புத்தாண்டுப் பெருவிழா ***


சொல்லப்பட்டவாறே எல்லாம்!

திருவிழா நாள்: ஜனவரி 1

இன்று நாம் நான்கு திருவிழாக்களை ஒருசேரக் கொண்டாடுகிறோம்:

அ. கிரகோரியன் காலண்டர் படி இன்று ஆண்டின் முதல் நாள் - புத்தாண்டுப் பெருநாள்.

ஆ. கன்னி மரியாள் இறைவனின் தாய் - திருஅவைத் திருநாள்.

இ. கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா - கிறிஸ்து பிறப்பின் எண்கிழமை நிறையும் நாள்.

ஈ. மரியாளும் யோசேப்பும் தங்களுடைய குழந்தைக்கு 'இயேசு' என்று பெயரிட்ட நாள் - இயேசுவின் பெயர் விழா.

இந்த நான்கு திருவிழாக்களையும் இணைக்கும் ஒரு மையக்கருத்தை எண்ணிப்பார்ப்பது கடினமாகவே இருந்தது. இருப்பினும், இன்றைய நற்செய்தியில் வரும் ஒரு வாக்கியம் இந்த வேலையை எளிதாக்குவதுபோல இருக்கிறது:

'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது' - என்று கிறிஸ்து பிறப்பு நிகழ்வை நிறைவு செய்கிறார் லூக்கா.

யார் இந்த 'அவர்கள்'? - இடையர்கள்.

என்ன சொல்லப்பட்டது?

- 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்'

இந்த இடையர்கள் 'தாவீதின் ஊர்' என்றால் 'பெத்லகேம்' என்பதை எப்படி அறிந்தார்கள்?

அந்த இரவில் அவர்கள் எத்தனை பேர் வீடுகளைத் தட்டியிருப்பார்கள்?

எத்தனை பேரிடம் விசாரித்திருப்பார்கள்?

திருடர்கள், பொய்யர்கள், அழுக்கானவர்கள் என்று சொல்லப்பட்ட இடையர்களுக்கு எத்தனை பேர் சரியான வழிகாட்டியிருப்பார்கள்?

அவர்கள் எப்படி தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையைக் கண்டுபிடித்தார்கள்?

இவர்கள் தாங்கள் வானதூதர்களிடம் கேட்டதை யோசேப்புக்கும் மரியாவுக்கும் தெரிவித்தபோது (காண். லூக் 2:17) மற்றவர்கள் அதை எப்படிக் கேட்டார்கள் (காண். லூக் 2:18)? அல்லது இந்த இடையர்கள் தாங்கள் சந்தித்த எல்லாரிடமும் இதைப்பற்றியே சொல்லிக்கொண்டே சென்றார்களா?

மெசியாவைத் தேடி வந்த இவர்களின் மந்தைகளை யார் கவனித்துக்கொண்டார்கள்?

இடையர்களின் இறுதி பதிலிறுப்பு இப்படியாக இருக்கிறது: 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது?'

தீவனத் தொட்டியில் கிடந்த குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண அவர்களால் எப்படி முடிந்தது?

இதுதான் நம்முடைய சிந்தனையின் தொடக்கம்.

வலுவற்ற குழந்தையில் மீட்பரையும், மெசியாவையும், ஆண்டவரையும் காண வேண்டுமென்றால் பின்வருவனவற்றை அவர்கள் செய்ய வேண்டும்:

1. பயம் களைதல் வேண்டும்:

இடையர்களுக்குத் தோன்றுகிற வானதூதரின் முதல் வார்த்தையே, 'அஞ்சாதீர்கள்!' என்பதுதான். தடைகளைவிட தடைகள்வரும் என்ற பயமே நம்மை பலவீனமாக்குகிறது. பயம் களைந்தால் மட்டுமே வானதூதரின் செய்தியைக் கேட்க முடியும். பயம் களைந்தால் மட்டுமே கடவுளின் குரலை நாம் கேட்க முடியும்.

2. இதுவரை செய்யாத செயல் ஒன்றைச் செய்ய வேண்டும்:

எழுதல், ஆடுகளை எழுப்புதல், நடத்தல், மேய்த்தல், உண்ணுதல், உணவு தருதல், உறங்குதல் என்று எப்போதும் ஒரே மாதிரி வாழ்ந்த அவர்களுடைய செயலை அவர்கள் மாற்றுகின்றனர்.

3. மேல் நோக்கிப் பயணம் செய்ய வேண்டும்:

மெசியாவைக் காண வேண்டுமென்றால் ஆடுகளை விட வேண்டும். மேலானவற்றைத் தழுவிக்கொள்ள கீழானவற்றை விட வேண்டும். மேல் படிக்கட்டில் ஏற வேண்டுமென்றால் கீழ்ப்படிக்கட்டிலிருந்து காலை எடுக்க வேண்டும்.

4. மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும்:

'ஆடுகளோடு இருந்தால் ஆடுகளின் வாடைதான் இருக்கும்' என்று அவர்கள் அறிந்ததால், மகிழ்வோடு இருந்த அவர்கள் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியைப் பரப்புகின்றனர். அவர்களின் மகிழ்ச்சியே நற்செய்தி அறிவிப்பாக மாறுகின்றது.

5. இன்று தொடங்க வேண்டும்:

தங்களுடைய பயணத்தை அவர்கள் தள்ளிவைக்கவில்லை. 'உடனே' புறப்படுகின்றனர். வாழ்வின் முக்கியமான முடிவுகள் நேற்று எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு அடுத்து இன்று இப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்கின்றனர் இடையர்கள்.

6. எப்போதும் செயல்பட வேண்டும்:

வாழ்க்கை என்பது செயல்பாட்டில் இருக்கிறதே தவிர ஓய்வில் அல்ல. நாம் நம்முடைய ஓய்வால் அல்ல, மாறாக, நம்முடைய செயல்பாட்டால்தான் வாழ்வை மாற்றவும், மற்றவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியும்.

இந்த ஆறு பண்புகளுமே மரியாளின் தாய்மையிலும் அடங்கியிருக்கின்றன.

இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்' 'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை 'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள் எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும் எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' (லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச் சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம் சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின் தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய் என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.

மரியாளின் தாய்மைக்கு அடிப்படை நம்பிக்கை. 'தனக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நடக்கும்' என்று நம்பினார். இடையர்களின் வருகையைக் கண்ட, அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மரியாள், 'அனைத்தையும் உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கின்றார்.' இங்கே, 'சிந்திக்கின்றார்' என்ற வார்த்தை கிரேக்கத்தில் 'சும்பல்லோ' என்று இருக்கிறது. 'சும்பல்லோ' என்றால் 'அனைத்தையும் கூட்டிச் சேர்ப்பது' அல்லது 'ஒன்றை ஒன்று பொருத்திப்பார்ப்பது' என்பது பொருள். தனக்குச் சொல்லப்பட்டது அனைத்தும் அடுத்தடுத்து நிறைவேறுவதைப் பொருத்திப் பார்க்கிறார்.

இன்று புத்தாண்டிற்கள் நாம் நுழைகின்றோம்.

நமக்குச் சொல்லப்பட்டது என்ன? நமக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் எப்படி நிகழும்?

நமக்குச் சொல்லப்படுவது மூன்று:

அ. ஆசீர் - மக்கட்பேறு, நிலம், உடைமைகள்

ஆ. அருள் - ஆண்டவரின் திருமுக ஒளி

இ. அமைதி - கீறலற்ற மனம்

இவை நம்மில் நடக்கும் என்பதற்கு நம்பிக்கை அவசியம்.

'டோரிஸ் டே' என்ற திரைப்படத்தில், 'கே ஸெரா ஸெரா' என்று ஒரு பாடல் உண்டு.

அதாவது. 'எது நடக்குமோ அது நடக்கும்'

'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்கிறோம்.

இடத்தை நாம் தெரிவு செய்துகொள்ளலாம். காலத்தைத் தெரிவு செய்கிறவர் அவர் ஒருவரே.

அவரின் கரங்களில் நம்முடைய வாழ்க்கை இருக்க நமக்கு கவலை ஏன்?

நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் நகர்வோம்.

ஏனெனில், 'அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்தது.'

நமக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)