பாசோ PASSO: தோற்றமும், வளர்ச்சியும்

பாசோ என்னும் பதம் போத்துக்கேய மொழியின் அடியிலிருந்து தோன்றியதாகும். கிறிஸ்துவின் பாடுகளைக் குறிக்கும் சில பக்தி முயற்சிகளும், பாடுகளின் நிகழ்வுகளின் பிரதிபலிப்புகளும், இந்தியாவில் கோவா மாநிலத்திலும் ஏனைய பகுதிகளிலும் காட்சியமைப்பாக இடம் பெற்றன. இவற்றைக் குறிக்க பாசோ என்னும் 'பதம்' பயன்படுத்தப் பட்டது. கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் சில காட்சியமைப்பாக உருவங்களைக் கொண்டு உறைநிலை அமைப்பாக இவை ஏற்படுத்தப்பட்டாலும், ஒரு காலத்தில் இவற்றில் மனிதர்களும் பங்குகொண்டிருந்தனர்.

இயேசு சபையினரின் இந்திய வரலாற்று ஆவணப்பதிவாளர் அருட்தந்தை பிரான்சிஸ்கோ டீ சொய்சா என்பவரின் கருத்துப்படி பாசோ என்னும் சடங்குக் காட்சி அமைப்பு வரலாறு கீழ்கண்டவாறு அமைந்தது. புனிதர்கள் இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியார் என்போ ரின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவிற்கு யூபிலி ஆண்டிற்கான சிறப்புச் சலுகை வழங்கப்பட்டபோது இதற்கான ஆயத்தங்களை மேற் கொள்ளும் பொறுப்பு அருட்தந்தை கஸ்பார் பார்சியோ (Gaspar Barzeo) என்பவரிடம் கையளிக்கப்பட்டது.

அடிகளாரின் மறையுரை கோவா மக்கள் பலரையும் வேகமாக மனம் மாற்றியது. இவ்வாறான புதுப்பித்தலையும், பக்தி உணர்வு நிலைமையையும் தொடர்ந்து நிலைநாட்ட பார்சியோ அடிகளார் வருடத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடல்கள், மன்றாட் டுக்களுடன் கூடிய திருப்பவனியையும், ஒருவர் தனக்குத்தானே செய்யும் கசையடி நோன்பையும் அறிமுகம் செய்தார். இதைத் தொடர்ந்து நீண்ட மறையுரையும் இடம்பெற்றது. மறையுரையைத் தொடர்ந்து மெளனமான நிலையில் தியானிப்பதற்கு இடமளிக்கப் பட்டது. இவ்வேளையில் ஒவ்வொருவரும் தமது கடந்தகால வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கப்பட்டனர். மீண்டும் அரைமணித்தியால் மளவில் கிறிஸ்துவின் பாடுகள் பற்றிய மறையுரை ஆற்றப்படும். மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம் வருந்தி, கண்ணீர் சிந்தி, கசையடி நோன்பை மேற்கொண்டனர். இதை ஆரம்பமாகக்கொண்டு மறை யுரைகள், திருப்பாடுகளின் காட்சி அமைப்புக்கள், புனித பவனிகள் தவக்கால பாரம்பரியங்களாகப் பேணப்பட்டு வந்துள்ளன. தவக்கால வார இறுதியில் மறையுரை வழங்கப்பட்டு அதைத் தொடர்ந்து ஆலயத்தினுள் திருப்பாடுகளின் சில காட்சிகள் காண்பிக்கப்படும். திருப்பவனியுடன் வார நிகழ்வுகள் நிறைவடையும்.

இவ்வாறான அமைப்புமுறையை ஆரம்பத்தில் நடைமுறைப் படுத்தும்போது ஏனைய துறவறசபைகளிலிருந்து எழுந்த பல எதிர்ப்புக் களை அருட்தந்தை பார்சியோ அடிகள் எதிர்நோக்கவேண்டி இருந்தது. இம்முறைமையை கடைப்பிடித்ததனால் ஏற்பட்ட பல பயனுள்ள விளைவுகளை விரைவில் அனுபவ வழியாகக் கண்டுகொண்டனர். இதனால் இம்மரபு இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும், ஆசியாவின் வேறு சில நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. பல இடங்களில் இவ்வாறான காட்சியமைப்புகள் பயனுள்ள பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. எனினும் காலக்கிரமத்தில் பல சீர்கேடுகள் இவற்றுள் நுழைந் தன. சீர்கேடுகள் ஆங்காங்கே ஆயர்களினாலும், ஆயர்கள் மன்றத்தி னாலும் நெறிப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு மக்கள் வாழ்வில் பல பயனுள்ள விளைவுகளை அளித்தன.

1775ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக பல காட்சி அமைப்புக் களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. தடைவிதிக்கப்பட்ட காட்சியமைப்பு களாக கீழ்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன. குருத்து ஞாயிறு தினத்தில் கிறிஸ்துவின் உருவத்தைச் சிலுவையினின்று இறக்குவது, சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவத்தில் ஏற்படுத்தும் உபாதைகள், மரியா ளின் உருவத்தை திருப்பவனியாக எடுத்துச்செல்வது, வெரோணிக்கா என்னும் பெண் கிறிஸ்துவின் முகத்தைத் துடைப்பது, பெரிய வியாழன் தினத்தில் கிறிஸ்துவின் இராவுணவை பிரதிபலிக்கும் உருவங்கள், திவ்விய நற்கருணையை பெரிய வெள்ளி தினத்தில் கல்லறை போன்ற இருட்டறையில் வைப்பது, கிறிஸ்துவின் உருவத்தைச் சிலுவையினின்று இறக்குவது, பிலாத்துவினதும், கைபாஸினதும் இல்லங்களைப் பிரதிபலிக்க கிறிஸ்துவின் உடலின் உருவத்தைப் படிகளில் எடுத்துச் செல்வது, கிறிஸ்துவின் உடலின் உருவத்தில் சிவப்பு நிறக்கலவையைத் தெளிப்பது, மண்வெட்டியுடன் காணப்படும் ஆதாமின் உருவம், நூற்கழி யுடன் ஏவாள் உருவம், ஆபிரகாம், ஈசாக்கு உருவங்கள் ஆலயத்திற்கு வெளியே அமைக்கப்படுவது என்பனவாகும்.

மேற்குறிப்பிட்ட காட்சியமைப்புக்கள் தவிர்ந்தவையாக கிறிஸ்து வின் உருவக்காட்சி அமைப்பு மட்டும் பொதுவாக கோவாவிலுள்ள எல்லா ஆலயங்களிலும், இந்தியாவின் ஏனைய சில பாகங்களிலுள்ள ஆலயங்களிலும், ஆசியாவின் சில நாடுகளிலுள்ள இவ்வமைப்புக்கள் பாசோ என்னும் பெயரில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளன. தவக் காலத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் பொதுவாக ஞாயிறு அல்லது வெள்ளிக்கிழமைகளில் வாரத்தில் ஒரு நாள் கிறிஸ்துவின் பாடுகள் பற்றிய மறையுரை இடம்பெறும். கிறிஸ்துவின் உருவத்தின் பிரதிபலிப்பு மட்டும் அசையக்கூடிய ஒரு மேடையில் கீழ்வரும் ஒழுங்கில் உறை நிலையில் அமைக்கப்பட்டு ஒரு திரையினால் மறைக்கப்பட்டிருக்கும். பூங்காவனத்தில் கிறிஸ்து, சிறையில் கிறிஸ்து, கிறிஸ்துவிற்குக் கசையடி, முள்முடி தரிப்பு, இதோ மனிதன், சிலுவை சுமப்பது (இது பெரியவெள்ளியில்), சிலுவையில் அறைவது, ஒவ்வொரு அமைபுப் பற்றியும் மறையுரை இடம்பெற்று அதன்பின் குறிப்பிட்ட காட்சி அமைப்பின் முன்னுள்ள திரை அகற்றப்படும். ஒவ்வொரு காட்சி அமைப்பின் பின்பும் திருப்பவனி இடம்பெறும்.

குருத்து ஞாயிறு தினத்தில் கிறிஸ்து சிலுவை சுமக்கும் காட்சி யுடனான அமைப்பு திருப்பவனியாக எடுத்துவரப்படும். பெரிய வெள்ளி தினத்தில் கிறிஸ்துவின் உருவத்தின் அமைப்பு சிலுவையிலிருந்து பக்தியுடன் திரை மறைவில் இறக்கப்பட்டு திருப்பவனியாக எடுத்துச் செல்லப்படும். இவ்விரண்டுநாட் பவனிகளின்போது மரியாவின் திரு உருவமும் எடுத்துச் செல்லப்படும். இப்பவனிகளின்போது இரண்டு நாளும் நீண்ட மறையுரைகள் இடம்பெற்றன. இதுவே Passo - பாசோ என்பதன் ஆரம்பம் ஆகும். பாசோ பக்திச் சடங்கு இலங்கையில் 1609 ஆம் ஆண்டு முதல் 1850 வரையும் இடம்பெற்றமைக்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.