இன்றைய புனிதர் - ஜனவரி 5 - புனிதர் சிமியோன் ஸ்டைலைட்ஸ் ***


புனிதர் சிமியோன் ஸ்டைலைட்ஸ்

(St. Simeon Stylites)

வணக்கத்துக்குரிய தந்தை:

(Venerable Father)

பிறப்பு: கி.பி. 390

சிஸ், அதனா மாகாணம், துருக்கி

(Sis, Adana Province, Turkey)

இறப்பு: செப்டம்பர் 2, 459

கலாத் செமான், பைசான்திய சிரியா (அலெப்போ மற்றும் அந்தியோக் ஆகிய இடங்களுக்கு இடையே)

(Qalaat Semaan, Byzantine Syria (Between Aleppo and Antioch)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

ஓரியண்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodox Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் திருச்சபை

(Anglican Church)

நினைவுத் திருநாள்: ஜனவரி 5

புனிதர் சிமியோன் ஸ்டைலைட்ஸ், ஒரு சிரிய நாட்டு துறவி ஆவார். இவர், "அலெப்போ" (Aleppo) (நவீன சிரியா - Modern Syria) எனும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தூணின் மேலுள்ள ஒரு சிறிய மேடையில் 37 ஆண்டுகள் வாழ்ந்து புகழ் பெற்றவர் ஆவார். கிரேக்க மொழியில் "ஸ்டைலைட்ஸ்" (Stylites) என்றால் தூண் என்று அர்த்தமாம். இவரது காலத்துக்கு பின்னால் வந்த பல்வேறு துறவியர், இவரை முன்மாதிரியாகக் கொண்டு, தூண்கள் மீது வாழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். இவரைப் போலவே பெயர் கொண்டிருந்த துறவியரான, "இளைய சிமியோன் ஸ்டைலைட்ஸ்" (Simeon Stylites the Younger), "மூன்றாம் சிமியோன் ஸ்டைலைட்ஸ்" (Simeon Stylites III) மற்றும் "லெஸ்போவின் சிமியோன் ஸ்டைலைட்ஸ்" (Saint Symeon Stylites of Lesbos) ஆகியோரிடமிருந்து இவரை வேறுபடுத்தி காண்பிப்பதற்காக, இவரை "மூத்த சிமியோன் ஸ்டைலைட்ஸ்" (Simeon Stylites the Elder) என்றும் அழைப்பர்.

கால்நடைகளை மேய்க்கும் பணி செய்துவந்த ஒருவரின் மகனான இவர், தற்போதைய துருக்கியின் "அதனா" மாகாணத்திலுள்ள (Adana Province) "சிஸ்" (Sis) எனும் நகரில் பிறந்தார். சிஸ், அக்காலத்திய ரோமப் பிராந்தியமான "சிலிசியாவில்" (Roman province of Cilicia) இருந்தது. கி.பி. 395ம் ஆண்டு, ரோமானியப் பேரரசின் பிரிவினைக்குப் பிறகு, சிலிசியா கிழக்கு ரோம சாம்ராஜ்யத்தின் பாகமாக ஆனது. கிறிஸ்தவம் அங்கே விரைவாக வளர்ந்தது.

"சிர்ஹஸ்" ஆயர் (Bishop of Cyrrhus) "தியோடரேட்" (Theodoret) என்பவரின் கூற்றின்படி, சிமியோன் தமது 13 வயதிலேயே மத்தேயு நற்செய்தியில் மலைப்பிரசங்கத்தில் இயேசுவால் பிரசங்கிக்கப்பட்ட ஒன்பது ஆசீர்வாதங்களைப் (Beatitudes) பற்றி படித்ததன் மூலம், கிறிஸ்தவ சமயத்தில் தமது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். அவர் தமக்கு 16 வயது ஆவதற்கு முன்னரே ஒரு மடாலயத்தில் சேர்ந்தார். சிமியோன் தனது மதத்தில் மிகவும் விசுவாசமுள்ளவராக இருந்தார், அவர் தம் முழு சரீரத்தையும் கடவுளிடம் ஒப்படைத்தார். முதலில், அவர் தம்மை மிகவும் ஒரு தீவிர எளிய வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்திருந்தார். ஆகவே, அவர் எந்தவொரு சமூக வாழ்க்கை முறைக்கும் பொருந்தாதவர் என்று அவரது சகோதரர்களே அவரை தீர்ப்பிட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்கள் சிமியோனை மடாலயத்திலிருந்து வெளியேறும்படி கேட்டார்கள்.

அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, ஒரு தனிமைக் குடிசைக்குள் தம்மை மூடிக்கொண்டார். அங்கே அவர், தவக்காலம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமலும் தண்ணீர் அருந்தாமலும் தவ வாழ்க்கை வாழ்ந்தார். அவர் குடிசையிலிருந்து வெளியேறியபோது, அவருடைய சாதனை ஒரு அற்புதம் என்று பாராட்டப்பட்டது. பின்னர் அவர் தொடர்ந்து நிற்கத்தொடங்கினார்.

ஒன்றரை வருட குடில் வாழ்க்கையின் பிறகு, "சிமியோன் மலையின்" (Mount Simeon) பாகமான "ஷேக் பராகத் மலையை" (Sheik Barakat Mountain) நாடிச் சென்றார். அவர், 20 மீட்டர் விட்டத்துக்கும் குறைவான குறுகிய இடத்தை வாழத் தெரிவு செய்தார். ஆனால், அவருடைய ஆலோசனைகளையும், பிரார்த்தனைகளையும் வேண்டி, பக்தர் கூட்டம் வர ஆரம்பித்தது. அவர் தமது சொந்த செபத்துக்கு நேரமில்லாமல் போனார். இது இறுதியில் அவரை ஒரு புதிய வழிமுறையை பின்பற்ற வைத்தது.

பிரார்த்தனை மற்றும் ஆலோசனைக்காக அவரிடம் வந்திருந்த அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் இருந்து விலகிச் செல்வதற்காக,  அருகே "தெலனிஸ்ஸா" (Telanissa) (நவீனகால சிரியாவில் தலாடா - modern-day Taladah in Syria) எனும் இடத்திலே, இடிபாடுகளில் இருந்து மீண்ட ஒரு தூணை கண்டுபிடித்தார். மற்றும், அதன் மேலே ஒரு சிறிய மேடையை உருவாக்கினார். அவர், இந்த சிறு மேடையில் தனது வாழ்க்கையை வாழ தீர்மானித்தார். அருகிலுள்ள கிராமத்திலிருந்து வசிக்கும் சிறுவர்கள், தூணில் ஏறி, தட்டையான ரொட்டி மற்றும் ஆட்டுப் பால் ஆகியவற்றைப் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இதுபோல அவர் தமது தவ, ஜெப வாழ்க்கையை தொடர்ந்தார்.

புகழ் மற்றும் இறுதி ஆண்டுகள்:

சிமியோனைப் பற்றின தகவல்கள் திருச்சபையின் தலைமை குருக்களையும் அரசவையையும் சென்றடைந்தது. பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ் (Emperor Theodosius II) மற்றும் அவரது மனைவியான "ஏலியா யூடோசியா அகஸ்டா" (Aelia Eudocia Augusta) ஆகியோர் இவருக்கு பெரும் மதிப்பளித்தனர். இவரது ஆலோசனைகளையும் கேட்டனர். சிமியோன் பாரிஸ் நகர புனிதர் ஜெனீவியுடன் (St. Genevieve of Paris) தொடர்புகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருமுறை, சிமியோன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பேரரசர் இரண்டாம் தியோடோசியஸ் மூன்று ஆயர்களை அனுப்பி, அவரை தூணிலிருந்து இறங்கி வந்து மருத்துவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டினார். ஆனால் சிமியோன், தாம் குணமாவதை கடவுளின் கைகளில் விட்டுவிட விரும்பினார். அதுபோல, நீண்ட காலத்திற்கு முன்பே அவர் குணமானார்.

சிமியோன் ஸ்டைலைட்ஸ், தூணின் மீது 37 ஆண்டுகள் வாழ்ந்தார். கி.பி. 459ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இரண்டாம் நாளன்று, அவர் மரித்தார். குனிந்திருந்து உட்கார்ந்து, ஜெபித்த நிலையிலேயே அவர் மரித்ததாக சீடர் ஒருவர் கண்டதாக கூறப்படுகிறது.