ரூஸ்ப் நகர புனிதர் ஃபல்கென்ஷியஸ்
(St. Fulgentius of Ruspe)
மடாதிபதி மற்றும் ஆயர்:
(Abbot and Bishop)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
பிறப்பு: கி.பி. 465
தெலேப்ட், வட ஆப்பிரிக்கா, மேற்கத்திய ரோமப் பேரரசு
(Thelepte, North Africa, Western Roman Empire)
இறப்பு: ஜனவரி 1, 527 அல்லது 533
ரூஸ்ப், வண்டல்ஸ் அரசு
(Ruspe, Kingdom of the Vandals)
நினைவுத் திருநாள்: ஜனவரி 1
புனிதர் ஃபல்கென்ஷியஸ், கி.பி. சுமார் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டு காலத்தில் வட ஆப்பிரிக்காவின் (North Africa) “ரூஸ்ப்” மறைமாவட்ட (Ruspe) ஆயர் ஆவார்.
“ஃபேபியஸ் கிளாடியஸ் கோர்டியானஸ் ஃபல்கென்ஷியஸ்” (Fabius Claudius Gordianus Fulgentius) எனும் இயற்பெயர்கொண்ட இவர், ஒரு சட்டமன்ற மேலவை உறுப்பினர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை "கிளாடியஸ்" (Claudius), இவர் சிறு வயதாயிருக்கும்போதே மரித்துப் போனார். இவரது தாயார் "மரியானா" (Mariana) இவருக்கு கிரேக்கம் மற்றும் இலத்தீன் மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்.
ஃபேபியஸ், மிகச் சிறந்த முறையில் தனது கல்வியை முடித்தார். அதன் பிறகு குடும்ப வாழ்வில் பிடிப்பற்ற இவருக்கு திருப்பாடல் 36ஐ மேற்கோள் காட்டிய "ஹிப்போவின் புனிதர் அகஸ்டீன்" (St. Augustine of Hippo) செய்த பிரசங்கம் இவரைக் கவர்ந்தது.
கி.பி. சுமார் 499ம் ஆண்டு, எகிப்தின் (Egypt) “தேபைட்” (Thebaid) என்ற இடத்திலுள்ள துறவற மடத்தில் இணைய முடிவெடுத்தார். ஆனால், “சிராக்கஸ் நகர ஆயர்” (Bishop of Syracuse) “யூலாலியஸ்” (Eulalius) அறிவுரைப்படி, அதை விடுத்தார். பின்னர், ஏற்கனவே ஆயராயிருந்து, தமது மறைமாவட்டத்திலிருந்து “வண்டல் அரசன்” (Vandal king) “ஹுனேரிக்” (Huneric) என்பவரால் துரத்தப்பட்ட "ஃபௌஸ்டஸ்" (Faustus) தொடங்கிய துறவியர் ஆசிரமத்தில் சேர விண்ணப்பித்தார். ஆனால் ஃபல்கென்ஷியஸின் நலிந்த உடலையும் சோர்வையும் கண்ட "ஃபௌஸ்டஸ்" அவரை சேர்த்துக்கொள்ள தயங்கினார். ஆனாலும் ஃபல்கென்ஷியஸின் தொடர் முயற்சியும், விடாப்பிடியான குணமும் அவரை தமது கண்டிப்பிலிருந்து தளர வைத்தது. அவர் ஃபல்கென்ஷியசை சோதனை அடிப்படையில் தமது மடத்தில் சேர அனுமதித்தார்.
இவரை ஆயராக தேர்ந்தெடுக்க பலமுறை கூறியபோதும், ஒவ்வொரு முறையும் அதற்கிணங்காமல் மறுத்தார். இறுதியாக கி.பி. 508ம் ஆண்டு, வலுக்கட்டாயமாக ரூஸ்ப் நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர், “சார்டீனியா” (Sardinia) தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே, “கக்ளியாரி” (Cagliari) எனுமிடத்திலுள்ள ஒரு வீட்டை துறவு மடமாக மாற்றினார். அங்கேயிருந்தபடி, ஆபிரிக்காவின் கிறிஸ்தவ கல்விக்கு உதவக்கூடிய புத்தகங்களை எழுதினர். கி.பி. 515ம் ஆண்டு, ஆபிரிக்கா திரும்பிய இவர், கி.பி. 520ம் ஆண்டு, மீண்டும் ஆரியர்களால் (Arian clergy) சார்டீனியா தீவுக்கு துரத்தப்பட்டார்.
இவர் மீண்டும் கி.பி. 523ம் ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். பிறகு தொடர்ந்து ரூஸ்ப் நகரில் தனது ஆயர் பணியை ஆற்றினார். ஆயிரக்கணக்கான ஆரிய மத மக்களை கத்தோலிக்க வேதத்திற்கு மனம் மாற்றினார். சிறப்பான முறையில் மறை போதனை செய்த இவர், இறைப்பணியில் சிறந்து விளங்கினார். புனிதர் ஃபல்கென்ஷியஸ், கி.பி. 527 அல்லது கி.பி. 533ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் தேதி, தனது செப வேளையில் இறைவனடி சேர்ந்தார்.