிக் கொள்வோம்.

கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும் மாளிகை தான் புதிய ஆண்டு,

தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால் நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும் நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப் புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக் கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுக இறுக வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும் இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.

இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால் நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும் நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும் நுழைய முடியவில்லை . அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை. மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும் அனுபவிக்க முடிந்தது.

நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும் நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!

ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன் ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்: “சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து விட்டதா?” இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன பதில்: "அது உன் கையில் இருக்கிறது” புத்தாண்டு எப்படி இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.

“இறைவன் தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை . உனைக் கைவிடுவதும் இல்லை . நீ பயப்படவும் கலங்கவும் வேண்டியதில்லை” (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், “அதோ அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும். இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும்” என்ற இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும். புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.

புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில் வளமை பெருகட்டும்!

(அருட்பணி இ. லூர்துராஜ்)